100%.. திமுக கூட்டணியில் மநீம.. உறுதியாக சொன்ன கமல்.. ஈரோடு கிழக்கு பிரசாரத்தை கவனீச்சிங்களா! ஆஹா
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து கமல்ஹாசன் பிரசாரம்.
சென்னை: 2024 நாடாளுமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி திமுக கூட்டணியில் இடம்பெறும் என்ற தகவல்கள் பரவி வருகின்றன. காங்கிரஸ் கட்சி மூலம் திமுக கூட்டணியில் இணைய கமல் முயற்சி மேற்கொண்டுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளரான காங்கிரஸின் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக கமல்ஹாசன் பிரசாரம் செய்தார். இந்த வேளையில் அவர் கூறிய சில விஷயங்கள் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் ஐக்கியமாக உள்ளதை புரிந்து கொள்ள முடியும். அதுபற்றிய விபரங்கள் வருமாறு:
தமிழ் திரையுலகில் ஜொலித்து வரும் கமல்ஹாசன், கடந்த 2018 ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியை துவக்கினார். ஊழல் இல்லாத சிறந்த ஆட்சியை வழங்கும் முனைப்பில் அவர் கட்சியை துவங்கினார். இதுவரை மக்கள் நீதி மய்யம் ஒரு சட்டசபை தேர்தல், ஒரு நாடாளுமன்ற தேர்தலை சந்தித்துள்ளது.
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதிமய்யம் தனித்து களமிறங்கியது. இதில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வி தான் கிடைத்தது. கடந்த 2021ல் தமிழ்நாட்டில் நடந்த சட்டசபை தேர்தலின்போது மக்கள் நீதி மய்யம் சார்பில் 142 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதிலும் யாரும் வெற்றி பெறவில்லை.

2 தேர்தல்களிலும் தோல்வி
2021 சட்டசபை தேர்தலில் கமல்ஹாசனும் கோவை தெற்கு சட்டசபை தொகுதியில் களமிறங்கினார். அங்கு வெற்றி பெறுவார் என அனைவரும் கூறிய நிலையில் கமல்ஹாசனும் தோல்வியடைந்தார். வெறும் 1728 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் பாஜகவின் வானதி சீனிவாசனிடம் கமல்ஹாசன் வெற்றியை இழந்தார். 2 தேர்தல்களில் கட்சி தோல்வியடைந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் சில நிர்வாகிகள் கட்சி மாறினர். இதையடுத்து கமல்ஹாசனும் திரைப்படம் பக்கம் போக்கசை திருப்பினார்.

காங்கிரசுடன் கைகோர்ப்பு
இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் முதல் மீண்டும் கமல்ஹாசன் அரசியலில் தீவிரம் காட்ட துவங்கினார். சென்னையில் கட்சி நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனைகள் மேற்கொண்டனர். அதோடு பாஜக எதிர்ப்பு அரசியலை அவர் கையில் எடுத்தார். காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கம் காட்டினார். கன்னியாகுமரியில் இருந்து ஜம்மு காஷ்மீர் வரை நடந்த ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் டெல்லியில் கமல்ஹாசன் பங்கேற்றார். மேலும் ராகுல் காந்தியுடன் அவர் கலந்துரையாடினார்.

திமுக கூட்டணியில் என தகவல்
இந்த நிகழ்வுகள் அனைத்தும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கமல்ஹாசன் இருப்பதை உறுதி செய்யும் வகையில் இருந்தது. அதோடு காங்கிரஸ் வழியாக தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் கமல்ஹாசன் இணையலாம் என்ற தகவல்களும் வெளியாகின. இதனை மெய்ப்பிக்கும் வகையில் தான் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாமல் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு அளித்துள்ளது. இதனை கமல்ஹாசன் வெளிப்படையாக அறிவித்ததோடு, ஈவிகேஎஸ் இளங்கோவனுக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவதாகவும் அவர் அறிவித்தார்.

ஈரோடு கிழக்கில் பிரசாரம்
அதன்படி இன்று ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக ஈரோடு கிழக்கு தொகுதி கருங்கல்பாளையத்தில் கமல்ஹாசன் தீவிர பிரசாரம் செய்தார். இந்த பிரசாரத்தின்போது அவர் பேசியது என்பது 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இடம்பெறுவதை உறுதி செய்வது போல் இருந்ததாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர். குறிப்பாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா தனக்கு பிரச்சனை செய்ததாகவும், மறைந்த முதல்வர் கருணாநிதி, தற்போதைய முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் தனக்கு உதவ தயாராக இருந்ததாகவும் அவர் கூறியது என்பது ஒட்டுமொத்தமாக மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணிக்கு அச்சாரம் போட்டுள்ளதை வெளிப்படையாக காட்டுகிறது. மேலும் நேற்றைய பிரசாரத்தில் கமல்ஹாசன் பேசியதை நன்கு கவனித்தால் அவர் பாஜகவை எதிர்க்க தயாராக இருப்பதும், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசுடன் சேர்ந்து அதனை அவர் செய்ய முயற்சிப்பதும் நமக்கு புரியும்.

