ஆர்டர்லி முறையை 4 மாதங்களுக்குள் ஒழிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: ஆர்டர்லி முறையை நான்கு மாத த்திற்குள் ஒழிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவல்துறையில் பணியாற்றும் யு.மாணிக்கவேல் என்பவர் காவலர் குடியிருப்பில் ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்யும்படி அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், உயர் அதிகாரிகள் தங்கள் கீழ் உள்ளவர்களை கட்டுப்படுத்த இயலாவிட்டால், நன்மதிப்பை இழக்கவும் நேரிடும் என தெரிவித்ததுடன், உயர் அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லி, போலீஸ் வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர், போலீசாரின் சொந்த வாகனங்களில் அரசு முத்திரை போன்ற விவகாரங்கள் குறித்தும் விசாரித்தார்.

காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆர்டர்லி களை வைத்திருக்கக் கூடாது என்ற தமிழக உள்துறை செயலாளரின் உத்தரவை செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து டிஜிபி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டிருந்தது. ஆர்டர்லி விவகாரத்தில் தமிழக அரசுத் தரப்பிலும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில்,ஆர்டர்லி முறையை காவல்துறையினர் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. பெரும்பாலான ஆர்டர்லிகளை திரும்ப பெற்றுள்ளதாகவும், மாற்று ஏற்பாடு செய்தவுடன் மீதமுள்ளவர்களும் திரும்பப்பெறப்படுவார்கள் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கபட்டது. காவல்துறை பணி தவிர தனிப்பட்ட பணிகளுக்காக ஆர்டர்லியை பயன்படுத்த மாட்டோம் என அனைத்து ஐ பி எஸ் அதிகாரிகளும் உத்தரதம் அளித்துள்ளதாகவும், டிஜிபி அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். மேலும், டிஜிபி எடுத்துவரும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது என்றும், பாராட்டுக்குரியது என்றும் ,ஆர்டர்லி முறையை ஒழிக்க அரசு உறுதி பூண்டுள்ளது தெரிவதாகவும் நீதிபதி திருப்தி தெரிவித்து,பாராட்டும் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கில் இன்று இறுதி தீர்ப்பளித்த நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம், அரசு உத்தரவாதம் அளித்தபடி ஆர்டர்லி முறையை நான்கு மாதத்திற்குள் ஒழிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
காவல்துறையில் பணியில் இருந்தாலும் உயர் அதிகாரிகளின் வீடுகளில் வீட்டு வேலைகளை செய்வதற்காக ஆர்டர்லிகள் பயன்படுத்தப்படுகின்றனர். இது தொடர்பான விவாதம் நீண்டகாலமாக நடைபெற்ற நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications