முதுமை, சிறுநீர் தொற்று, ரத்த அழுத்தம், சுகர் இருக்கு..நீதிமன்றத்தில் 'இழிபேச்சு' ஆர்பிவிஎஸ் மணியன்!
சென்னை: அம்பேத்கர், திருவள்ளுவர் மற்றும் பட்டியல் இனத்தவரை இழிவாக ஒருமையில் விமர்சித்ததால் கைது செய்யப்பட்ட இந்துத்துவா பேச்சாளர் ஆர்பிவிஎஸ் மணியன் தமக்கு சிறுநீர் தொற்று, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத் தலைவரும், விவேக பாரதி அமைப்பின் நிறுவனருமான ஆர்.பி.வி.எஸ். மணியன், கடந்த 11ம் தேதி தி.நகரில் நடைபெற்ற கூட்டத்தில், பாரதியும் விவேகானந்தரும் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். அப்போது திருவள்ளுவர், அம்பேத்கர் மற்றும் பட்டியல் இனத்தவர்கள் குறித்து இழிவாக பேசியதாக மணியன் மீது விசிக கட்சியின் மத்திய சென்னை முன்னாள் மாவட்ட தலைவர் இரா. செல்வம் புகாரளித்தார்.

அதிரடி கைது: இதனடிப்படையில் மணியன் மீது, பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த மாம்பலம் காவல்துறையினர் இன்று காலை அவரை கைது செய்தனர். இதனையடுத்து மணியன் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
போலீஸ் காவல்?: அப்போது மணியனை நீதிமன்ற காவலில் எடுப்பதற்கான மனுவை அரசு வழக்கறிஞர் எம்.சுதாகர் தாக்கல் செய்தார். பின்னர், மணியனிடம் உங்கள் மீதான புகாருக்கு என்ன பதில் கூற விரும்புகிறீர்கள் என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
உடலில் அத்தனை உபாதைகள்: அதற்கு பதிலளித்த மணியன், தாம் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் மேலும் எனது முதுமை மற்றும் உடல்நிலையை கருத்தில் கொள்ள வேண்டும் என கூறினார். மேலும், தமக்கு சிறுநீர் தொற்று, ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளிட்ட உடல் உபாதைகள் உள்ளதாகவும் மணியன் தெரிவித்தார். இதனையடுத்து, வரும் 27ம் தேதி வரை மணியனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
தனியார் மருத்துவனையில் சிகிச்சை: இதனிடையே, மணியனின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் என அவரது வழக்கறிஞர் ஆர்.சி.பால் கனகராஜ் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த நீதிபதி அல்லி கோரிக்கை பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications