Kamal Haasan: "கமலின் சங்கை அறுப்பேன்!" கொலை மிரட்டல் விடுத்த நடிகர் ரவிச்சந்திரனுக்கு முன்ஜாமீன்
சென்னை: சனாதனம் குறித்து பேசிய கமல்ஹாசனின் சங்கை அறுப்பேன் என கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய துணை நடிகர் ரவிச்சந்திரனுக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகர ஆணையரகத்தில் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் புகார் அளித்திருந்தனர்.
நடிகர் சிவக்குமார், அவரது மகன்கள் சூர்யா, கார்த்தி உள்ளிட்டோர் அகரம் பவுண்டேஷன் நடத்தி வருகிறார்கள். இதன் மூலம் ஏழை எளிய மக்களை படிக்க வைத்து வருகிறார்கள்.

அகரம் பவுண்டேஷனின் 20ஆவது ஆண்டு விழா கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்தது. இதையொட்டி இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் எம்பி கலந்து கொண்டார்.
அவர் பேசுகையில், இந்த மேடையில் பார்த்த டாக்டரை அடுத்த வருடம் பார்க்க முடியாது. இப்போதைய டாக்டர்கள் மாதிரி அடுத்த ஆண்டு விழாவில் டாக்டர்களை காட்ட முடியுமா? என்பதில் சின்ன சந்தேகம் உள்ளது. ஏனென்றால் 2017க்கு பிறகு இவர்களால் இந்த முயற்சியை தொடங்க முடியவில்லை. இப்போது புரிகிறதா? ஏன் நீட் வேண்டாம் என்கிறோம் என்று.. 2017ம் ஆண்டு முதல் இன்றைய தேதி வரை கல்வி கிடைக்காமல் செய்துவிட்டது இந்த சட்டம்.
இந்த சட்டத்தை மாற்றி எழுதக் கூடிய பலத்தை தருவது கல்வி தான். அந்த கல்வி இந்த போரில் ஆயுதமின்றி நாட்டையே செதுக்க வல்லது. இது சர்வாதிகார சங்கிலிகளை, சனாதன சங்கிலிகளை எல்லாம் நொறுக்கி தள்ளக்கூடிய ஒரே ஆயுதம் இதுதான். இதை தவிர வேறு எதையும் கையில் எடுக்காதீர்கள். அதில் வெல்ல முடியாது. ஏனென்றால் பெரும்பான்மை உங்களை தோற்கடித்துவிடும். பெரும்பான்மை மூடர்கள் உங்களை தோற்கடித்து விடுவார்கள். அறிவு தோற்றுப் போய்விடும்'' என்று பேசியிருந்தார்.
கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு நடிகர் ரவிச்சந்திரன் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் நடிகர் ரவிச்சந்திரன், "சனாதனம் பற்றி பேசிய கமலின் சங்கை அறுப்போம்" என கொலை மிரட்டல் விடுத்திருந்தார். இதனால் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர்.
கமலுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணை தலைவர் மவுரியா உள்ளிட்டோர் ரவிச்சந்திரன் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மாநகர ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர்.
இந்த நிலையில் தனக்கு முன் ஜாமீன் கோரி ரவிச்சந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில், "எந்தவித உள்நோக்கத்துடனும் நான் அவ்வாறு பேசவில்லை என்பதால் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்" என கோரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கு காவல் துறை தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் இன்று இந்த மனு மீது விசாரணை நடத்தப்பட்டது. அப்போது துணை நடிகர் ரவிச்சந்திரனுக்கு, நீதிபதி முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications