வியப்பாக உள்ளது.. தமிழ்நாடு மருத்துவமனைகளை பார்த்து.. மலைத்து போன மகாராஷ்டிர சுகாதாரத்துறை அமைச்சர்
சென்னை: தமிழ்நாட்டிற்கு மருத்துவ கட்டுமானங்களை பார்வையிட வந்த மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ், இங்கு உள்ள கட்டுமானங்களையும், திட்டங்களையும் பார்த்து வியந்து பாராட்டி உள்ளார்.
இந்தியாவில் இரண்டு முன்னேறிய மாநிலங்கள் என்றால் அது மகாராஷ்டிராவும் தமிழ்நாடும்தான். இந்த இரண்டு மாநிலங்கள்தான் இந்தியாவின் ஜிடிபிக்கும் பெரிய அளவில் பங்கு வகிக்கிறது. இந்த இரண்டு மாநிலங்கள்தான் பொருளாதார ரீதியாக இந்தியாவிற்கு முதுகெலும்பாக உள்ளது.
மகாராஷ்டிராவை எடுத்துக்கொண்டால் அந்த மாநிலம் மும்பை, புனே என்ற இரண்டு நகரங்களை கொண்டு உள்ளது. மற்ற மகாராஷ்டிரா பகுதிகள் இன்னும் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியை அடையவில்லை. ஆனால் தமிழ்நாடு பரந்துபட்ட வளர்ச்சியை பெற்றுள்ளது.

தமிழ்நாடு
முக்கியமாக சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை என்று ஒவ்வொரு மாவட்டமும், மண்டலங்களும் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியை பெற்றுள்ளது. தமிழ்நாடு முக்கியமாக ஆட்டோமொபைல் துறையிலும் மருத்துவ துறையிலும் சிறந்து விளங்கி வருகிறது. இந்தியாவின் மருத்துவ தலைநகர் சென்னை என்று அழைக்கப்படும் அளவிற்கு மருத்துவ துறைக்கு தமிழ்நாடு மிகப்பெரிய முக்கியத்துவத்தை கொடுத்து உள்ளது. தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பு வசதிக்கு மிக சிறந்த எடுத்துக்காட்டு என்றால் கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு அரசு செலுத்திய 28.9 லட்சம் வேக்சின் டோஸ்கள்தான்.

மெகா முகாம்
ஒரே நாளில் மாஸ் முகாம் நடத்தி கிட்டத்தட்ட 29 லட்சம் பேருக்கு வேக்சின் போட்டு சாதனை படைத்துள்ளனர். 20 லட்சம் டார்கெட் வைத்து 29 லட்சம் பேருக்கு வேக்சின் போடுவது எல்லாம் இமாலய சாதனை. தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பு மாநிலம் முழுக்க பரந்து விரிந்து இருப்பதையே இந்த சாதனை உணர்த்துகிறது. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பு வசதிகளை பார்வையிடுவதற்காக , மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தலைமையில் பெரிய குழு நேற்று முதல்நாள் தமிழ்நாடு வந்தது.

குழு
சுகாதார செயலர் மேரி நீலிமா உள்ளிட்ட 9 பேர் கொண்ட குழுவினர் தமிழ்நாடு வந்திருந்தனர். சென்னையில் இருக்கும் பல்வேறு அரசு மருத்துவமனைகளை இவர்களை பார்வையிட்டனர். அங்கு கொரோனா மூன்றாம் அலைக்காக செய்யப்பட்டு இருக்கும் ஏற்பாடுகளை பார்வையிட்டனர். அதோடு மருத்துவமனைகளிலேயே அமைக்கப்பட்டு இருக்கும் ஆக்சிஜன் உற்பத்தி மையங்களையும் பார்வையிட்டனர். சென்னை தேனாம்பேட்டை DMS வளாகத்தில் தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், செயலாளர் ராதா கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தனர்.
Recommended Video

ஆலோசனை
வேக்சினை வீணடிக்காமல் கூடுதல் வேக்சின் போட்டது எப்படி, மெகா கேம்ப் நடத்தியது எப்படி, விரைவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தியது எப்படி, சென்னை மக்கள் தொகைக்கு ஏற்ற கொரோனா கட்டுப்பாட்டு பிளான் என்ன என்பது போன்ற விஷயங்களை மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் கேட்டு தெரிந்து கொண்டார். இந்த பயணத்தின் முக்கிய நோக்கமே அரசு அறிவித்த மக்களை தேடி மருத்துவம் பற்றி தெரிந்து கொள்ளத்தான். தமிழ்நாடு அரசு மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது.

எப்படி?
இதை எப்படி செயல்படுத்துகிறார்கள் என்பதை ஆலோசனையில் மகாராஷ்டிரா குழு கேட்டுள்ளது. இதே திட்டத்தை தங்கள் மாநிலத்தில் செயல்படுத்த அவர்கள் முடிவு செய்துள்ளனர். அதோடு தமிழ்நாட்டில் ஒரே நாளில் 29 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தியத்தை கேட்டு அவர்கள் ஆச்சர்யப்பட்டதாகவும், தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பை பார்த்து வியந்து போனதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

பேட்டி
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் அளித்த பேட்டியில்,தமிழ்நாட்டில் வேக்சின் விநியோகம் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இங்கு இருக்கும் மருத்துவமனைகள் சிறப்பாக உள்ளது. கட்டமைப்பு நன்றாக இருக்கிறது. தமிழ்நாட்டில் மருத்துவத்துறை சிறந்து விளங்குகிறது. மருத்துவ பொருட்களை கொள்முதல் செய்து வழங்கும் 'தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம்' செயல்படும் விதம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் விரைவாக மருந்துகளை வாங்குகிறார்கள்.

டெண்டர்
விரைவாக டெண்டர் எடுத்து மருந்துகளை மாநிலத்திற்கு கொண்டு வருகிறார்கள். இங்கு வந்து நிறைய முக்கியமான விஷயங்களை நாங்கள் கற்றுக்கொண்டோம். அதோடு இங்கு எல்லா மாவட்டங்களிலும் பெரிய மருத்துவமனைகள் உள்ளன. ஒவ்வொரு மாவாட்டத்திலும் குறைந்தது ஒரு மெடிக்கல் கல்லூரியாவது இருக்கிறது. இப்படி எங்கள் மாநிலத்திலும் கொண்டு வர வேண்டும். இவர்கள் மேற்கொண்டு இருக்கும் பல பணிகள் வியப்பாக உள்ளது. இதை எங்கள் மாநிலத்திலும் பின்பற்ற உள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications