இளநீர் இட்லி, கொய்யா சட்னி .. டாக்டர் சிவராமன் வீட்டு திருமணத்தில் அசத்திய மாதம்பட்டி ரங்கராஜ்
சென்னை: சித்த மருத்துவர் சிவராமனின் மகள் திருமணத்திற்கு மாதம்பட்டி ரங்கராஜ் கைப்பக்குவத்தில் விருந்து பரிமாறப்பட்டது.
சித்த மருத்துவர் சிவராமன் எப்போதும் உடலை பாதுகாக்க வேண்டும். உணவை முறைப்படி உண்ண வேண்டும், பாரம்பரிய உணவு வகைகளை பின்பற்ற வேண்டும் என பல்வேறு அறிவுரைகளை வழங்குவார்.

அதிலும் அவர் எல்லா நிகழ்ச்சிகளிலும் சொல்வது கல்யாண வீடுகளில் சாப்பிடாதீர்கள் என்றுதான்! அப்படிப்பட்ட சிவராமன் வீட்டில் திருமணம்! அந்த திருமணத்தில் விருந்து எப்படி இருக்க வேண்டும்? இதை அழகாக பிடித்துக் கொண்டார் மாதம்பட்டி ரங்கராஜ்! இந்த திருமண விருந்து குறித்து டாக்டர் சிவராமனும் மாதம்பட்டி ரங்கராஜும் விளக்கியுள்ளனர்.
இதுகுறித்து பிஹைண்ட்வுட்ஸ் சானலில் அவர்கள் அளித்த பேட்டி பின்வருமாறு:
டாக்டர் சிவராமன்: கிட்டதட்ட 30 ஆண்டுகளாக உணவு குறித்தே பேசி வருகிறேன். விருந்து என்கிற பெயரில் வாய்க்கு சுவையாக இருக்க வேண்டும் என்பதற்காக அந்த உணவின் இயல்பான குணங்களை இழக்கக் கூடிய தன்மை இந்த நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. நோயை போக்கவும் நோய் வராமல் தடுக்கவும் செய்வதுதான் சாப்பாடு என உலகம் முழுக்க நான் பேசிவருகிறேன்.
அப்படி இருக்கும் போது நான் விருந்து கொடுக்கும் போது அது வெறும் ருசிக்காக இருந்து விட கூடாது என்பதுதான் அடித்தளமாக இருந்தது. பாரம்பரிய உணவுகள், சிறுதானியங்கள், மரபு அரிசி ரகங்கள் உள்ளிட்டவைகளை வைத்து நல்ல விருந்து கொடுக்க ஆசைப்பட்டேன். நான் பத்திரிகை வைத்த இடங்களில் எல்லாம் சாப்பாடு குறித்த கேள்வியும் எதிர்பார்ப்பும் அதிகரித்து இருந்தது.
மாதம்பட்டி ரங்கராஜ்: எங்கள் உணவில் மைதா, வெள்ளை சர்க்கரை, அஜினோமோட்டோ, டால்டா, கலர்ஸ், பிரசர்வேட்டிகளை பயன்படுத்தவே மாட்டோம். ஒரு வீட்டு சாப்பாடு மாதிரியே இருக்கும். தேனும் திணை மாவும் என்று டாக்டர் பேசிய வீடியோவை எங்கள் டீமுக்கு போட்டு காண்பித்தேன். மாப்பிள்ளை சம்பா அரிசியில் சாம்பார் சாதம், வரகு அரிசியில் தயிர் சாதம், வெள்ளை சோளத்தில் உருண்டை சாதம், வெள்ளை சோளத்தில் பனியாரம் செய்தோம்.
சிவராமன்: திருநெல்வேலி பக்கத்தில் கிடைக்கும் மிதுக்கு வத்தலை செய்திருந்தார். இது கோவைக்காய் போல் இருக்கும். ஆனால் அதுவல்ல, நெல்லையில் மட்டுமே கிடைக்கும். சோள மாவு உருண்டை நன்றாக இருந்தது.
ரங்கராஜ்: இந்த திருமணத்திற்கு காய்கறிகளை கூட ஆர்கானிக்காக வாங்கினோம். செக்கில் ஆட்டின எண்ணெய், பசு நெய் ஆகியவற்றை பயன்படுத்தினோம். சிறுவாணி தண்ணீர் 10 ஆயிரம் லிட்டர் கொண்டு வந்தோம். ஒரு கன்டெய்னர் முழுக்க தண்ணீர்தான் வந்தது. திருமண வீட்டில் நாங்கள் என்ன மெனு என்பதை வைத்துவிட்டோம் என்றார்.
அந்த மெனுவில் இளநீர் லிச்சி ஜூஸ், தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல், கருப்பப்பட்டி பாதாம் மைசூர்பா, பனங்கருப்பபட்டி பருத்திப்பால் அல்வா, பனைவெல்லம் ரசமலாய், தென்னங்குருத்து கிரிஸ்பி மில்லட் பால்ஸ், தாமரை தண்டு மஞ்சூரியன், மேதி சப்பாத்தி, இலைகாளான் கறிக்குழம்பு, வெஜ் மட்டன் பிரியாணி, தயிர் பச்சடி, இளநீர் இட்லி, பீர்க்கங்காய் பால் கடைசல், தேங்காய் சட்னி, ரவா பொடி ஆனியன் மில்ட் அடை தோசை, கொய்யா சட்டினி, மல்லி சட்டினி, திருநெல்வேலி சாம்பார், தாளிச்ச சாமை பணியாரம், நிலக்கடலை சட்னி, ராகி இடியாப்பம், பனங்கற்கண்டு தேங்காய்பால், சோள உருண்டை சாதம், வடகம், ராகி களி- வெல்ல பாகு, பிஸிபேலா பாத், மிளகு ரசம், வரகு அரிசி தயிர் சாதம், சுலைமான் டீ, பில்டர் காபி, ஸ்பெஷல் கட் புரூட்ஸ், வெற்றிலை பாக்கு, பீடா, நேச்சுரல் ஐஸ்கிரீம் ஆகியவை பரிமாறப்பட்டன.












Click it and Unblock the Notifications