கங்குவாவுக்கு வந்த சோதனை.. முக்கிய முடிவெடுத்த படக் குழுவினர்.. என்னனு பாருங்க
சென்னை: சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள கங்குவா படம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. குறிப்பாக படத்தின் பின்னணி இசையில் அதிமாக உள்ள இரைச்சல் குறித்து ரசிகர்கள் பலரும் நெகட்டிவான கருத்துகளைத் தெரிவித்து வந்தனர். இதையடுத்து, படக் குழுவினர் முக்கியமான முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் சிவா இயக்கத்தில், ஞானவேல்ராஜா தயாரிப்பில், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா. இந்த திரைப்படத்தில் திரிஷா, பதானி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

சூர்யா நடித்த படங்களிலேயே மிகவும் பெரிய படம் என்பதாலும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திரைக்கு வரும் சூர்யாவின் படம் என்பதாலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. பிரம்மாண்ட பொருட் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் கதை தற்போது மற்றும் 1070களில் நடப்பது போன்று எடுக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா இந்தப் படத்தில் கங்குவா, பிரான்சிஸ் என்ற இரண்டு கதாப்பாத்திரங்களில் வருகிறார். பான் இந்தியா மார்க்கெட்டை குறிவைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் ஏற்கனவே கடந்த அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவித்திருந்தனர். ஆனால், ரஜினிகாந்த் நடிப்பில் உருவான வேட்டையன் படமும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்தனர்.
ரஜினிகாந்துக்கு மரியாதை செலுத்தும் விதமாக கங்குவா படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பதாக சூர்யா தெரிவித்திருந்தார். இதையடுத்து நவம்பர் 14 ஆம் தேதி கங்குவா படம் ரிலீஸ் ஆகும் என்று அறிவித்தனர். அதேபோல, கங்குவா திரைப்படம் நேற்று வெளியான நிலையில் நெகட்டிவான ரிவியூக்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுள்ளது
பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் காட்சிகள், அதற்காக சூர்யா போட்டுள்ள உழைப்பு எல்லாவற்றையும் ரசிகர்கள் பாராட்டுகிறார்கள். அதேநேரம் இந்த படம் இரு வேறு காலகட்டத்தில் நடப்பதால், கதையை சொல்வதில் உள்ள குழப்பம் இருந்ததாகவும், அதனைத் தவிர்க்க திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம் என்ற கருத்தும் எழுந்துள்ளது.
சமூக வலைதளங்களைத் திறந்தாலே கங்குவா திரைப்படம் குறித்து பொதுமக்கள் புலம்பும் மற்றும் திட்டும் காட்சிகள் அதிர்ச்சிகரமாக உள்ளது. சூர்யாவையும், படக் குழுவினரையும் பலரும் விமர்சித்து வருகின்றனர். கங்குவா படத்தில் கத்திக் கொண்டே இருக்கின்றனர். எதற்கு கத்துகின்றனர் என்றே தெரியவில்லை. கார்த்தி வரும் காட்சிகளை மட்டும் இரண்டு நிமிடங்கள் பார்க்கலாம்.
படம் முழுக்க சூர்யா மற்றும் பின்னணி இசையின் இரைச்சலும் பெரும் தலைவலியை ஏற்படுத்துகிறது என்று ரசிகர்கள் குமுறி வருகின்றனர். இந்நிலையில், திரையரங்கு உரிமையாளர்களிடம் படத்தின் வால்யூமை 2 புள்ளிகள் குறைக்க படத்தின் தயாரிப்பாளர் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications