தமிழ்நாட்டு திரையரங்குகளில் கொண்டாடப்படும் மஞ்சுமெல் பாய்ஸ்.. கமல் கத்தியதை உணர 34 வருசம் ஆயிருக்கு
சென்னை: அன்று குணாவை கொண்டாட தவறியதற்கு பிராய்ச்சித்தமாக இன்று மஞ்சுமெல் பாய்ஸை கொண்டாடுகிறார்கள் இளைஞர்கள்.. தமிழ்நாட்டில் பிரேமம் படத்திற்கு பிறகு ஒரு நேரடி திரைப்படம் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது என்றால் அது மஞ்சுமெல் பாய்ஸ் படம் தான்.. அதன் காரணமாக தமிழக திரையரங்குகளில வார இறுதியில் காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
என்னப்பா பைத்தியக்காரத்தனமாக இருக்கு என்று 1990களில் தவறவிட்ட குணா திரைப்படம், மக்களால் புரிந்து கொள்ளப்பபட கிட்டத்தட்ட 34 வருடங்கள் ஆகியிருக்கிறது.. பேய்களின் சமையல் அறை என்று பெயருடன் இருந்த குகை இன்று கொடைக்கானலின் அடையாளங்களில் ஒன்றாக குணா குகை என்று பெயருடன் இருக்கிறது.

குணா படத்திற்கு கொடைக்கானலில் இதுவரை படப்பிடிப்பே நடக்காத, மனித நடமாட்டமே அறியாத இடத்தில் படிப்பை நடத்த விரும்பிய கமல்ஹாசன் இயக்குனர் ர் சந்தானபாரதியுடன் பல இடங்களில் சுற்றினார். இப்படி கண்டுபிடித்த இடம் தான் டேவில்ஸ் கிட்சன்..அதாவது பேய்களின் சமையலறை என்ற குகை.. சுமார் எழுநூறு அடி பள்ளத்தாக்கில் கயிறு கட்டி இறங்கி போய் பாதை அமைத்து படத்தை எடுத்திருந்தார் கமல்ஹாசன்.. அந்தஇடம் தான் பின்னாளில் குணா குகையாக மாறியது.
அந்த குணா குகை இன்று மலையாள படமான மஞ்சுமெல் பாய்ஸ் படத்தால் கொண்டாடப்படுகிறது. "மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல" என்று அன்று கமல்ஹாசன் குணா குகையில் கத்தியத மக்களின் காதுகளுக்கு கேட்க கிட்டத்தட்ட 34 வருடம் ஆகிவிட்டது.
கொடைக்கானலுக்கு 2006ம் ஆண்டு போன கேரளாவைச் சேர்ந்த மஞ்சுமெல் பாய்ஸ் என்ற இளைஞர்கள் குழு சுற்றுலா சென்றது.. அந்த நண்பர்கள் குழுவில் ஒருவர் குணா குகைக்குள் தவறி விழுந்தார்.. குகையின் பாறை இடுக்கில் உள்ள ஒரு 900 அடி பள்ளத்தில் விழுந்த அஅவர் கடும் போராட்டத்திற்கு பிறகு மீண்டு வந்தார். இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தான் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இயக்குநர் சிதம்பரம் எழுதி இயக்கியிருக்கும் இந்த படம் கேரளாவில் கொண்டாடப்படுகிறது. கேரளாவை தாண்டி மஞ்சுமெல் பாய்ஸ் படம் தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த படம் தத்ரூபமாக இருப்பதாக கூறப்படுவதால் தமிழக இளைஞர்கள் தியேட்டரில் போய் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை பார்க்க ஆர்வம் காட்டுகிறார்கள்.
மலையாள படம் நேரடியாக வெளியானால் அதிகபட்சம் சென்னை மற்றும் கோவையில் தான் வெளியாகும்.. ஆனால் இந்த மஞ்சுமெல் பாய்ஸ் படம் பெரம்பலூர் உள்பட தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் இப்போது வெளியாகி உள்ளது. படத்திற்கு கிடைத்த வரவேற்பு காரணமாக தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளில் புதிதாக மஞ்சுமெல் பாய்ஸ் படம் நேரடியாக மலையாளத்திலேயே வெளியிடப்பட்டுள்ளது.
தமிழில் டப்பிங் செய்யப்படாத நேரடி மலையாளப்படம் ஒன்று கொண்டாடப்படுவது பிரேமம் படத்திற்கு பிறகு இப்போது நடந்துள்ளது. சென்னை, கோவை உள்பட பல்வேறு நகரங்களில் திரையரங்குகளில் இப்போது மஞ்சுமெல் பாய்ஸ் படத்திற்கு கூடுதல் காட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. காத்துவாங்கிய பல தியேட்டர்கள் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தால் இப்போது களைகட்டியுள்ளது. "மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல" என்று கமல்ஹாசனின் குரல்கள் 34 வருடம் கழித்து தியேட்டர்களில் இன்று எதிரொலிக்கிறது.












Click it and Unblock the Notifications