மகளிர் உரிமைத்தொகை.. ஒரு கோடி பேருக்குதானா? விண்ணப்பம் 1.63 கோடி வந்ததே.. ஸ்டாலின் ‘பளிச்’! அப்பாடா!
சென்னை: மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 1 கோடி பேர் பயன் பெறுவார்கள் என முன்பு கூறப்பட்டது. ஆனால், 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளதால் ஏராளமானோருக்கு ரூ.1000 கிடைக்காதோ என்ற அச்சம் எழுந்தது. இந்த அச்சத்தைப் போக்கும் வகையில் ஸ்டாலின் நம்பிக்கை அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பித்த பெண்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. தகவல்களில் சந்தேகம் இருந்தால் அதிகாரிகள் வீடுகளில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

விண்ணப்பங்கள் பரிசீலனை: மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் ஒரு கோடி பேர் பயனாளிகளாக தேர்வு செய்யப்படவேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். ஆனால் இதுவரை 1 கோடியே 63 லட்சம் வரை விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதால், 63 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. ஆவணங்களை சரிபார்க்கும் பணி ஏற்கெனவே தொடங்கி நடைபெற்று வருவதால், பலரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படக் கூடும் என்றும் தகவல்கள் கசிந்தன.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்துவதற்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில் இன்னும் ஒரு சில நாள்களில் இந்த பணிகள் நிறைவடைந்து பயனாளர்கள் பட்டியல் தயார் செய்யப்படும் என்று தெரிகிறது. விண்னப்பித்தவர்களில் மூன்றில் இரு பங்கு மட்டுமே விண்ணப்பங்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாக கூறப்படுவதால், குடும்பத் தலைவிகள் பலரும் தங்களுக்கு கிடைக்குமா கிடைக்காதா என்ற அச்சத்திலேயே உள்ளனர்.
ஸ்டாலின் உறுதி: இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நாகையில் பேசும்போது, 1 கோடிக்கும் அதிகமாக எவ்வளவு வந்தாலும் கவலை இல்லை. யார் யாருக்குச் சேர வேண்டுமோ அவர்களுக்கு நிச்சயமாக மகளிர் உரிமைத்தொகை கிடைக்கும் என உறுதிப்படுத்தியுள்லார். இன்று திருவாரூர் மாவட்டம் நாகப்பட்டினத்தில் நடைபெற்ற திருமண விழாவில் பேசினார் முதல்வர் ஸ்டாலின்.
அப்போது, "தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்து திராவிட மாடல் ஆட்சி என்ற பெயரில் நாம் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் திட்டங்கள், சாதனைகள் அத்தனையும் உங்களுக்கு நன்றாக தெரியும். தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களை எல்லாம் எந்த அளவிற்குப் படிப்படியாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம் என்பது உங்களுக்கு புரியும். நேற்று முன்தினம், 25-ஆம் தேதி, திருக்குவளையில் கருணாநிதி படித்த பள்ளியில் தொடங்கிய திட்டம்தான் காலை உணவுத் திட்டம். இது தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டம் அல்ல.
கவலையே இல்லை: சொன்னதை மட்டும் அல்ல, சொல்லாததையும் செய்யும் ஆட்சிதான் இன்றைக்கு இருக்கும் திராவிட மாடல் ஆட்சி. அதேபோல் வருகிற செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று கலைஞர் பெயரால் அமைந்திருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கப்படவிருக்கிறது. ஒரு கோடிக்கும் குறையாமல், அதைவிட அதிகமாகத்தான் வரும் என்று இன்றைக்கு கணக்கு விவரங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறது. எவ்வளவு வந்தாலும் கவலை இல்லை. யார் யாருக்குச் சேர வேண்டுமோ அவர்களுக்கு நிச்சயமாக அந்த தொகை சென்று சேரப்போகிறது.
இப்படிப்பட்ட இந்த ஆட்சிக்குத்தான் இன்றைக்கு நீங்கள் துணை நின்று கொண்டிருக்கிறீர்கள். எப்படி தமிழ்நாட்டில் ஒரு நல்லாட்சி உருவாகுவதற்கு, திராவிட மாடல் ஆட்சி உருவாக்குவதற்கு காரணமாக இருந்தீர்களோ, அதேபோல் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றியத்தில் ஒரு சிறப்பான ஆட்சி உருவாக நீங்கள் எல்லாம் காரணமாக இருக்க வேண்டும்" எனப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications