எத்தனை 'தடைகளை' எதிர்கொள்வாரோ அண்ணன் சீமான்? 'இங்கிலாந்து' குடியுரிமை பெற்றவர் பொதுச் செயலாளரா?
சென்னை: லோக்சபா தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து அடுத்தடுத்து 'தடைகளை' எதிர்கொண்டு வருகிறார். தற்போது இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் இந்தியாவில் நடைபெறும் தேர்தலுக்கான வேட்பு மனுவில் நாம் தமிழர் கட்சி பொதுச்செயலாளராக கையெழுத்திட முடியுமா? என்பதுதான் புதிய சர்ச்சை.
தேர்தல் களத்தில் ஒவ்வொரு முறையும் தனித்தே களம் காண்கிறார் சீமான். தற்போதைய லோக்சபா தேர்தலிலும் 40 இடங்களிலும் தனித்தே போட்டியிடுகிறார்.

லோக்சபா தேர்தலில் சீமானுக்கு கரும்பு விவசாயி சின்னம் மறுக்கப்பட்டது. பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தியும் கரும்பு விவசாயி சின்னம் தரப்படவில்லை. தற்போது சீமானுக்கு ஒலி வாங்கி எனப்படும் மைக் (Mike) சின்னம் கொடுக்கப்பட்டுள்ளது. அண்ணன் இடிதாங்கியாக இருக்கும் சீமானுக்கு ஒலிவாங்கி சின்னம் பொருத்தம் என்று சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர் நாம் தமிழர் கட்சி தம்பிகள்.
சின்னம் பிரச்சனை ஓய்ந்த நிலையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள், இந்தியாவில் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மீது உறுதிமொழியேற்று வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். இதுவும் தற்போது சிக்கலாகி உள்ளது. பிரபாகரன் பெயரில் உறுதி மொழி ஏற்ற நாம் தமிழர் வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்படுமா? என்கிற கேள்வியும் எழுந்தது.

இதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் வேட்பு மனுக்களில் கையெழுத்திட்ட பொதுச்செயலாளர் திருமால்செல்வன் குறித்தும் சர்ச்சை வெடித்துள்ளது. திருமால் செல்வன், இங்கிலாந்து குடியிரிமை பெற்றவர்; இந்தியாவில் நடைபெறும் தேர்தலில் இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் பொதுச்செயலாளராக வேட்பு மனுவில் கையெழுத்திட முடியுமா? வேட்பு மனுக்கள் செல்லுமா? என்கிற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதாவது, நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் திருமால் செல்வன் என்பவர் யார் ? அவர் ஒரு மருத்துவர் இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் ஆவார், இந்தியாவில் அங்கீகாரம் கொண்டு இயங்கும் ஒரு கட்சிக்கு இங்கிலாந்தில் குடியுரிமை கொண்ட ஒருவரை சீமான் நியமித்திருக்கிறார் ஏன் ?
இந்திய குடியுரிமை இல்லாத ஒருவர் இந்திய தேர்தல் ஆணையத்தின் கீழ் இயங்கும் ஒரு கட்சிக்கு பொதுச் செயலாளராக பணி செய்ய முடியும் ?
அவர் எப்படி வேட்பாளர்களின் A& B தேர்தல் படிவத்தில் கையெழுத்திட முடியும் ? இது தேர்தல் விதி மீறல் ஆகும் அல்லவா இதை தேர்தல் ஆணையம் உடனடியாக விசாரிக்க வேண்டும் என்பதுதான் சமூக வலைதளங்களில் முன்வைக்கப்படும் கேள்வி. சமூக வலைதளங்களில் முன்வைக்கப்படும் இந்த விமர்சனங்களையும் 'அண்ணன்' சீமான் தடை உடைத்து வெல்வார் என்கின்றனர் நாம் தமிழர் தம்பிகள்.












Click it and Unblock the Notifications