பாஜக மீது அட்டாக்
நேற்றை பிரசாரத்தில் கமல்ஹாசன் பேசும்போது, ‛‛சின்னம், கொடி , கட்சி ஆகியவற்றை தாண்டியது தான் தேசம். ஜனநாயகம் வழியாகவும் சர்வாதிகாரம் வந்தடைந்ததற்கு பல உதாரணங்கள் உள்ளன. இன்று இந்தியாவில் அது நடந்து கொண்டு இருக்கிறது. நம்நாடு மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும். இந்தியனாக ஆதரவை கொடுக்க வேண்டியது என் கடமை'' என்றார். இதன்மூலம் மத்திய பாஜக ஆட்சியை அவர் விமர்சனம் செய்துள்ளார்.

பெருமையாக நினைப்பதாக..
அதன்பிறகு, ‛‛பலமுறை யோசித்து தான் இங்கு வந்திருக்கிறேன். நான் அரசியலுக்கு வந்தது லாபத்துக்காகவோ அல்லது ஆதாயத்திற்காகவோ அல்ல. நல்லது நடக்க வேண்டும் என்று தான் நான் அரசியலுக்கு வந்தேன். இந்த கூட்டத்துடன் இருப்பது எனக்கு பெருமை. இப்போது மய்யம் என்பது எந்த பக்கமும் சாயாமல் நடுவில் இருப்பது அல்ல. கொள்கைகளை ஒதுக்கிவிட்டு மக்களின் நலன் என வரும்போது எது நியாயமோ அதை செய்வது தான் மய்யத்தின் லட்சியம். அதனை தான் செய்து கொண்டிருக்கிறேன். பல விமர்சனங்களை கேட்டுவிட்டு சரியான பாதை என்று தான் இங்கு வந்துள்ளேன். என் பயணத்தை பாருங்கள் என் பாதை உங்களுக்கு புரியும்'' என்றார். இதன்மூலம் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இணைவதை விமர்சனம் செய்தவர்களையும் நான் பொருட்படுத்தவில்லை. நியாயத்தின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

கருணாநிதி, ஸ்டாலினுக்கு புகழ்ச்சி
மேலும், ‛‛‛விஸ்வரூபம்' என்ற படத்தை நான் எடுத்தேன். அந்த படத்தால் என்னை தடுமாற வைத்தனர். அதை பார்த்து சிரித்தார் அந்த ‛அம்மையார்'(மறைந்த முதல்வர் ஜெயலலிதா). அப்போது கருணாநிதி என்னை தொடர்பு கொண்டு ஏதாவது உதவி வேண்டுமா என கேட்டார். உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் நான் இருக்கின்றேன் என ஸ்டாலின் கூறினார். இது ஒன்றும் தேச பிரச்சனை அல்ல நான் பார்த்து கொள்கின்றேன்''என்றார். மக்கள் நீதி மய்யம் கட்சி துவங்கிய புதிதில் திமுகவை அவர் விமர்சித்த நிலையில் தற்போது கருணாநிதி, ஸ்டாலினை அவர் புகழ்ந்துள்ளார். மேலும் நேற்றைய பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் இல்லாத நிலையில் அவரது பெயரையும் கூட குறிப்பிட்டு கமல்ஹாசன் பேசினார். கமல்ஹாசனின் இத்தகைய நடவடிக்கைகள் என்பது 2024ல் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இணைவதை உறுதி செய்வதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

என்ன காரணம்?
திரையுலகில் சாதித்த கமல்ஹாசன், எப்படியாவது அரசியலில் ஒரு வெற்றியாவது பெற்றிவிடலாம் என்ற ஆர்வத்தில் கட்சியை கட்டமைத்தார். ஆனால் 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டசபை தேர்தல் ஆகியவை மக்கள் நீதி மய்யத்தால் வெற்றியை பதிவு செய்ய முடியவில்லை. இதேநிலை வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் நீடித்தால் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் நொந்துபோக வாய்ப்புள்ளது. இதனை தடுக்கும் வகையிலும் முதல் வெற்றியை பெறும் முனைப்பிலும் தான் கமல்ஹாசன் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்க காய் நகர்த்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications
