பிரதமர் மோடி ரோடு ஷோவில் விதிமீறல்.. வழக்குப்பதிந்து சென்னை போலீஸ் அதிரடி.. காரணம் இதுதான்
சென்னை: சென்னையில் நேற்று முன்தினம் பிரதமர் மோடி ஒன்றரை கிலோமீட்டர் தூரம் ரோடு ஷோ நடத்திய நிலையில் தேர்தல் நடத்தை விதிமீறியதாக போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழகம் மற்றும் புதச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக தனிக்கூட்டணியாக போட்டியிடுகிறது. இதனால் தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் சீமான் கட்சி என நான்கு முனை போட்டி நீடித்து வருகிறது.

இந்நிலையில் தான் நேற்று முன்தினம் பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக வந்தார். கேரளாவில் இருந்து நேற்று முன்தினம் மாலையில் சென்னை வந்த பிரதமர் மோடி ரோடு ேஷா நடத்தினார்.
பாஜகவின் தென்சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் பி செல்வம், வடசென்னை வேட்பாளர் பால் கனகராஜ் உள்ளிட்டோருக்கு ஆதரவாக பிரதமர் மோடி வாகன பேரணி சென்று வாக்கு சேகரித்தார். சென்னை பனகல் பார்க்கில் இருந்து தேனாம்பேட்டை சிக்னல் வழியாக பாண்டிபஜார் வரை சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவுக்கு பிரதமர் மோடி திறந்த வாகனத்தில் பேரணியாக சென்றார்.
அப்போது சாலையின் இருபுறங்களிலும் பாஜக தொண்டர்கள் நின்று பூக்களை தூவி வரவேற்றனர். மேலும் மோடியை வரவேற்கும் வகையிலான கோஷங்களை எழுப்பினர். அதன்பிறகு நேற்று பிரதமர் மோடி வேலூர் மற்றும் நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பாஜகவின் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசி மகாராஷ்டிரா பறப்பட்டு சென்றார்.
இந்நிலையில் தான் சென்னையில் நடந்த பிரதமர் மோடியின் ரோடு ஷோவில் தேர்தல் விதிமீறல் நடந்ததாக வழக்கப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது நேற்று முன்தினம் நடந்த ரோடு ஷோ சென்னை தியாகராயநகரில் விதிமீறி விளம்பர பதாகைகளை பாஜகவினர் வைத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி தேர்தல் அதிகாரி கொடுத்த புகாரில் மாம்பலம், பாண்டிபஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
தமிழகத்தை பொறுத்தவரை இந்த முறை பாஜக கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தமிழகத்தில் 39 தொகுதிகள் உள்ள நிலையில் பாஜக 19 இடங்களில் களமிறங்கி உள்ளது. கூட்டணியில் உள்ள பாமகவுக்கு 10 இடங்கள், ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 இடங்கள், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு 2 இடங்கள், முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்துக்கு ராமநாதபுரம், ஐஜேகே தலைவர் பாரிவேந்தருக்கு பெரம்பலூர், ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு தென்காசி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் தலைவர் தேவநாதன் யாதவுக்கு சிவகங்கை, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏசி சண்முகத்துக்கு வேலூர் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications