மோடி வருகை- பல்லடத்தில் பிப்.26-ல் டிரெய்லர்.. மார்ச் 4-ல் சென்னையில் மெயின் பிக்சர்-குஷியில் பாஜக!
சென்னை: தமிழ்நாட்டுக்கு வரும் 27-ந் தேதி பிரதமர் மோடி வருகை தருகிறார். திருப்பூர் பல்லடம், தூத்துக்குடி குலசேகரன்பட்டினம் நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதனைத் தொடர்ந்து சென்னையில் மார்ச் 4-ந் தேதி நடைபெறும் பிரம்மாண்டமான பாஜக பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக மெகா கூட்டணி அமைக்க முயற்சிக்கிறது. பாஜக எத்தனை தொகுதிகளையும் கூட்டணி கட்சிகளுக்கு வாரி வழங்க தயாராக இருக்கிறது. ஆனால் பாஜகவுடன் கை கோர்க்க பாமக, தமாகா, தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் தயாராக இல்லை என கூறப்படுகிறது. இந்த கட்சிகள் அனைத்தும் அதிமுக கூட்டணி நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கின்றன.

இதனால் கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வியை மறைக்க பிற கட்சிகளின் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களை வளைக்கும் முயற்சிகளை பாஜக படுதீவிரமாக முன்னெடுத்து வருகிறது. காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்த விஜயதாரணி நேற்று டெல்லியில் பாஜகவில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள், காங்கிரஸ் கட்சியின் சில சீனியர்களை வளைக்கவும் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பிப்ரவரி 27-ந் தேதி நடைபெறும் பாஜக பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நடத்திய பாதயாத்திரையின் நிறைவு நிகழ்ச்சியாக நடைபெறும் இப்பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி மதுரையில் தங்குகிறார். இந்த பயணத்தின் போது பாஜக கூட்டணியில் சேர வாய்ப்புள்ள சில கட்சிகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்திக்கக் கூடும். மேலும் தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளுடனும் மோடி ஆலோசனை நடத்துவார் எனவும் கூறப்படுகிறது. இதன் பின்னர் பிப்வரி 28-ல் குலசேகரப்பட்டினம் நிகழ்ச்சியில் மோடி பங்கேற்றுவிட்டு நெல்லையில் நடைபெறும் பாஜக பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார்.
இப்பயணங்களைத் தொடர்ந்து மீண்டும் மார்ச் 4-ந் தேதி தமிழ்நாடு வருகை தருகிறார் பிரதமர் மோடி. சென்னை ஒய்.எம்.சி. மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பாஜக பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார். அன்றைய தினம்தான் பாஜகவின் கூட்டணி இறுதி வடிவம் பெற்று, கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் அந்த மேடையில் மோடியுடன் இணைந்து பங்கேற்பர் என கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு பாஜகவினர் உற்சாகத்துடன் மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications