அதெப்படி பங்கு ஒவ்வொரு எலக்ஷனுக்கும் காங். விஜயதாரணி பாஜகவுக்கு தாவப் போவதா கொளுத்தி போடுறாங்க?
சென்னை: லோக்சபா தேர்தல் களம் பரபரப்பாகியிருக்கும் நிலையில் இந்த தேர்தலுக்கும் வழக்கம் போல காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. விஜயதாரணி, பாஜகவுக்கு தாவப் போவதாக செய்திகள் ரெக்கை கட்டிப் பறக்கின்றன. சட்டசபை தேர்தலோ, லோக்சபா தேர்தலோ விஜயதாரணி கட்சி மாறப் போவதாக செய்திகள் பரவுவதும் வழக்கமாகிவிட்டதுதான்.
2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக விஜயதாரணி ஊடகங்களில் பேசு பொருளாக இருந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக ஈவிகேஎஸ் இளங்கோவன் பதவி வகித்த தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவரானார் விஜயதாரணி. ஒரு கட்டத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும் விஜயதாரணி தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இளங்கோவன் தம்மை அவதூறாகப் பேசிவிட்டதாக போலீஸ் நிலையத்தில் கூட புகார் கொடுத்தார் விஜயதாரணி. இந்த பஞ்சாயத்தில் விஜயதாரணியின் தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் பதவி பறிக்கப்பட்டது.

அதிமுகவா? தமாகாவா?: 2016 சட்டசபை தேர்தலுக்கு முன்னர் நடைபெற்ற இந்த சம்பவங்களைத் தொடர்ந்து விஜயதாரணி அண்ணா திமுகவுக்கு தாவப் போகிறார் என ஒரு செய்தி பரவியது. இன்னொரு பக்கம், ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தாவுகிறார் எனவும் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. இதற்கேற்ப அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை விஜயதாரணி சந்தித்து பேச அப்புறம் என்ன யூகங்கள் உச்சத்தில் பறந்தன. பின்னர் விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு மீண்டும் எம்.எல்.ஏ.வானார் விஜயதாரணி.
2021-லும் பாஜகவுக்கு போவதாக வதந்தி: 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்னரும் கூட திடீரென விஜயதாரணி, பாஜக பக்கம் தாவப் போகிறார் என செய்திகள் பரவின. அப்போதும் விஜயதாரணி இதனை திட்டவட்டமாக மறுத்திருந்தார். தாம் பாஜக பக்கம் தாவ இருப்பதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வந்த நிலையில் விளக்கம் தந்த விஜயதாரணி, காங்கிரஸை விட்டு பாஜகவில் குஷ்பு இணைவதற்கு காரணங்கள் இருக்கின்றன. நான் குழந்தை பருவம் முதலே காங்கிரஸில் இருந்து வருகிறேன். நான் ஏன் எங்கள் இயக்கத்தை விட்டு போக வேண்டும்? மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனிக் கட்சி தொடங்கிய போது அவரது அலுவலகத்தில் ஜூனியராகத்தான் இருந்தேன். ஆனால் ப.சிதம்பரம் தொடங்கிய கட்சியில் சேரவில்லையே.. ஒவ்வொரு தேர்தலிலும் எனக்கு சீட் தரக் கூடாது; நான் ஜெயிக்கக் கூடாதுன்னு நினைக்கிறவங்க காங்கிரஸ் கட்சிக்குள்ளேயும் பாஜகவினரும்தான் இந்த மாதிரி வதந்திகளை கொளுத்தி போட்டுகிட்டே இருக்காங்க.. நான் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படப் போவது இல்லை என்றார்.
மீண்டும் விஜயதாரணி குறித்து யூகங்கள்: தற்போது 2024 லோக்சபா தேர்தல் களம் பரபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இப்போதும் விஜயதாரணி, பாஜக பக்கம் தாவப் போகிறார்; கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் போட்டியிட சீட் கேட்டுப் பார்த்தார்; காங்கிரஸ் மேலிடம் மறுத்துவிட்டது. இதனால் விஜயதாரணி பாஜக பக்கம் தாவுகிறார்; பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகையின் போது, காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தே விடுவார் விஜயதாரணி என்கின்றன ஊடக செய்திகள். இதனால் மீண்டும் விஜயதாரணியை மையமாக வைத்து புதிய புதிய யூகங்கள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. இந்த முறையும் வழக்கம் போல யூகங்களை வதந்திகளை விஜயதாரணி புறங்கையால் தள்ளிவிட்டு வழக்கம் போல இயங்குவாரா? அல்லது யூகங்களை உண்மையாக்குவாரா? என்பது ஓரிரு நாட்களில் தெரிந்துவிடத்தான் போகிறது. வெயிட்டிங் பார் க்ளைமாக்ஸ்!












Click it and Unblock the Notifications