இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரி வழக்கு- சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை
சென்னை: அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பெஞ்ச் முன்னிலையில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.
Recommended Video
உள்கட்சி மோதலில் ஈடுபட்டுள்ள அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் உறுப்பினரும், ஜே. ஜே. கட்சியின் நிறுவனர் பி. ஏ. ஜோசப் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், அதிமுக பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்றுவதற்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 5000 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக வாரம் இருமுறை வெளியாகும் பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஜூலை 11ம் தேதி பொதுக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களின் ஆதரவை திரட்டுவதற்காக மேலும் ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டி உள்ளார் ஜோசப். கட்சியில் முன்னாள் முதலமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையிலான பிரச்சனை ஜாதி ரீதியிலான பிரச்சனையாக உருவெடுத்து, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவை ஏற்படுத்தி இருப்பதாகவும் மனுவில் சுட்டிக்காட்டி உள்ளார்.
அதனால் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்து, அக்கட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஜூன் 28ம் தேதி மனு அனுப்பியும், எந்த பதிலும் இல்லை என்று மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். தனது மனுவை பரிசீலித்து அதிமுகவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்திருக்கிறார். இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.












Click it and Unblock the Notifications