அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு- மார்ச் 24-ல் தீர்ப்பு: சென்னை உயர்நீதிமன்றம் பரபர
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கில் மார்ச் 24-ந் தேதி தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம்.
சென்னை: அதிமுக ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு முன்கூட்டியே மார்ச் 22-ந் தேதி விசாரிக்கப்பட்டு மார்ச் 24-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் மார்ச் 26-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனுக்களையும் எடப்பாடி பழனிசாமி அணி பெற்றது. ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் பதவி தேர்தலுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணி வழக்கு தொடர்ந்தது.

ஓபிஎஸ் அணியின் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரித்தது. இன்றைய விசாரணையின் போது அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை இபிஎஸ் அணி நடத்தலாம்; ஆனால் தேர்தல் முடிவை அறிவிக்கக் கூடாது என உத்தரவிட்டார் நீதிபதி குமரேஷ் பாபு.
மேலும் அதிமுகவின் ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு விசாரணை ஏப்ரல் 11-ந் தேதி நடைபெறும் என ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த பிரதான வழக்கின் விசாரணை முன்கூட்டியே மார்ச் 22-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு மார்ச் 24-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்றும் நீதிபதி குமரேஷ் பாபு தெரிவித்தார்.

பொதுக்குழு தீர்மான வழக்கு என்ன?
அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் இரு அணிகளும் இணைந்து கடந்த ஆண்டு ஜூன் 23-ந் தேதி ஒரு பொதுக்குழுவை கூட்டியது. இப்பொதுக்குழுவில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி புதிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை. அதேநேரத்தில் அதிமுக புதிய அவைத்தலைவராக தமிழ் மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் ஏற்றனர். இந்தப் பொதுக்குழுவில் ஒற்றை தலைமைதான் அதிமுகவுக்கு தேவை என இபிஎஸ்-க்கு ஆதரவாக பேச்சுகள் பேசப்பட்டன. இதனால் அதிருப்தி அடைந்த ஓபிஎஸ், அவரது ஆதரவாளர்கள் பொதுக்குழுவில் இருந்து வெளியேறினர். அப்போது ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டன. அத்துடன் ஜூலை 11-ந் தேதி புதிய பொதுக்குழு கூட்டப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
ஜூலை 11 புதிய பொதுக்குழுவில், இபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்; ஓபிஎஸ் உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர்; அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற விதி ரத்து செய்யப்பட்டது.

இந்த ஜூலை 11 பொதுக்குழுவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளின் முடிவில் இபிஎஸ் அணிக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது. இதனை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இம்மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜூலை 11 பொதுக்குழு சட்டப்படிதான் கூட்டப்பட்டது அது செல்லும் என தீர்ப்பளித்தது.
அதேநேரத்தில் ஜூலை 11 பொதுக்குழுவின் தீர்மானங்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் ஓபிஎஸ் அணி வழக்கு தொடர முடியும் எனவும் அனுமதித்தது உச்சநீதிமன்றம். இதனடிப்படையில்தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் அணியின் மனோஜ் பாண்டியன் முதலில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்காத சென்னை உயர்நீதிமன்றம் பதில் மனுக்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு ஏப்ரல் 11-ந் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்திருந்தது. இவ்வழக்கைதான் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் முன்கூட்டியே மார்ச் 22-ந் தேதி விசாரிக்கிறது; இவ்வழக்கில் மார்ச் 24-ந் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது.












Click it and Unblock the Notifications