திமுகவுக்கு எதிராக பாஜகவின் தமிழ்நாடு டயலாக்ஸ் 2022- டிச-9ல் கருத்தரங்கு-பேச்சாளர்கள் யார் தெரியுமா?
சென்னை: திமுகவுக்கு எதிராக தமிழக பாஜகவின் சிந்தனையாளர் பிரிவு நாளை மறுநாள் தமிழ்நாடு டயலாக்ஸ் 2022 என்ற பெயரில் முழுநாள் கருத்தரங்கை நடத்துகிறது. ஒருநாள் முழுவதும் நடைபெறும் இக்கருத்தரங்கில் பல்வேறு வலதுசாரி எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் பங்கேற்க உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தொண்டர்களுக்கு அண்ணாமலை எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இன்று மதங்களைக் கடந்த மாமனிதர், மனங்களை நேசித்த மாண்புக்குரியவர், சட்டமேதை பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாள். இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம், நீதிமன்றங்களில் ஒலித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நாளும் பாரத ரத்னா பாபா சாஹிப் அம்பேத்கர் அவர்களின் புகழ் பாடி கொண்டிருக்கும்.
நான்... என்.... எனது... என்ற தன்னலப் போக்கு இல்லாமல், நாடு.... மக்கள்... பொது... என்ற சமூக நோக்கினால், சமுதாயத்தை முன்னுக்கு கொண்டுவர, அழாமல் செய்த முயற்சிகளால், மறையாது வாழ்ந்து கொண்டிருக்கும் மாமனிதர் சட்டமாமேதை அம்பேத்கர் அவர்கள் அன்பு, அறிவு, ஆற்றல், ஆளுமை மிக்க அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளில் நம் தேசத்தின் கட்டமைப்பிற்கு அவர் ஆற்றியிருக்கும் நற்பணிகளை நன்றியுடன் நினைவு கூர்ந்து வணங்கி மகிழ்கிறேன்.
யாரும்மா அங்க.. உள்ளே வாங்க.. தயங்கி தயங்கி நின்ற மூதாட்டி! தாராளம் காட்டிய திமுக எம்.எல்.ஏ.!

தமிழ்நாடு டயலாக்ஸ் 2022
உங்களுடன் நான் பகிர நினைக்கும் அடுத்த செய்தி, தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் பிரிவின் சார்பாக வரும் வெள்ளிக்கிழமை 09.12 2022 அன்று காலை முதல் மாலை வரை தமிழ்நாடு டயலாக்ஸ் 2022 என்ற பெயரிலே ஒரு சிறப்பான கருத்தரங்கம் நடத்த சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தங்கள் சிந்தனைகளை ஆலோசனைகளை கருத்துக்களை முன்வைப்பதோடு தன் முனைப்பை நிறுத்திக் கொள்ளாமல், செயல் திறன் காட்ட முன் வந்திருகும் நம் கட்சியின் சிந்தனையாளர் பிரிவின் அனைத்து சகோதர சகோதரிகளையும் நான் பாராட்டுகிறேன்.

