ஒரே ஆண்டில் பாஜக ரூ. 1,300 கோடி நன்கொடை! அப்ப, காங்கிரஸ்? ஆம் ஆத்மி? முழுப் பட்டியல்!
இதுவரை பெரிய நிறுவனங்களிடம் இருந்து தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ள நன்கொடையில் பாஜகவுக்கு மட்டும் 90% நிதி சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற அமைப்பு தேர்தல் பத்திரங் கள் மூலம் நன்கொடை பெற்ற கட்சிகள் குறித்த ஒரு ஆய்வை நடத்தி உள்ளது. அதில் காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளைக் காட்டிலும் பெரிய பெரிய நிறுவனங்களிடம் இருந்து 8 மடங்கு அதிகமான நன்கொடையை பாஜக பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. இதன் அளவு கிட்டத்தட்ட 90% ஆகும்.

ஏறக்குறைய 3,067 காப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து பாஜகவுக்கு மட்டும் சுமார் 610 கோடியே 40 லட்சம் ரூபாய் நன்கொடையாகக் கிடைத்துள்ளது. இது மற்ற எல்லா கட்சிகளை விட மிகப்பெரிய தொகையாகும்.

தேர்தல் பத்திரங்கள் மூலம் காங்கிரஸ் கட்சி 2022- 2023 நிதியாண்டில் ரூ. 171 கோடி நன்கொடை பெற்றுள்ளது. 2021-22 ஆம் ஆண்டு இக்கட்சி ரூ. 236 கோடி பெற்றது. இந்தத் தொகையைவிடக் குறைவான நிதியை 2022-2023 நிதியாண்டில் காங்கிரஸ் பெற்றுள்ளது. அதற்குக் காரணம், அது ஆளும் கட்சியாக இல்லாதது தான்.

இந்திய அளவில் வளர்ந்து வரும் கட்சியாகக் கருதப்படும் ஆம் ஆத்மி கட்சிக்கு இந்தத் தேர்தல் பத்திரங்கள் மூலம் இதுவரை ரூ.11.22 கோடி கிடைத்துள்ளது. இந்தப் பணம் இந்தக் கட்சிக்கு 69 நிறுவனங்களிடம் இருந்து கிடைத்துள்ளது.

அதைப்போல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டும் சுமார் ரூ. 2.80 கோடி நன்கொடையாகக் கிடைத்துள்ளது. இந்தத் தொகையை இக்கட்சி 104 பெரிய நிறுவனங்களிடம் இருந்து பெற்றுள்ளது.

அதாவது சில ஆண்டுகள் முன்னதாக உருவான ஆம் ஆத்மி கட்சி 69 நிறுவனங்களிடம் இருந்து 11 கோடிக்கு மேல் நிதியைப் பெற்றுள்ள நிலையில் இந்தக் கம்யூனிஸ்ட் கட்சியால் 104 நிறுவனங்களிடம் இருந்து வெறும் 2 கோடியே 80 லட்சம் ரூபாயைத்தான் நன்கொடையாகப் பெற முடிந்துள்ளது.

இந்தக் கட்சியுடன் ஒப்பிடுகையில் மேகாலயாவைச் சேர்ந்த தேசிய மக்கள் கட்சியானது வெறும் 8 நிறுவனங்களிடம் இருந்து சுமார் ரூ. 1 கோடியே 30 லட்சத்தை நன்கொடையாகப் பெற்றுள்ளது.

இதில் அரசில் கட்சிகளுக்கு அதிக நிதியை அளித்துள்ள நிறுவனங்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவை என்ற பட்டிலும் கிடைத்துள்ளது. அதிகப்படியான நன்கொடையை டெல்லியைச் சேர்ந்த நிறுவனங்கள் அளித்துள்ளன. அடுத்ததாகக் குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

இப்படி நன்கொடை வழங்கும் நிறுவனங்கள் 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வழங்கினால், அதற்கான நன்கொடை விவரங்களைத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் 84% பெரிய நிறுவனங்கள் 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை வழங்கி இருக்கின்றன என்ற விவரம் இப்போது வெளியாகி உள்ளது.

தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட வருடாந்திர தணிக்கை அறிக்கையின் படி, ஆளும் கட்சியான பாஜக 2022-23 நிதியாண்டில் மட்டும் தேர்தல் பத்திரங்கள் மூலம் கிட்டத்தட்ட ரூ. 1,300 கோடியைப் பெற்றுள்ளது.

2022-23 நிதியாண்டில் மட்டும் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற நன்கொடை ரூ. 2120 கோடியாக உள்ளது. அதில் 61% தேர்தல் பத்திரங்கள் மூலம் வந்துள்ளன என்று ஒரு புள்ளிவிவரத்தை பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதாவது பாஜக 2021-22 நிதியாண்டில் மட்டும் பெற்ற நன்கொடை ரூ. 1917 கோடியாக இருந்தது. அதே 2022-23 இல் அந்தக் கட்சியின் மொத்த வருமானம் ரூ. 2360.8 கோடி.
2021-22 ஆம் நிதியாண்டில் ஈட்டிய ரூ. 135 கோடியை விட, கடந்த நிதியாண்டில் ரூ.237 கோடியை வட்டி மூலம் பாஜக ஈட்டியுள்ளது. தேர்தல் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளின்படி, விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்த பாஜக செலவு செய்த தொகை ரூ. 78.2 கோடி. 2021-22இது 117.4 கோடியாக இருந்துள்ளது.

சமாஜ்வாதி கட்சி அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி 2021-22 நிதியாண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ. 3.2 கோடி சம்பாதித்தது. 2022-23 நிதியாண்டில், எந்த நன்கொடையையும் பெறவில்லை.

தெலுங்கு தேசம் கட்சியானது, 2022-23இல் ரூ. 34 கோடியைப் பெற்றுள்ளது. இது முந்தைய நிதியாண்டில் பெற்ற தொகையை விட 10 மடங்கு அதிகமாகும்.












Click it and Unblock the Notifications