"அதிமுக பொதுச்செயலாளர்" - எடப்பாடி பழனிசாமி “கெத்து” நீடிக்குமா? சசிகலா அப்பீல் மீது இன்று விசாரணை
சென்னை: அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தம்மை நீக்கியது செல்லாது என தொடரப்பட்ட வழக்கில் சசிகலாவின் மேல்முறையீட்டு மனுவை இன்று சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கிறது.
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே பல வழக்குகள் நடைபெற்று ஒருவழியாக அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை உறுதி செய்து கொண்டார் எடப்பாடி பழனிசாமி. இதனை கொண்டாடும் வகையில் அதிமுக பொதுச்செயலாளர் என்ற கோதாவுடன் அண்மையில் மதுரையில் மிக பிரம்மாண்டமான மாநாட்டை நடத்தினார் எடப்பாடி பழனிசாமி.

ஆனால் மதுரை மாநாடு மூலம் பெற்ற கெத்தும் மகிழ்ச்சியும் தொடருமா இல்லையா என்பது இன்று அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கு உரிமை சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனுமீதான விசாரணையில் தெரிய வரும். என்ன வழக்கு இது?
அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா: 2016-ம் ஆண்டு அதிமுக பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமானார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் இடைக்கால முதல்வராக்கப்பட்டார். அத்துடன் அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அப்போது ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இணைந்தே சசிகலாவை அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்தனர்.
சசிகலா முதல்வர் ஆசை: சசிகலா முதல்வராகவும் விரும்பியதால் ஓ.பன்னீர்செல்வம் பதவியை ராஜினாமா செய்தார். அத்துடன் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி தர்மயுத்தம் நடத்தினார். சசிகலா முதல்வராக பதவியேற்க ஏற்பாடுகள் நடந்த நிலையில்தான் சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு வரப் போவதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து சசிகலா, அதிமுக எம்.எல்.ஏக்களுடன் கூவத்தூரில் முகாமிட்டார்.
சசிகலாவுக்கு சிறை, இபிஎஸ்க்கு முதல்வர் பதவி: ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதனால் சசிகலா சிறைக்கு சென்றார். அப்போது எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கி விட்டு சிறைக்குப் போனார் சசிகலா.
அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்: சசிகலா நீக்கம்: சசிகலா பெங்களூர் சிறையில் தண்டனையை அனுபவித்த போது, அதிமுகவில் கலகக் குரல் எழுப்பிய ஓ.பன்னீர்செல்வம் திடீரென எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்தார். 2017-ம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில், அக்கட்சி பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்பட்டார். அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளும் உருவாக்கப்பட்டன.
சசிகலா வழக்கு: சசிகலா தம்மை அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் முதலில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால் சசிகலாவின் இந்த மனு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்திலும் சசிகலா மேல்முறையீடு செய்தார். உச்சநீதிமன்றம் வரை இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விரைவாக முடிவெடுக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இதனடிப்படையில்தான் இன்று சென்னை உயர்நீதிமன்றம் சசிகலாவின் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கிறது.












Click it and Unblock the Notifications