அரசியலுக்காக மக்களை காவு கொடுத்தார்களாம்.. ஓபனாக கரூர் பலிக்கு விஜய்க்கு ஆதரவு தரும் மன்சூர் அலிகான்
சென்னை: 41 பேரின் மரணத்துக்கு விஜய் எந்த பதிலும் சொல்லவில்லை என்று சொல்கிறீர்கள். அவரை தான் அங்கே இருக்க விடாமல் கிளம்ப சொல்லி அனுப்புகிறார்கள். பிறகு எப்படி அவர் பேசுவார்? என கேள்வி எழுப்பியுள்ள நடிகர் மன்சூர் அலிகான், விஜயின் வளர்ச்சி பிடிக்காமல் அவரை நேரடியாக எதிர்க்க வேண்டும் என்றால் கொள்கைரீதியாக எதிர்த்து இருக்கலாம். அதை விட்டுவிட்டு சொந்த மண்ணில் சொந்த மக்களைக் காவு கொடுப்பதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," கரூர் சம்பவம் மனதை உலுக்கும் வகையில் உள்ளது. என்னுடைய சொந்த ஊர் கரூர், பள்ளப்பட்டி என்பதால் அந்த பேரழிவை நினைத்தாலே இரண்டு நாட்களாக தூங்க முடியவில்லை.
நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் வேதனையை நினைத்தாலே இதயம் பிளந்து விடுகிறது. நம் நாட்டில் இப்படி நடப்பது மிகவும் அவமானமாக இருக்கிறது. கரூர் சம்பவம் தொடர்ந்து அரசியலாக்கப்படுகிறது என்பது உண்மைதான்.

மன்சூர் அலிகான்
ஆனால் இதுபோன்ற துயரத்தை அரசியல் பலனுக்காக பயன்படுத்துவது மிகக் கீழ்த்தரமான செயல். லியோ பட விழாவில் விஜயை நான் நேரில் வாழ்த்தியபோது 'நாளைய தீர்ப்பு' என்று கூறினேன். அவரை வளர்ச்சி பெறுவது சிலருக்கு பிடிக்காமல் இருப்பதால் நேரடியாக எதிர்க்கலாம். கூட்டங்கள் நடத்தி கொள்கை ரீதியாக விமர்சிக்கலாம். ஆனால் சொந்த மண்ணில் சொந்த மக்களை பலியிடும் அளவுக்கு அரசியல் செய்வது அயோக்கியத்தனம். யார் அரசியலுக்கு வர வேண்டும் என்பதை மக்கள் ஆறு மாதங்களில் தீர்மானிப்பார்கள்.
விஜய்
சிலர் அரசியலில் கோமாளித்தனமாக நடக்கிறார்கள், சிலர் வேண்டாம் என்று ஒதுங்குகிறார்கள், சிலர் திமிங்கலம் போல அடக்க ஆள் இல்லாமல் நடக்கிறார்கள். நான் விஜய்க்கு ஆதரவு தருகிறேன். அவர் என் தம்பி மாதிரி. அருணா ஜெகதீசன் தலைமையிலான குறித்த விசாரணையால் எதுவும் நடக்காது. ஆனால் இந்த விசாரணை எதையும் செய்யாது. முறையான போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. எந்தக் கட்சிக்கும் இதுவரை இவ்வளவு நிபந்தனைகள் விதிக்கப்பட்டதில்லை.
விஜய் ஆதரவு
41 பேரின் மரணத்திற்கு விஜய் எந்த பதிலும் சொல்லவில்லை என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் அவரை அங்கிருந்து கிளம்ப சொல்லி அனுப்பிவிட்ட பிறகு, அவர் எப்படி பேச முடியும்? இது திட்டமிட்ட சதி. இதற்கான தண்டனை ஆறு மாதங்களில் கிடைக்கும். தவறு செய்தவர் தண்டனை அனுபவிப்பார். விஜய் மாமனிதர்; அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று அவருக்குத் தெரியும்." என கூறியுள்ளார்.
கரூர் சோகம்
நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் நேற்று முன்தினம் கரூர் வேலுச்சாமிபுரத்தில் பிரச்சாரம் செய்தார். விஜய் புறப்பட்டு சென்றவுடன் திடீரென மின்தடை ஏற்பட்ட நிலையில் அங்கு பங்கேற்றிருந்த பொதுமக்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் கடும் நெரிசல் ஏற்பட்ட நிலையில் அதில் சிக்கி சம்பவ இடத்திலேயே 30-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பலர் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்தது. தொடர்ந்து 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ஒரு நபர் விசாரணை ஆணையத்தை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
