பெட்ரோல் குண்டுகள் வீசி.. ஊராட்சி மன்ற தலைவர் சரமாரியாக வெட்டி படுகொலை! சென்னை அருகே பயங்கரம்
சென்னை: காஞ்சிபுரம் மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் நேற்றிரவு மர்ம நபர்களால் மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.
தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை போன்ற குற்றங்களைத் தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும், ஆங்காங்கே சில கொடூர சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கிறது.
இதற்கிடையே சென்னை அருகே அரசியல் பிரமுகர் ஒருவர் மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வெங்கடேசன்
காஞ்சிபுரம் வண்டலூர் அடுத்த கூடுவாஞ்சேரி அருகே உள்ள மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்கெட்ச் (எ) சி.வெங்கடேசன் . 45 வயதான இவர், அரசியல் கட்சி ஒன்றில் இருந்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஊராட்சி மன்ற தேர்தலில், இவர் மாடம்பாக்கம் பகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேலும், இவர் மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வந்தார்.

பெட்ரோல் குண்டு
நேற்றிரவு இவரது செல்போனுக்கு யாரோ அழைத்ததாகக் கூறப்படுகிறது. அந்த ஃபோன் கால் வந்த பிறகு, அவர் ராகவேந்திரா நகர் பாலம் அருகில் சென்றுள்ளனர். அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம கும்பல் முதலில் அவர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்கியுள்ளது. இதைச் சற்றும் எதிர்பார்க்காத அவர், பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதலால் படுகாயமடைந்தார்

சரமாரி தாக்குதல்
உடனே மறைந்திருந்த அந்த மர்ம கும்பல், படுகாயமடைந்த வெங்டேசனை கத்தி, வீச்சரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தலை மற்றும் கழுத்து பகுதிகளில் சரமாரி வெட்டி கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இந்த கொடூர தாக்குதலைத் தொடர்ந்து 6 பேர் கொண்ட அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் வெங்டேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிரிழப்பு
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கொலை நடந்த இடத்திற்கு மணிமங்கலம் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

போலீசார் குவிப்பு
இரவு நேரத்தில் நடந்த இந்தப் படுகொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருக்க அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இது அரசியல் ரீதியாக நடத்தப்பட்ட கொலையா அல்லது சொந்த பகையால் அரங்கேறிய கொலையா என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications