மதுரை அரசு பஸ்சில் ½ கிலோ மல்லிகைக்கு ரூ.13 கட்டணம்.. வேதனையுடன் வீடியோ வெளியிட்ட விவசாயி

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே கேசம்பட்டி, கும்மிட்டாம்பட்டி, பட்டூர், ஆலம்பட்டி, கற்பூரம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் மல்லிகை பூ பயிரிட்டு வருகின்றனர். தங்களுடைய குடும்ப செலவுக்காக சிறிய அளவில் மல்லிகை பூக்களை மேலூரில் விற்பனை செய்து வருகின்றனர். அப்படி ஒரு விவசாயி மேலூர் அருகே அரசு பஸ்ஸில் அரை கிலோ மல்லிகை பூ கொண்டு செல்ல 13 ரூபாய் கட்டணம் செலுத்தி உள்ளார். இது பற்றி அவர் வெளியிட்ட வீடியோ சமூக ஊடகங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை மாவட்டங்களில் மல்லிகைப்பூ விளைச்சல் அமோகமாக இருக்கும். அதிலும் மதுரையை சுற்றிலுமே மல்லிகைப்பூ விளைச்சல் அதிகம். மேலூர் அருகே கேசம்பட்டி, கும்மிட்டாம்பட்டி, பட்டூர், ஆலம்பட்டி, கற்பூரம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் மல்லிகை பூ பயிரிட்டு வருகிறார்கள்.

Madurai Melur government bus route collects 13 fare for kg of jasmine flowers from farmer

இவர்கள் சிறிய அளவில் மல்லிகை பூக்களை மேலூரில் விற்பனை செய்து வருகின்றனர். அதன்படி ஒரு கிலோ வரை மல்லிகை பூக்களை அவ்வப்போது சிறிய கைப்பைகளில் போட்டு அரசு டவுன் பஸ்சில் மேலூருக்கு கொண்டு செல்வது வழக்கமாகும். அப்போது சிறிய அளவிலான மல்லிகை பூக்களுக்கும் பயண டிக்கெட்டுடன் சேர்த்து சரக்கு (லக்கேஜ்) கட்டணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சேக்கிபட்டியை சேர்ந்த விவசாயி சந்தோஷ் என்பவர் தனது தோட்டத்தில் விளைந்த மல்லிகைப்பூவில் ½ கிலோவை ஒரு பையில் போட்டு மேலூரில் விற்பனை செய்ய கொண்டு சென்றுள்ளார். இதற்காக சிறுகுடியில் இருந்து மேலூர் சென்ற அரசு டவுன் பஸ்சில் ஏறினார். அவரிடம் இருந்த ½ கிலோ மல்லிகை பூவிற்கு ரூ.13 சுமை கட்டணமாக பஸ் கண்டக்டர் வசூலித்ததாக தெரிகிறது. இதுகுறித்து அவர் சமூகவலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டு வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 10 கிலோ எடையுள்ள பொருட்களுக்கு மட்டுமே 13 ரூபாய் கட்டணம் வாங்க வேண்டும் என்ற விதிமுறை இருக்கும்போது சிறிய அளவில் கொண்டு செல்லும் மல்லிகைப்பூவுக்கும் விவசாயிகள் மற்றும் பெண்களிடம் கட்டணம் வசூலிப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்து வருகிறார்கள். இதுபோன்று வசூலிப்பதை நிறுத்தாவிட்டால் விவசாயிகள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறினார்கள்.

அரசுப் போக்குவரத்துக் கழக விதிகளின்படி, பொதுவாக 20 கிலோ அல்லது 25 கிலோவுக்கு உட்பட்ட கை சுமைகளுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று சொல்லப்படுகிறது. ஆனால், பல நேரங்களில் கண்டக்டர்கள் "வணிக ரீதியான பொருட்கள்" என்ற பெயரில் சிறிய பைகளுக்கும் கட்டணம் வசூலிக்கிறார்கள். அரை கிலோ பூவுக்கு கட்டணம் வாங்குவது என்பது விதிமுறையைத் தவறாகப் பயன்படுத்துவற்கு சமம் ஆகும்.

மல்லிகைப் பூ விலை சந்தையில் நிலையற்றது. ஒரு நாள் கிலோ ₹1000-க்கு விற்கும், மறுநாள் ₹200-க்குக் குறையும். அப்படி இருக்கும்போது, ஒரு விவசாயி அரை கிலோ பூவை விற்கச் செல்லும்போது வரும் சொற்ப லாபத்தில், பேருந்து கட்டணமே பெரும் பகுதியை எடுத்துக்கொண்டால் அவர்களுக்கு மிஞ்சுவது ஒன்றுமில்லாமல் போய்விடும்.

அண்டை மாநிலமான கர்நாடகாவில் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை (குறிப்பிட்ட எடை வரை) அரசுப் பேருந்துகளில் இலவசமாகக் கொண்டு செல்ல அனுமதி உண்டு. தமிழகத்திலும் அத்தகைய முறையைக் கொண்டு வர வேண்டும் அல்லது விவசாயிகளுக்கெனத் தனி 'பாஸ்' வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.

தமிழக அரசு ஏற்கனவே பெண்களுக்குப் பேருந்துகளில் இலவசப் பயணம் வழங்கியுள்ளது. அதேபோல், சிறு விவசாயிகளுக்கும் அவர்கள் கொண்டு செல்லும் சிறிய அளவிலான விளைபொருட்களுக்கும் விலக்கு அளித்தால் அது கிராமப்புற பொருளாதாரத்திற்குப் பெரும் உதவியாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+