திமுகவுடன் கூட்டணி இல்லை.. காங்கிரசுக்கு கிடைக்கும் தொகுதிகளில் மநீம போட்டி! தினுசா முடிவெடுத்த கமல்
சென்னை: லோக்சபா தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இடம்பெறாதாம்; ஆனால் திமுக கூட்டணியில்னுள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் 2 இடங்களில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுமாம்.. இதுதான் நடிகர் கமல்ஹாசன் கட்சி எடுத்துள்ள புதிய முடிவு என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.
நடிகர் கமல்ஹாசன் ஆகப் பெரிய விஷயங்களை கூட அதிரி புதிரியாக சொல்லக் கூடியவர்தான்.. ஆனால் அதை புரிந்து உள்வாங்கிக் கொள்ள காலம்தான் எடுக்கும். அரசியலிலும் கமல்ஹாசன் அப்படித்தான். பொதுவாக உலக அரசியலில் வலதுசாரி, இடதுசாரி என்கிற இருவகை அரசியல்தான் உண்டு. அதே நேரத்தில் அதிகம் அறியப்படாத ஒன்றாக மையவாத- மய்யவாத அரசியல் ஒன்றும் உண்டு. அந்தப் பக்கமும் இல்லாமல் இந்தப் பக்கமும் இல்லாமல் நட்ட நடு சென்டரில் நிற்கிறவர்களாக தங்களை அடையாளப் படுத்திக் கொள்வார்கள்; தேவைப்படும் போது எந்த பக்கமும் சாய்ந்து கொள்வார்கள். இந்த மய்யவாத கோட்பாட்டையே தமது கொள்கையாகவும் கட்சிக்குப் பெயராகவும் சூட்டியவர்தான் நடிகர் கமல்ஹாசன்.

மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை: அதாவது வலது - இடது என இரண்டு சித்தாந்தங்கள், தங்களது தனித்துவத்தோடும் பகிரங்கமாகவும் உலகளாவிய அரசியல் களமாடி வருகின்றன. வலது சாரிகள், தங்கள் சிந்தனைகளை மட்டுமே புள்ளியாகக் கொண்டும், இடது சாரிகள், தங்கள் செயல்களை மட்டுமே புள்ளியாகக் கொண்டும் செயல்பட்டு, ஒரு சமநோக்கு இல்லாத அரசியலை முன்வைத்தே நம்மை ஆண்டு வருகின்றனர். இவ்விரு துருவங்களின் ஆளுமையின் நடுவே, மக்களுக்கான அரசியல் தொலைந்து போய்விட்டது என்பது உண்மை. மக்களுக்கானத் தேவைகளும், மக்களுக்கான உரிமைகளும் புறந்தள்ளப்பட்டுள்ளன. அரசு அதிகாரிகளின் வெளிப்படைத்தன்மையற்ற செய்கைகளும், அனாயாச வேகத்தில் வளர்ந்திருக்கும் ஊழலும் , அரசியல்வாதிகளின் மெத்தனப் போக்கும், 'முன்னேற்றம் ' என்ற ஒற்றை வார்த்தையைக் காணாமல் போக செய்து விட்டன. இத்தகையத் தடைக் கற்களைத் தகர்த்தெறிய, ஒரு மாறுபட்ட சித்தாந்தம் தேவைப்பட்ட நிலையில், நிலைகுலைந்த அரசியல் இயக்கவியலை சீர் செய்ய கமல்ஹாசனால் மட்டுமே முடியும் என்ற நிலைமை ஏற்பட்டது. அந்த நிலையில் உதித்தது தான் மக்கள் நீதி மய்யம் என்கிறது அந்த கட்சியின் ஆவணம்.
தேசியம், திராவிடம், மய்யம்: இந்தியாவில் தேசிய அரசியல், மாநில அரசியல்.. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தேசிய அரசியல், திராவிட அரசியல். இந்த இரண்டு பக்கமும் நிற்காமல் அனைத்திந்திய அண்ணா திமுக என எம்ஜிஆர் தெறிக்கவிட்டார். அவரைத் தொடர்ந்து தேசியம் திராவிடத்தையும் கட்சிப் பெயரில் இணைத்து வாயடைக்க வைத்தார் விஜயகாந்த். கமல்ஹாசனோ, எந்த சாயமும் தெரியவே கூடாது என்பதற்காக கட்சிப் பெயரையே மக்கள் நீதி மய்யம் என மழுப்பலாகவே வைத்தார்.
தோல்வியை தழுவிய கமல்: 2018-ம் ஆண்டு கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியானது 2019 லோக்சபா தேர்தலில் போட்டியிட்டது. அதேபோல 2021 சட்டசபை தேர்தலையும் எதிர்கொண்டது. இரு தேர்தல்களிலும் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த மக்கள் நீதி மய்யம் பெரும் தோல்வியைத்தான் தழுவியது.
எந்த கூட்டணியில் கமல்?: இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் திமுக ஆதரவு நிலைப்பாட்டை தொடர்ந்து கடைபிடித்து வருகிறார் கமல்ஹாசன். இதனால் தற்போதைய லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியிலேயே கமல்ஹாசன் இணைய வாய்ப்பு என்றும் திமுக அணியில் ஒரு தொகுதி கமல்ஹாசனுக்கு ஒதுக்கப்படும் எனவும் கூறப்பட்டது. ஆனால் இதுவரை திமுக தரப்புடன் கமல்ஹாசன் கட்சி அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
புதுவித நிலைப்பாடு: இந்த நிலையில் திமுக கூட்டணியில் கமல்ஹாசன் நேரடியாக சேர மாட்டாராம்; திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பாராம். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் 2 இடங்களில் மக்கள் நீதி மய்யம் தமது டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடுமாம். அதாவது திமுக கூட்டணியில் இல்லை.. ஆனால் திமுக கூட்டணி ஒதுக்கும் காங்கிரஸுக்கான தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என்கிற கமல்ஹாசன் பேச்சைப் போலவே, கட்சி கொள்கையைப் போலவே ஒருவிதமான நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது என்கின்றன அரசியல் வட்டாரங்கள். என்னமோ போடா மாதவா!












Click it and Unblock the Notifications