வங்கிகளை திணறடித்த பெண்கள்.. ரூ.5000 மகளிர் உரிமை தொகையால் திருத்தணியில் சம்பவம்.. போட்டா போட்டி
சென்னை: தமிழக அரசு சார்பில் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான மகளிர் உதவித்தொகை (Mahalir Urimai Thogai) ரூ.3 ஆயிரம் + கோடைக்கால சிறப்பு தொகுப்பாக ரூ.2 ஆயிரம் என்று மொத்தம் ரூ.5 ஆயிரத்தை தமிழக அரசு இன்று வங்கி கணக்குகளில் செலுத்தியது. இதனால் ஹேப்பியான பெண்கள் அந்த பணத்தை எடுக்க இன்று ஒரே நேரத்தில் வங்கிகளில் குவிந்ததால் பல இடங்களில் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில் தகுதியான மகளிருக்கு மாதந்தோறும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மாதமும் 1.31 கோடி மகளிருக்கு அவர்களின் வங்கி கணக்கில் ரூ.1,000யை தமிழக அரசு செலுத்தி வருகிறது. தமிழக அரசின் இந்த நலத்திட்டம் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

காலையிலேயே ரூ.5 ஆயிரம்
இந்நிலையில் தான் இன்று காலை பெண்களுக்கு சென்ற ஒரு மெசேஜ் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அந்த மெசேஜில் ‛உங்களின் வங்கி கணக்கில் ரூ.5 ஆயிரம் வரவு வைக்கப்பட்டுள்ளது'' என்று கூறப்பட்டு இருந்தது. காலையிலேயே இந்த மெசேஜை பார்த்த பெண்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.
3 மாத முன்பணம் + கோடை தொகுப்பு
அதோடு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம் என்று தமிழக அரசு மகளிர் உரிமை தொகையை செலுத்தி இருப்பது தெரியவந்தது.
மொத்தமாக கொடுத்தது ஏன்?
தமிழகத்தில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை நிறுத்தம் செய்ய வாய்ப்புள்ளதாக நினைத்து தமிழக அரசு முன்கூட்டியே ரூ.5 ஆயிரத்தை வழங்கி உள்ளது.
மீண்டும் வென்றால் ரூ.2,000
அதுமட்டுமின்றி திமுக அரசு மீண்டும் ஆட்சியை பிடிக்கும்பட்சத்தில் இந்த மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதுமட்டுமின்றி இலவசங்கள் தொடர்பான வழக்கு மார்ச் மாதம் முதல் வாரத்தில் விசாரணைக்கு வருவதால் முன்கூட்டியே வரவு வைக்கப்பட்டுள்ளது.
வங்கிகளில் அதிகரித்த கூட்டம்
அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள வங்கியில் ஒரே நேரத்தில் பணம் எடுக்க ஏராளமானவர்கள் கூடியதால் வங்கியில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. வங்கிகளில் பொதுமக்கள் நிற்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் பெண்கள் பலரும் வங்கிகளின் முன்பு அமர்ந்திருந்தனர். திருத்தணி மட்டுமின்றி தமிழகத்தின் வங்கிகளில் பல இடங்களில் இன்று அளவுக்கு அதிகமாக பெண்களின் கூட்டம் இருந்தது. இதனால் கடும் நெரிசல் ஏற்பட்டது. பெண்கள் காத்திருந்து ரூ.5 ஆயிரத்தை எடுத்து சென்றனர். மொத்தத்தில் இந்த மகளிர் உரிமைத்தொகையால் தமிழக மகளிர் ஹேப்பியாகி உள்ளனர்.
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மகளிரின் ஓட்டு மிகவும் முக்கியமாகும். ஒவ்வொரு தேர்தலின்போதும் திமுக மகளிரின் ஓட்டுகளை குறிவைத்து தேர்தல் அறிக்கையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிடும்.
அந்த வகையில் தற்போது மகளிர் உரிமைத்தொகை + கோடைகால சிறப்பு தொகுப்பு நிதி என்று ரூ.5,000யை அள்ளி கொடுத்துள்ளது. இது வரும் தேர்தலில் திமுகவுக்கு பிளஸ் பாயிண்ட்டாக அமையலாம்.












Click it and Unblock the Notifications