ஒன்றரை ஆண்டில் 1 லட்சம் பேருக்கு வேலை.. பெருமிதம் பொங்க கூறிய முதல்வர் மு.க. ஸ்டாலின்
சென்னை: "தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது" என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார்.
தமிழகத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்தது முதலாக இளைஞர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளன. "அதிமுக ஆட்சியில் வேலையில்லாத திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது" என்பதே தேர்தல் பிரச்சாரங்களின் போது மு.க. ஸ்டாலின் முன்வைத்த முக்கிய குற்றச்சாட்டாக இருந்தது.
மேலும், தேர்தல் பிரச்சாரங்களில் பேசுகின்ற போதும், தமிழத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் 90 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என மு.க. ஸ்டாலின் உறுதியளித்திருந்தார். அந்த வகையில், திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து அதிக அளவில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகினறன.

ஒரு லட்சம் பேருக்கு வேலை
அந்த வகையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரியில் தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டுத் துறை சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது: தமிழகத்தில் திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் வேலை கிடைத்துள்ளது.

அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள்
எந்த மாநிலத்தில் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைக்கிறதோ, அந்த மாநிலம் சரியான வளர்ச்சி திசையில் சென்று கொண்டிருக்கிறது என்று அர்த்தம். அந்த வகையிலே, இன்றைக்கு தமிழகத்தில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன. பட்டப்படிப்பு முடிக்காத இளைஞர்களும் வேலைவாய்ப்பு பெற வேண்டும் என்பதற்காக திறன் மேம்பாட்டு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இவ்வாறு வேலைவாய்ப்பை பெருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு முன்னெடுத்து வருகிறது.

234 தொகுதிகளிலும்...
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது என்பதை எண்ணி உள்ளப்படியே நான் மிகவும் மகிழ்சசி அடைகிறேன். இந்த துரணத்தில், தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசனிடம் நான் ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். என்னை தேர்ந்தெடுத்திருக்கக்கூடிய சட்டமன்றத் தொகுதி கொளத்தூர் தொகுதி. அந்த தொகுதியில் நீங்கள் (அமைச்சர்) விரைவில் வேலைவாய்ப்பு முகாம் நடத்த வேண்டும். எனது தொகுதியில் மட்டுமல்ல. தமிழக்ததில் உள்ள 234 தொகுதிகளிலும் வேலைவாய்ப்பு முகாமை நடத்த வேண்டும்.

மாணவர்களுக்கு அறிவுரை
மாணவர்களுக்கு இந்த வேளையில் ஒன்றைக் கூறிக்கொள்கிறேன். படிக்கிற காலத்தில் படிப்பின் மீது உங்கள் முழு கவனத்தையும் செலுத்துங்கள். அவ்வாறு நீங்கள் படித்தால், உங்கள் தகுதிக்கும், திறமைக்கும் ஏற்ற வேலை நிச்சயம் கிடைக்கும் என உறுதியளிக்கிறேன். இந்த வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைக்குமாறு மட்டும் என்னை அழைக்காமல், ஒரு லட்சமாவது பணி நியமன ஆணையை கொடுக்கக்கூடிய வாய்ப்பையும் எனக்கு வழங்கி இருக்கிறார்கள். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி தருகிறது. இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.












Click it and Unblock the Notifications