மே(ஜிக்) 4 என்ன நடக்கும்! ஆட்சியில் பங்கு கேட்க தயாராகும் கட்சிகள்! திமுக-அதிமுகவுக்கு பெரும் தலைவலி

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்திருக்கும் நிலையில், வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடக்கவிருக்கும் நிலையில், இந்த முறை எந்தக் கட்சிக்கும் ஒருவேளை தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் போனால் என்ன நடக்கும்? என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்கள் எட்டப்படாவிட்டால், திமுக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகுமா? என்ற விவாதம் அரசியல் பார்வையாளர்களிடையே அதிகரித்து வருகிறது.

2026 தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பே கூட்டணி ஆட்சி குறித்து காங்கிரஸ் தரப்பில் பல்வேறு கருத்துகள் பேசப்பட்டன. குறிப்பாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது கட்சியின் முதல் அரசியல் மாநாட்டிலேயே "ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு" என்ற கோரிக்கையை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.

TN Election Exclusive Tamil Nadu Assembly Election 2026 DMK

இதன் பின்னர், கூட்டணி கட்சிகள் தரப்பில் அதிகாரப் பங்கு என்பது முக்கிய அம்சமாக பேசப்படத் தொடங்கியது. அதே நேரத்தில், திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகளும் தேர்தலுக்கு முன்பே தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

2026 தமிழக சட்டசபை தேர்தல்

குறிப்பாக காங்கிரஸ் கட்சி, கடந்த கால அரசியல் அனுபவங்களை எடுத்துக்காட்டி, வரும் ஆட்சியில் தங்களுக்கும் உரிய இடம் கிடைக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2006 முதல் 2011 வரை நடைபெற்ற திமுக ஆட்சியின் போது, காங்கிரஸ் ஆதரவுடன் அந்த ஆட்சி நீடித்தது என்பது அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று.

118 இடங்கள்

அப்போது வெளியில் இருந்து ஆதரவு வழங்கிய காங்கிரஸ், அமைச்சரவையில் இடம் கோரவில்லை. ஆனால் தற்போதைய அரசியல் சூழலில், அதே நிலை தொடருமா என்பது பெரிய கேள்வியாக உள்ளது. இந்த முறை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் 118 இடங்கள் கிடைக்காமல் போனால், கூட்டணி கட்சிகளின் ஆதரவை கொண்டு ஆட்சி அமைக்க வேண்டிய சூழல் உருவாகும்.

கூட்டணி ஆட்சி

ஒருவேளை அப்படி நடந்தால், தேர்தலுக்கு முன்பே ஆட்சி அதிகாரத்தில் பங்கு எனப் பேசிய கட்சிகள், தேர்தலுக்கு பிறகு அமைச்சரவையில் இடம் கேட்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். காங்கிரஸ் மட்டும் அல்லாமல், கூட்டணியில் உள்ள பிற கட்சிகளும் அமைச்சரவைப் பொறுப்புகளை கேட்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. குறிப்பாக விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள், மதிமுக போன்ற கட்சிகளும் தாங்கள் வெல்லும் தொகுதிகளுக்கு ஏற்ப அதிகாரத்தில் பங்கு கோரலாம் என்று கூறப்படுகிறது.

அதிகார பங்கு

இப்படி பல கட்சிகள் அமைச்சரவை இடம் கோரினால், ஒரே கட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஆட்சியை விட, பல்வேறு கருத்துகள் மோதும் சூழல் உருவாகும். இதனால் முக்கிய முடிவுகள் எடுப்பதில் தாமதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஒரு புதிய திட்டத்தை அறிவிக்கும்போதோ, சட்டம் கொண்டு வரும்போதோ பல கட்சிகளின் கருத்துகளை ஒருங்கிணைப்பது சவாலாக மாறும். தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக பெரிய திராவிட கட்சிகள் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த அனுபவம் தான் அதிகம்.

தமிழக அரசியல்

அந்த நிலைமையில் இருந்து மாறி கூட்டணி ஆட்சி அமைந்தால், அது தமிழக அரசியலில் ஒரு புதிய மாற்றமாக பார்க்கப்படும். மேலும், பல கட்சிகள் அதிகாரத்தில் பங்கு பெற்றால், ஒரே அதிகார மையம் என்ற நிலை மாறி, பல அதிகார மையங்கள் உருவாகும் அபாயமும் உள்ளது. இது நிர்வாக செயல்பாடுகளில் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக மக்கள் நலத் திட்டங்களை விரைவாக செயல்படுத்துவதில் சிரமங்கள் உருவாகும் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

தொங்கு சட்டமன்றம்

இதற்கிடையில், 'தொங்கு சட்டமன்றம்' என்ற சாத்தியம் இந்த தேர்தலில் அதிகமாக பேசப்படுவதற்கான முக்கிய காரணமாக தவெகவின் வருகையும் பார்க்கப்படுகிறது. குறிப்பாக நகர்புற வாக்குகளை தவெக பிரிப்பதால், பெரிய கட்சிகளின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. மொத்தத்தில், இந்த தேர்தலில் 118 என்ற எண்ணிக்கை மிக முக்கியமானதாக மாறியுள்ளது. அந்த எண்ணிக்கையை எட்டும் கட்சி எளிதாக ஆட்சி அமைக்க முடியும். ஆனால் அந்த எண்ணிக்கை தவறினால், கூட்டணி அரசியல், அதிகாரப் பங்கு, அமைச்சரவை இடங்கள் போன்ற பல சிக்கல்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளது என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+