ஓடி வாங்க 12+2 தருகிறோம்... எங்ககிட்ட ஜெயிக்கிற 8 சீட் கன்ஃபார்ம்.. பாமகவுக்கு பாஜக, அதிமுக 'வலை’
சென்னை: லோக்சபா தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தமிழ்நாட்டில் பாமகவை இழுப்பதில் அதிமுகவும் பாஜகவும் அதீதமாக போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அண்ணா திமுக, பாமக, தமாகா ஆகியவை இருந்தன. தேமுதிகவை பாஜக கூட்டணியும் கண்டு கொள்ளாமல் ஒதுக்கியே வைத்திருந்தது.

அதிமுக- பாஜக உறவு முறிவு: ஆனால் திடீரென தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அறிவித்தது. அதேநேரத்தில் தேர்தல் நேரத்தில் எப்படியும் பாஜக அணிக்கு அதிமுக வந்துவிடும் எனவும் கூறப்பட்டது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியோ பாஜகவுடன் கூட்டணியே இல்லை என திட்டவட்டமாக தொடர்ந்து கூறி வருகிறார்.
கூட்டணிக்கு போராடும் அதிமுக, பாஜக: இதனையடுத்து லோக்சபா தேர்தலில் பாஜக, அதிமுக ஆகிய இரு கட்சிகளில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பதில் பாமக, தமாக மற்றும் தேமுதிகவுக்கு தடுமாற்றம் ஏற்பட்டது. பாஜகவும் அதிமுகவும் தங்களது தலைமையில் வலிமையான கூட்டணியை உருவாக்க இந்த 3 கட்சிகளையும் வளைத்துப் போடுவதில் படு தீவிரமாக பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.
பாமக- அதிமுக பேச்சுவார்த்தை: அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான சிவி சண்முகம், திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்துக்கு சென்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து பாமக தரப்பில் அதிமுகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டன. பாமகவின் 4 எம்.எல்.ஏக்கள், எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்புகளில் முடிவாக தற்போதைய நிலையில் பாமகவுக்கு 8 லோக்சபா தொகுதிகள் பிளஸ் 1 ராஜ்யசபா சீட் தருவதற்கு அதிமுக ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திண்டுக்கல் உள்ளிட்ட 8 தொகுதிகளின் பட்டியலையும் கூட பாமகவிடம் அதிமுக கொடுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. பாஜக அணிக்கு செல்வதை விட அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் வெற்றி நிச்சயம் என்கிற கருத்தை ஆழமாக விதைத்திருக்கிறதாம் எடப்பாடி பழனிசாமி தரப்பு.
அள்ளி கொடுக்கும் பாஜக: அதிமுகவுக்கு போட்டியாக பாஜகவும் பாமக தரப்பை இழுத்துக் கொண்டே இருக்கிறதாம். பாஜக கூட்டணிக்கு பாமக வந்தால் 12 லோக்சபா தொகுதிகளுடன் 2 ராஜ்யசபா சீட், மத்திய அமைச்சர் பதவி தருகிறோம்.. ஆகையால் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே பாமக தொடர வேண்டும் என ஆசைவார்த்தை காட்டுகிறதாம் பாஜக. ஆனால் பாமகவுக்கு இதுவரை மத்திய அமைச்சர் பதவி தரவில்லையே என்ற ஆதங்கமும் பாஜக தரப்புக்கு தெரிவிக்கப்பட்டதாம். பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும்; அப்போது நிச்சயம் பாமகவுக்கு 2 ராஜ்யசபா சீட்டும் மத்திய அமைச்சர் பதவியும் தரப்படும் என அழுத்தம் திருத்தமான வாக்குறுதியை தந்துள்ளதாம் பாஜக தரப்பு. இது தொடர்பாக டெல்லி மேலிடத் தலைவர்கள் சிலரையும் பேச வைக்கிறதாம் பாஜக.
திரிசங்கு நிலையில் பாமக: தற்போதைய நிலையில் அதிக தொகுதிகள், மத்திய அமைச்சர் பதவி, ராஜ்யசபா சீட்டுகள் என வாரி வழங்கும் பாஜகவை நம்பிப் போவதா? அல்லது ஆகக் குறைந்த பட்சம் 1 அல்லது 2-ல் வெல்லும் வாய்ப்புடன் கட்சி வாக்கு சதவீதத்தை அதிகரிக்க கூடிய வாய்ப்பைத் தரும் அதிமுகவுடன் கை கோர்ப்பதா? என்கிற திரிசங்கு நிலையில் தீவிரமான ஆலோசனைகளை நடத்துகிறதாம் பாமக தலைமை.












Click it and Unblock the Notifications