டிடிவி தினகரன் 'திவாலானவர்' நோட்டீஸ்- அமலாக்கத்துறை அப்பீல் வழக்கில் ஹைகோர்ட் தீர்ப்பு ஒத்திவைப்பு!
சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திவாலானவர் என நோட்டீஸ் வெளியிட்டதை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்த அமலாக்கத்துறை மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 1995-96 காலகட்டத்தில் வெளிநாட்டில் இருந்து 62.61 லட்சம் ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலரை அங்கீகாரமற்ற முகவர் மூலமாக பெற்றதாகவும், பின்னர் அந்த தொகையை இங்கிலாந்தில் உள்ள நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக மாற்றியதாகவும்
அமமுக பொதுச் செயலாளரான முன்னாள் எம்பி டிடிவி.தினகரன் மீது அமலாக்கத்துறையினர், அன்னியச் செலாவணி ஒழுங்குமுறைச் சட்டம் எனும் ஃபெரா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் கடந்த 1998ம் ஆண்டு டிடிவி. தினகரனுக்கு 31 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை இயக்குநரகம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து டிடிவி. தினகரன் தாக்கல் செய்த மேல் முறையீட்டை விசாரித்த அமலாக்கத்துறை மேல்முறையீட்டு ஆணையம், 31 கோடி ரூபாய் அபராதத்தை, 28 கோடி ரூபாயாக குறைத்து உத்தரவிட்டது.
இந்த அபராதத்தை செலுத்தாததால் டிடிவி.தினகரனை திவாலானவர் என அறிவிப்பது தொடர்பாக அமலாக்கத் துறை பிறப்பித்த நோட்டீசை எதிர்த்து தினகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தினகரனை அவமானப்படுத்தும் நோக்கிலேயே நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறி, அதனை ரத்து செய்து கடந்த 2003ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை தரப்பில் 2005ல் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஆர்.கலைமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, ஃபெரா சட்டத்தின் கீழ் தினகரனுக்கு விதிக்கப்பட்ட 28 கோடி ரூபாய் அபராதத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில், பல ஆண்டுகளாக அதை செலுத்தாமல் காலதாமதம் செய்து வருவதால், அவரை திவாலானவர் என அறிவி்க்கக் கோருவதில் சட்டப்படி எந்த தடையும் இல்லை என விளக்கமளித்தார்.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்த டிடிவி.தினகரன் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.குமார் , திவாலானவர் என அறிவி்க்க அது உரிமையியல் சார்ந்ததாக இருக்க வேண்டும் எனவும், உயர் நீதிமன்றமும் உறுதி செய்துள்ளதால், அபராதத்தை செலுத்தவில்லை என்பதற்காக திவாலானவர் என அறிவிக்கும்படி கோர முடியாது, என வாதிட்டார்.
இந்த வழக்கின் விசாரணை நேற்றும் நடைபெற்றது. இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications