லாக் டவுன் தொடருமா முடியுமா - ஜூலை 29ல் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை
ஜூலை 31ஆம் தேதிக்கு பிறகு ஊராடங்கை நீடிக்கலாமா வேண்டாமா என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 29ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தப்போகிறார்.
சென்னை: கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ள சூழ்நிலையில் லாக்டவுனை ஜூலை 31ஆம் தேதிக்குப் பிறகு நீடிக்கலாமா அல்லது முடிவுக்குக் கொண்டு வரலாமா என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 29ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 1.61 கோடி பேரை தொட்டுப்பார்த்துள்ளது. 99 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர் என்றாலும் தினசரியும் பல்லாயிரக்கணக்கானோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இந்தியாவில் லட்சக்கணக்கோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். தமிழ்நாட்டில் 2 லட்சம் பேர் வரை கொரோனா வைரஸ்க்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாத கடைசி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து, மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சில தளர்வுகளுடன், ஜூலை 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கொரோனா வைரஸ் கட்டுப்பட்டாலும் தென் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது. தினசரியும் 7 ஆயிரம் பேர் வரை நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே நோய் தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் ஆகஸ்ட் 2 வரை லாக்டவுன் அமலில் உள்ளது.
இந்த நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா தொற்று நிலவரம், குறித்து சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி மூலம் வரும் 29ஆம் தேதி ஆலோசனை நடத்தப்போகிறார்.
இந்த ஆலோசனைக்குப் பின்னர் தமிழ்நாட்டில் ஊரடங்கை நீட்டிக்கப்படுமா அல்லது தொற்று அதிகம் உள்ள பகுதிகள் தவிர பிற பகுதிகளில் தளர்வுகள் இருக்குமா என்று தெரியவரும்.
பொது போக்குவரத்துக்கு வரும் 31ஆம் தேதி வரை தடை உள்ளது. இதே போல ஞாயிறு தோறும் முழு லாக்டவுன் அமல்படுத்தப்படுகிறது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் முறை அமலில் உள்ளது. இந்த விதிகளில் தளர்வுகள் அறிவிக்கப்படுமா என்று தெரியவரும்.












Click it and Unblock the Notifications