திருப்பூரில் சுப்பராயன்.. நாகையில் வை.செல்வராஜ் போட்டி.. இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு
சென்னை: வரும் லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 2 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 19 ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியை விரைவுப்படுத்தி உள்ளனர். இன்று தமிழ்நாட்டை பொறுத்தவரை மிகவும் முக்கியமான நாள். ஏனென்றால் இன்றைய தினம் தமிழ்நாட்டில் அரசியலில் பல முக்கிய நகர்வுகள் உள்ளன.

அதாவது தேமுதிக, பாமக கட்சிகள் அதிமுகவுடன் இன்று கூட்டணியை இறுதி செய்ய வாய்ப்புள்ளது. திமுக கூட்டணியை பொறுத்தமட்டில் இன்று காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள், வைகோவின் மதிமுகவுக்கு கொடுக்கும் தொகுதி இறுதி செய்யப்பட உள்ளது. மேலும் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது.
அந்த வரிசையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக உள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக கூட்டணியில் மீண்டும் நாகை, திருப்பூர் தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த முறை இந்த தொகுதிகளில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றிருந்தது. அதனடிப்படையில் மீண்டும் திருப்பூர், நாகை தொகுதிகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான கட்சியின் நிர்வாகக்குழு கூட்டம், சென்னை தியாகராய நகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாநில செயலளார் முத்தரசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அகில இந்திய செயலாளர் நாராயணா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்ல கண்ணு மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் நாகை, திருப்பூர் தொகுதியில் வேட்பாளரை யாரை நிறுத்துவது? என்பது தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த விவாதத்தின்போது 7 பேரின் பெயர்கள் முன்னிலையில் இருந்தன. திருப்பூர் தொகுதிக்கு தற்போதைய எம்பி சுப்பராயன், ஈரோடு மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் பாப்பா மோகன், மாநில துணைச் செயலாளர் பெரியசாமி, ரவி மற்றும் ஸ்டாலின் குணசேகரன் ஆகியோரின் பெயர்களும் பரிந்துரை செய்யப்பட்டன. நாகை தொகுதிக்கு தற்போதைய எம்பி ம செல்வராஜ், மாவட்ட செயலாளர் வை. செல்வராஜ், லெனின் மற்றும் ராஜா ஆகியோரின் பெயர்கள் முன்னிலை பெற்றன.
இதையடுத்து சென்னை தியாகராநகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் இன்றும் 2வது நாளாக நடைபெற்றது. இதில் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டன. அதன்பிறகு மாலை 4 மணிக்கு முத்தரசன் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் ‛‛திருப்பூர் தொகுதியில் சிட்டிங் எம்பி சுப்பராயன் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்தார். அதேபோல் நாகை தொகுதியில் வை செல்வராஜ் போட்டியிடுகிறார்'' எனக்கூறினார். இதன்மூலம் திருப்பூரில் சிட்டிங் எம்பி சுப்பராயனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மாறாக நாகையில் சிட்டிங் எம்பி ம.செல்வராஜுக்கு பதில் மாவட்ட செயலாளர் வை. செல்வராஜ் களமிறக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications