பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்-நிச்சயம் வருவார்- கறாராக சொல்லும் காங்கிரஸ் பிரமுகர் திருச்சி வேலுசாமி
பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்- அவர் திரும்பி வருவார் என்கிறார் காங்கிரஸ் கட்சியின் திருச்சி வேலுசாமி.
சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்; நிச்சயம் திரும்பி வருவார் என்று காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் திருச்சி வேலுசாமி திட்டவட்டமாக கூறியுள்ளார்.
2009-ம் ஆண்டு இலங்கை ராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையே இறுதி யுத்தம் நடைபெற்றது. இந்த இறுதி யுத்தத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கைவிட்டனர். அப்போது புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகள் பலரும் கொல்லப்பட்டனர். இந்த இறுதி யுத்தத்தில் ஒன்றரை லட்சம் அப்பாவி ஈழத் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.

மேலும் 2009-ம் ஆண்டு மே 18-ந் தேதி இறுதிப் போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மரணமடைந்துவிட்டார் என இலங்கை ராணுவம் அறிவித்தது. நீர்நிலை ஒன்றில் பிரபாகரன் உடலை கைப்பற்றியதாகவும் இலங்கை ராணுவம் தெரிவித்தது. ஆனால் அப்போதே இலங்கை ராணுவம் காட்டுவது பிரபாகரன் உடலை அல்ல என்கிற மறுப்பு குரல்களும் வெளிப்பட்டன.
இருப்பினும் பிரபாகரன் உயிருடனேயே இருக்கிறார்; அவர் கொல்லப்படவில்லை என தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களான பழ.நெடுமாறன், வைகோ உள்ளிட்டோர் கூறி வந்தனர். அதேநேரத்தில் நாம் தமிழர் கட்சியின் சீமான் உள்ளிட்டோர் பிரபாகரன் குறித்து பல்வேறு தகவல்களை பொதுவெளியில் பகிரங்கமாக கூறியது சர்ச்சையாகவும் மாறியது.
இந்நிலையில் திடீரென தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், பிரபாகரன் உயிருடன் நலமுடன் இருக்கிறார்; பிரபாகரன் விரைவில் வெளியே வருவார்; பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதை அவரது அனுமதியுடன் உலகத் தமிழர்களுக்கு அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதேநேரத்தில் நெடுமாறனின் கருத்துக்கு மாறுபட்ட கருத்துகளும் முன்வைக்கப்பட்டன.

பிரபாகரன் இறந்தது உண்மைதான்; டிஎன்ஏ சோதனைகள் ஆதாரங்களாக இருக்கின்றன என்றது இலங்கை ராணுவம். பிரபாகரன் உயிரோடு இருந்தால் மகிழ்ச்சி.. ஆனால் என்னுடன் தொடர்பில் உள்ள விடுதலைப் புலிகள் இதனை உறுதிப்படுத்தவில்லை என்றார் வைகோ. பெற்ற மகனை பலி கொடுத்துவிட்டு தப்பி போகக் கூடியவரா பிரபாகரன்? 15 ஆண்டுகாலம் ஒரு நாட்டில் எதுவுமே பேசாமல் இருப்பவரா? பிரபாகரன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பிரமுகரும் சர்ச்சைக்குரிய நபரான சுப்பிரமணியன் சுவாமியின் முன்னாள் ஆதரவாளருமான திருச்சி வேலுசாமி, பிரபாகரன் மரணம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அதில், பிரபாகரன் கொல்லப்படவே இல்லை என்பதை 14 ஆண்டுகளுக்கு முன்னரே சொன்னேன். பிரபாகரன் உடல் என இலங்கை ராணுவம் காட்டியது அவருடைய உடலே அல்ல. பிரபாகரன் உயிரோடு தப்பி சென்றார் என்பதை அவருக்கு அருகிலேயே இருந்த ஒருவரை சந்தித்த போது உறுதி செய்து கொண்டேன். இப்போது அந்த நபர் ஆஸ்திரேலியாவில் இருக்கிறார். ஆகையால் பிரபாகரன் உயிருடனேயே இருக்கிறார்; பிரபாகரன் நிச்சயம் திரும்பி வருவார் என்றார் திருச்சி வேலுசாமி.












Click it and Unblock the Notifications