கால்நடை மருத்துவ பல்கலை. பேராசிரியரின் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்தது சரியே! ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: குடும்ப பிரச்சினை தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக கூறி, கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பேராசிரியரின் பணி இடை நீக்க உத்தரவை ரத்து செய்தது சரியே என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியராக பணியாற்றி வந்த திருநாவுக்கரசு, கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி பணி ஓய்வு பெற இருந்தார்.

இந்நிலையில் அவரது மருமகள் அளித்த வரதட்சணை கொடுமை புகாரின் அடிப்படையில், பேராசிரியர் திருநாவுக்கரசு, அவரது மகன் உள்ளிட்டோருக்கு எதிராக செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை காரணம் காட்டி, பேராசிரியர் திருநாவுக்கரசுக்கு எதிராக குற்ற குறிப்பாணை பிறப்பித்த பல்கலைக்கழகம், அவரை பணியிடை நீக்கம் செய்து ஓய்வு பெறுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து பேராசிரியர் திருநாவுக்கரசு தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, குடும்ப பிரச்சனை தொடர்பான வழக்கை காரணம் காட்டி பணியிடை நீக்கம் செய்ய முடியாது எனக் கூறி, பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்ததுடன், அவரைப் பணி ஓய்வு அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து பல்கலைக்கழகத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர் சுப்பிரமணியன் மற்றும் ஜி அருள்முருகன் அடங்கிய அமர்வு, பொதுநலன் சார்ந்திருந்தால் மட்டுமே பணியிடை நீக்கம் செய்ய முடியும் என பல்கலைக்கழக விதிகளில் கூறப்பட்டுள்ள நிலையில், குடும்ப பிரச்சினை தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மனுதாரரை பணியிடை நீக்கம் செய்வதில் என்ன பொதுநலன்உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை எனக்கூறி பல்கலைக்கழகத்தின் மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மேலும் மனுதாரருக்கு வழங்க வேண்டிய ஓய்வு கால பலன்களை 12 வாரங்களில் வழங்க வேண்டும் என பல்கலைக்கழகத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications