தமிழக பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் நியமனத்திற்கு எதிராக மனு தள்ளுபடி..சென்னை ஹைகோர்ட் அதிரடி
சென்னை: தமிழக பொறுப்பு டிஜிபி நியமனத்திற்கு எதிராக தொடரப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இவ்விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே யு.பி.எஸ்.சி.-க்கு உத்தரவு பிறப்பித்துள்ளதால், நாங்கள் தலையிட விரும்பவில்லை என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.
தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் கடந்த மாதம் 31ஆம் தேதி ஓய்வு பெற்றார். அவருக்கு தீ அணைப்பு மற்றும் மீட்பு சேவைத் துறையின் தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றதையடுத்து, தமிழகத்தின் சட்டம் ஒழுங்குக்கான புதிய பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் நியமிக்கப்பட்டார்.

பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் வரதராஜ் என்பவர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. தற்காலிக அடிப்படையில் டிஜிபியை நியமிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமனை நியமித்தது சட்டவிரோதம் என்பதால், இதுதொடர்பாக தாக்கல் செய்யப்படவுள்ள மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தனர். இதையடுத்து இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, இவ்விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் நகல் தாக்கல் செய்யப்பட்டது. அதாவது, டிஜிபி பதவிக்கான அதிகாரிகளின் பட்டியல் யு.பி.எஸ்.சி.-க்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் (UPSC) அதை பரிசீலித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், டிஜிபி நியமனம் தொடர்பான பட்டியலை விரைந்து பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே யு.பி.எஸ்.சி.-க்கு இவ்விவகாரத்தில் உத்தரவு பிறப்பித்துள்ளதால், நாங்கள் தலையிட விரும்பவில்லை என்றும், டிஜிபி பொறுப்பு காலியாக இருந்த நிலையில், பொறுப்பு டிஜிபி நியமனத்தை எதிர்த்து மனு தாக்கல் செய்ய முடியாது என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications