அரசு நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரித்த கேஸ்.. மனைவியோடு கோர்ட்டில் இன்று ஆஜராவாரா மா. சுப்பிரமணியன்
சென்னை: நில அபகரிப்பு வழக்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா ஆகியோர் மே 23-ம் தேதி குற்றச்சாட்டுப் பதிவுக்காக கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் ஒருவேளை ஆஜராகாவிட்டாலும், குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும் என்றும் சிறப்பு நீதிமன்றம் அறிவித்திருந்தது.. அந்தவகையில், இன்றைய தினம் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை கிண்டி தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சிட்கோ நிலத்தை அமைச்சர் மா.சுப்ரமணியன், சென்னை மாநகர மேயராக பதவி வகித்தபோது தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி அந்த நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக தனது மனைவி காஞ்சனா பெயருக்கு மாற்றி நில அபகரிப்பில் ஈடுபட்டுள்ளதாக பார்த்திபன் என்பவர் போலீஸில் புகார் அளித்தார்.

சிபிசிஐடி வழக்கு பதிவு
அதன்பேரில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா மீதும் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் கடந்த 2019-ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தற்போது சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மீதான குற்ற வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நீதிபதி ஜி. ஜெயவேல் இதனை விசாரித்து வருகிறார்.. தன்மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்திருந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் தள்ளுபடி செய்தது.
அமைச்சரவை கூட்டம்
இதையடுத்து, இந்த வழக்கு கடந்த மாதம் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அமைச்சரவைக் கூட்டம் நடந்ததால் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சார்பில் நேரில் ஆஜராக விலக்கு அளிக்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அதையேற்ற நீதிபதி ஜெயவேல், இந்த வழக்கின் குற்றச்சாட்டுப்பதிவுக்காக அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா ஆகியோர் மே 6-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் பிறப்பித்து உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, கடந்த மே 6ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இருவரும் ஆஜராகவில்லை. அமைச்சர் மா.சுப்பிரமணியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதால் இந்த வழக்கை ஜூன் மாதத்திற்கு தள்ளி வைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
நேரில் ஆஜராக வேண்டும்
அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி, இடைப்பட்ட காலத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தடை உத்தரவு பெற்றால், அந்த நகலை அடுத்த விசாரணையின்போது தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், அன்றைய தினம் அமைச்சர் மா.சுப்பிரமணியம் மற்றும் அவரது மனைவி இருவரும் நேரில் ஆஜராக வேண்டும்.. ஒருவேளை அவர்கள் ஆஜராகாவிட்டாலும் அன்றையதினம் குற்றச்சாட்டுப் பதிவு பதிவு செய்யப்படும்" என அறிவித்து விசாரணையை தள்ளிவைத்தார்.
எனவே இன்று மே 23ம் தேதி வழக்கு விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. அத்துடன் அமைச்சர் மா.சுப்பிரமணியம் மற்றும் அவரது மனைவி காஞ்சனா இருவருமே இன்றைய தினம் நேரில் ஆஜராவார்கள் என்றும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications