10 ஆண்டுகள் மோடி ஆட்சி! பண மதிப்பிழப்பு To அக்னிவீர் வரை.. சில அதிரடி நடவடிக்கைகள்!
சென்னை: மேக் இன் இந்தியா முதல் சந்திரயான் 3 வரை கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் மோடி அரசு செயல்படுத்திய அதிரடியான திட்டங்கள் என்ன? அதனால் ஏற்பட்ட விளைவுகள் என்ன?
இந்த முறை பாஜகவுக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 240 தொகுதிகளில் தான் அந்தக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. என்.டி.ஏ கூட்டணிக்கட்சிகளுடன் மொத்தமாகச் சேர்த்தால் 290 சீட்டுகள் கிடைத்துள்ளன.

பெரும்பான்மைக்கு 272 தொகுதிகள் வேண்டும். அப்போதுதான் நிலையான ஆட்சிக்கு உத்தரவாதம் கிடைக்கும். பாஜக நினைக்கும் திட்டங்களை எல்லாம் நிறைவேற்ற முடியும்.
ஆனால், இந்த முறை எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆகவே கூட்டணிக் கட்சிகளின் உதவியுடன் கூட்டணி ஆட்சியை அமைக்கிறார் மோடி. இனி, தங்களின் கொள்கையை பாஜக திட்டங்களாக செயல்படுத்த முடியாது.
என்.டி.ஏ கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் உதவி இல்லாமல் திட்டங்களை நிறைவேற்ற முடியாது. இது பாஜக ஆட்சிக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாகப் பார்க்கப்படுகிறது.
இத்தனை நெருக்கடிகளை எல்லாம் தாண்டி மீண்டும் 3 ஆவது முறையாக இந்தியப் பிரதமராக மோடி வருகின்ற 9 ஆம் தேதி பதவியேற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதற்கு முன்னதாக அவர் வரும் 8 ஆம் தேதி பதவியேற்க உள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால், அந்தத் திட்டம் மாற்றப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
இதற்காக ஆந்திர மாநில முதல்வராகப் பதவியேற்க இருந்த சந்திரபாபு நாடு தனது பதவியேற்பு விழாவை ஒத்திவைத்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.
மோடியின் பதவியேற்பு விழாவில் வேறு சில நாடுகளின் தலைவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்க உள்ளனர். பங்களாதேஷ், இலங்கை, நேபாளம் ஆகிய நாட்டுத் தலைவர்கள் பங்கேற்க உள்ளதாகத் தெரிகிறது. கூடவே என்.டி.ஏ கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
எப்படிப் பார்த்தாலும் இந்த முறை மோடியின் பதவியேற்பில் அதிக தடபுடல் நிகழ்ச்சிகள் இருக்காது என்றே கூறப்படுகிறது. காரணம், அக்கட்சி தனது கோட்டையாகக் கருதப்பட்ட மாநிலங்களில் செல்வாக்கை இழந்துள்ளது.
இதற்கு எல்லாம் பாஜக கடந்த 10 ஆண்டுகளில் கொண்டுவந்த அதிரடியான திட்டங்கள்தான் என்ற ஒரு கருத்து நிலவுகிறது.
குறிப்பாகச் சொன்னால் அக்னிவீர் திட்டம் பீகார் போன்ற வடமாநில இளைஞர்களை மிகக் கடுமையாகப் பாதித்துள்ளது. ஆகவேதான் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இதனைத் திரும்பப் பெறுவோம் என்று தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்திருந்தது.
அதன் தொடர்ச்சியாகத்தான் என்.டி.ஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள நிதிஷ்குமார், இந்த அக்னிவீர் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று பிரதமராகப் பதவியேற்க உள்ள மோடியிடம் நிபந்தனை வித்துள்ளார் என்று தகவல்கள் கசிந்து வருகின்றன.
இப்படி, பாஜக கடந்த காலங்களில் செயல்படுத்திய பல திட்டங்கள் மீண்டும் திரும்பப் பெறவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக விவசாயிகள் குறைந்த பட்ச ஆதார விலையை வேளாண்மை பொருட்களுக்கு நிர்ணயம் செய்ய வேண்டும் என போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்தப் போராட்டத்தை மோடி அரசு கண்டுகொள்ளவே இல்லை. இதன் விளைவால் ஹரியானா, ஜார்கண்ட், பஞ்சாப், உபி போன்ற சில மாநிலங்களில் 30 தொகுதிகளுக்கு மேல் பாஜக இழந்துள்ளது.
ஆகவே, அது குறித்து பாஜக அரசுக்குச் சிக்கல் ஏற்படலாம்.
கடந்த 10 ஆண்டுகளில் மோடி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அதிரடியான திட்டங்கள் என்ன? அதற்கான பட்டியல் இதோ:
#2014இல் மேக் இன் இந்தியா திட்டம்
#2015 இல் முத்ரா கடன் திட்டம்
#2016 இல் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் நடைமுறை
#2016 இல் பண மதிப்பிழப்பு
#2017 இல் ஜிஎஸ்ட் அறிமுகம்
#2019 இல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் அறிமுகம்
#2020 இல் தேசியக் கல்விக் கொள்கை அறிமுகம்
#2020 இல் கப்பல் கட்டுதல் மற்றும் பாதுகாப்பு உற்பத்தி மூலம் ஆத்மநிர்பார் பாரதத்தை மேம்படுத்துதல் திட்டம்
#2021 இல் ஜம்மு & காஷ்மீரில் 370 சட்டத்தைத் திரும்பப் பெற்றது
#2022 இல் உலக அளவில் 5வது பெரிய பொருளாதார நாடு
#2022 இல் அக்னிவீர் திட்டம் அறிமுகம்
#2023 அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு
#2023 ஜி20 உச்சி மாநாடு
#2023 சந்திரயான் 3 நிலவில் கால் பதித்தது
இந்தப் பட்டியலில் உள்ள பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாடு மிகப்பெரிய நெருக்கடியைச் சந்தித்தது. கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காகச் செயல்படுத்திய இந்தத் திட்டத்தால் முழுமையாகக் கறுப்புப் பணம் ஒழிக்கப்படவில்லை. திருப்பப் பெறப்பட்ட பணம் கிட்டத்தட்ட 98% ரிசர்வ் வங்கிக்குத் திரும்பிவிட்டதாகத் தரவுகள் கூறுகின்றன. ஆகவே, இதை அமல்படுத்தியதால் பாஜக அரசின் சில பின்னடைவுகளைச் சந்தித்தது.
அதேபோல் தேசியக் கல்விக் கொள்கையும், அக்னிவீர் திட்டமும் மக்களையும் மாநிலங்களின் உரிமையையும் பாதித்தன.












Click it and Unblock the Notifications