3,000 பேர் விண்ணப்பம்
மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டுவதற்காகவும், பாரத நாட்டின் மேன்மையை, பண்பாட்டின் அருமையை கலாச்சாரப் பெருமையை எடுத்துரைப்பதற்காகவும், திறனற்ற திமுக அரசின், ஆட்சி அவலங்களை வெளிப்படுத்துவதற்காகவும், நடத்தப்படும் இந்த கருத்தரங்கம், நடத்தப்படுவதற்கு முன்பாகவே மக்களின் நல்லாதரவைப் பெற்றுவிட்டது. காரணம் இந்த விழாவை பற்றிய அறிவிப்பை வெளியிட்ட உடனேயே இதில் கலந்து கொள்ள, நாட்டின் பல பகுதிகளிருந்தும், பலதரப்பட்ட மக்கள் விருப்பம் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புவர்கள் தங்களைப் பற்றிய விவரங்களுடன் இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதுவரை மூவாயிரத்திற்கும் மேற்பட்ட வேண்டுகோள் வரப்பெற்றதால், இட வசதியைக் கருதி, பங்கேற்பவர்களின் இணையதள விண்ணப்பம் நிறுத்திவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சிறப்பு விருந்தினர் தேஜஸ்வி சூர்யா
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா அவர்கள் கலந்து கொள்கிறார். கங்கை காவிரி கலாச்சார சங்கமத்தை பற்றிய அவர் பேச்சை கேட்க பலரும் ஆவலாக இருக்கிறார்கள். சிந்தனையாளர், எழுத்தாளர் அரவிந்தன் நீலகண்டன் திராவிட மாடலின் பகுத்தறிவு பாசாங்கு பற்றி எடுத்துரைக்கிறார். மூத்த பத்திரிகையாளர் கோலாகல ஸ்ரீநிவாஸ் காசியும் தமிழும் குறித்துப் பேசுகிறார். உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சாய் தீபக் திராவிட பிராந்திய திருவிளையாடல்களை எடுத்துரைக்கிறார். தமிழ் திரை உலகில் நடைபெறும் ஒருதலைப் பட்சமான திரை மறைவு வேலைகளை அலசி ஆராய அரசியல் விமர்சகர் ஜே வி சி ஸ்ரீராம், ஊடகவியலாளர் ராஜவேல் நாகராஜன், திரைப்பட இயக்குனர் லட்சுமி ராமச்சந்திரன், எழுத்தாளர், தேசியக் கல்வி நிறுவனத்தின் இயக்குனர் ஸ்ரீகாந்த் கருணேஷ் ஆகியோர் கலந்துரையாடுகின்றனர்.

ரங்கராஜ் பாண்டே
தமிழகத்தின் வளர்ச்சியில் இருக்கும் தடைக்கற்களை அரசியல் விமர்சகர் பி ஆர் சீனிவாசன், கணக்காயர் விமர்சகர் ஸ்ரீராம் சேஷாத்திரி, ஊடகவியலாளர் கார்த்திக் கோபிநாத் எடுத்துரைக்கிறார்கள். மாற்றமா? ஏமாற்றமா? மாறுமா? என்ற தலைப்பில் 2024 ஆம் தேர்தல் குறித்து சாணக்கியா தொலைக்காட்சி இயக்குனர், மூத்த பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டே பேசுகிறார்.

மாவட்டந்தோறும் தமிழ்நாடு டயலாக்ஸ் 2022
வருங்காலத்தில் தமிழகத்தை பாரதிய ஜனதா கட்சி எப்படி எல்லாம் வளமாக்க இருக்கிறது என்பது குறித்த என்னுடைய பார்வையை நானும் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். பாஜகவின் சிந்தனையாளர் பிரிவின் சார்பிலே திட்டமிடப்பட்டிருக்கும் இந்த நிகழ்ச்சி பல்வேறு எதிர்பார்ப்புகளை, எல்லா தரப்பிலிருந்தும், ஏற்படுத்தி இருக்கிறது என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. மக்கள் தாமாக முன்வந்து கொடுக்கும் ஆதரவைப் பார்க்கும் போது, இந்த மகிழ்ச்சி மேலும் இரட்டிப்பாகிறது. கட்சியின் ஒரு பிரிவின் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சியாக இது அமைந்திருந்தாலும் கூட இதிலே பங்கேற்று பேச இருக்கும் பலரும், அரசியல் கலப்பு இல்லாதவர்கள், தங்களுடைய நடுநிலை மாறாது நல்ல கருத்துக்களை மக்கள் முன் எடுத்து வைப்பவர்கள். மக்களையும், அறிஞர் பெருமக்களையும் இணைக்கும் இந்த தமிழ்நாடு டைலாக்ஸ் 2022 நிகழ்ச்சி ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற வேண்டும். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.