சூப்பர் திட்டம்.. மாணவிகளுக்கு மாதவிடாய் கால விடுமுறை.. தமிழ்நாட்டிலும் செயல்படுத்த மநீம வேண்டுகோள்!
மாணவிகளின் நலன் கருதி மாதவிடாய் விடுமுறை அளிக்க மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னை : கேரளா அரசைப் போல் தமிழ்நாடு அரசும் மாணவிகளின் நலன் கருதி மாதவிடாய் விடுமுறை அளிக்க வேண்டும் என மக்கள் நீதி மையம் வலியுறுத்தியுள்ளது. மாணவிகளின் நலனை முன்னிறுத்தி மாதவிடாய் மற்றும் மகப்பேறு கால விடுமுறை திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.
மாதவிடாய் காலத்தில் அலுவலகத்திற்கு செல்லும் பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பும், பள்ளி - கல்லூரி மாணவிகளுக்கு வருகைப் பதிவோடு கூடிய விடுமுறையும் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த சில ஆண்டுகளாக வலுப்பெற்று வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் கேரளாவில் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவிகளுக்கு மாதவிடாய் மற்றும் மகப்பேறு விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது.

மாதவிடாய் விடுமுறை
கேரளாவில் உள்ள கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தங்கள் மாணவிகளுக்கு மாதவிடாய் விடுமுறையை அறிவித்திருந்தது. கொச்சி பல்கலைக்கழகத்தை முன்னுதாரணமாக வைத்து, கேரளாவில் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் பயிலும் மாணவிகளுக்கு மாதவிடாய் விடுமுறை அளித்து அம்மாநில உயர்கல்வித் துறை சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது. கேரள அரசின் இந்த அறிவிப்பு கல்லூரி மாணவிகள் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது.

மநீம வேண்டுகோள்
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் அதன் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணி மாநில செயலாளர் மூகாம்பிகா ரத்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கேரளாவில் உள்ள அனைத்து கல்லூரிகள், மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவிகளுக்கு மாதவிடாய் மற்றும் மகப்பேறு காலங்களில் விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது பெரிதும் வரவேற்கத்தக்கது. நாட்டிலேயே முன்மாதிரியாக இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ள கேரளா அரசை மக்கள் நீதி மய்யம் பாராட்டுகிறது. கொச்சியில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகம் செயல்படுத்திய இந்த திட்டத்தை மாநிலம் முழுவதிலும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் செயல்படுத்த கேரளா அரசு விரிவுபடுத்தியுள்ளது.

தமிழ்நாட்டிலும் செயல்படுத்த
பெண்கள் மற்றும் சிறுமிகள் எதிர்கொள்ளும் நடைமுறை பிரச்சனைகளை தீர்க்க இதுபோன்ற முன்மாதிரி திட்டங்கள் அவசியம். தமிழ்நாட்டிலும் மாணவிகளின் நலன் கருதி இந்த திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். அதேபோல, கல்லூரி, பள்ளி மாணவிகள் எதிர்கொள்ளும் பல்வேறு சிரமங்களைப் போக்க இதுபோன்ற முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்தவும், தக்க விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தமிழ்நாடு அரசும், கல்வித் துறையும், இதற்கு முன்வர வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசு பதில்
முன்னதாக நேற்று நாடாளுமன்ற மக்களவையில் நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை கட்டாயமாக்கப்படுமா? கல்வி நிறுவனங்களில் மாணவிகளுக்கான அடிப்படை வசதிகள் உள்ளனவா எனக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மத்திய கல்வி அமைச்சகத்தின் இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில், கல்வி நிறுவனங்களில் மாதவிடாய் கால விடுமுறை அளிப்பதை உறுதி செய்யும் விதமாக சட்டம் இயற்றுவது பற்றி மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications