திமுக அமைச்சரை உச்சநீதிமன்றம் விளாசியிருக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் மீது மோடி கடும் அட்டாக்
சென்னை: லோக்சபா தேர்தலுக்கான சென்னை பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தமிழ்நாடு அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை உச்சநீதிமன்ற கருத்தை முன்வைத்து அட்டாக் செய்தார்.
தமிழ்நாடு வருகை தந்த பிரதமர் மோடி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற பாஜக கூட்டணிக் கட்சிகள் பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டின் ஆளும் திமுகவை கடுமையாக விமர்சித்தார்.

மேலும் தமிழகத்தின் வளர்ச்சிக்காக அளிக்கப்படும் பணத்தை இந்த மோடி கொள்ளையடிக்க விடமாட்டேன். எந்தப் பணத்தை நீங்கள் கொள்ளை அடிக்கிறீர்களோ, கொள்ளை அடித்திருக்கிறீர்களோ, அந்தப் பணம் வசூலிக்கப்பட்டு தமிழக மக்களுக்காகவே செலவழிக்கப்படும். இது தமிழ்நாட்டு மக்களுக்கான மோடியின் உத்தரவாதம் என்றார் மோடி.
அத்துடன், குடும்ப அரசியல் பற்றி பேசும் கட்சிகள் தங்களது எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்கின்றன. திமுக - காங்கிரஸ் போன்ற கட்சிகள் மட்டும் அல்ல- "இந்தியா" கூட்டணியில் உள்ள பல கட்சிகள், குடும்பத்துக்கே முதல் உரிமை என்கின்றன. காங்கிரஸ், திமுக மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் ஊழலில் ஊறிப்போய் குடும்ப அரசியலில் ஈடுபட்டு வரும் கட்சிகள். "இந்தியா" கூட்டணி கட்சிகளுக்கு லஞ்சம் வாங்குவதை தவிர, ஊழல் செய்வதை தவிர, நாட்டின் கட்டமைப்புகளை கெடுத்து குட்டிசுவராக்குவதைத் தவிர, வேறொன்றும் தெரியாது என்றும் வசைபாடினார் மோடி.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெயரைக் குறிப்பிடாமல், குடும்ப அரசியல் வழிவந்த ஒருவர், அதிகாரத்தின் மிக முக்கியப் பொறுப்பை வகிக்கும் போது நாட்டையும், நாட்டு மக்களையும் அடிமைகளாக கருதுகிறார். அவரது பதவிக்கான கண்ணியத்தையும், மரியாதையையும்கூட அவர் மறந்துவிடுகிறார். உச்ச நீதிமன்றமானது இன்று திமுகவின் அமைச்சர் ஒருவரிடம் கடுமையான கேள்விகளைக் கேட்டுள்ளது. கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையை கொச்சைப்படுத்தி அவர்களது காலில்போட்டு மிதிப்பதும் கூட குடும்ப அரசியல் நடத்துபவர்களின் லட்சியம் அடையாளம் என்றார் பிரதமர் மோடி.
இன்று திமுக குடும்பத்தின் அமைச்சரை உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி கேட்டதை நாம் பார்த்தோம். கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையை மோசமாக அவமதிப்பதும் குடும்ப அரசியல் செய்பவர்களின் குணமாகும். பழக்கமாகும். தனது அகங்காரத்தால் மக்களின் உணர்வுகளை பற்றி கூட கவலைப்படாத ஒருவர் தமிழக அரசின்… pic.twitter.com/YhG2HLEDRO
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March 4, 2024
சனாதன தர்மம் ஒழிப்பு குறித்து பேசியதற்காக பல்வேறு நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகளை ஒரே நீதிமன்றத்துக்கு மாற்ற உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அமைச்சர் பதவி வகிக்கும் போது பின்விளைவுகள் என்ன வரும் என தெரியாமல் பேசக் கூடாது என அறிவுறுத்தல் விடுத்தது. ஆனால் உதயநிதி ஸ்டாலின் தரப்போ, நீதிமன்ற வழக்குகளை நாங்கள் சந்திக்கவே இந்த மனுக்களைத் தாக்கல் செய்திருக்கிறோம் என உச்சநீதிமன்றத்தில் வாதிட்டது. இதனையடுத்து இவ்வழக்கின் விசாரணை மார்ச் 15-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் நேற்று தெரிவித்த கருத்தைத்தான் பிரதமர் மோடி சுட்டிக்காட்டி சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications