தினகரனும் கூட கை கொடுக்கலையே- சசிகலாவின் அரசியல் கனவுகள் அம்போதானா? அதிமுக சலசலப்பு இனி 'கப்சிப்'?
சென்னை: சசிகலாவின் பிறந்த நாளை முன்வைத்து யூகிக்கப்பட்ட ஒன்று கூட நிகழாமல் போனதால் அவரது அரசியல் கனவுகள் என்பது ஒருகாலத்திலும் நிறைவேற சாத்தியமே இல்லை என்றே கூறப்படுகிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலா எனும் நான் என முதல்வர் பதவியேற்க கனவுகளோடு கூவத்தூரில் காத்திருந்தார். ஆனால் ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை உறுதியானது.
இதனால் 4 ஆண்டுகள் தண்டனையை பெங்களூரு சிறையில் அனுபவித்தார் சசிகலா. சிறைக்குப் போய்விட்ட நிலையில் அதிமுக எனும் ஆலமரமாக திகழும் அரசியல் கட்சியும் அவரது கையை விட்டு முற்று முழுதாக நழுவிப் போனது.

தினகரனின் ஆட்டம்
சசிகலாவின் உறவினரான தினகரன், தாம் முதல்வராக எடுத்த முயற்சிதான் சசிகலாவின் ஒட்டுமொத்த அரசியல் எதிர்காலத்துக்கும் படுபாதாள குழியை வெட்டி வைத்தது. தினகரனும் 18 அதிமுக எம்.எல்.ஏக்களும் சசிகலாவால் முதல்வராக உருவாக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதில் இருந்தே சசிகலாவின் அரசியல் அபிலாஷைகளுக்கு சமாதி கட்டப்பட்டது. அப்போது தினகரனால் ஏற்பட்ட ஆபத்தில் இருந்து தர்மயுத்தம் நடத்திக் கொண்டிருந்த ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களும்தான் எடப்பாடி பழனிசாமி அரசாங்கத்தை காப்பாற்றினர். இந்த நன்றி இன்னமும் எடப்பாடி மனதின் ஓரத்தில் இருக்கத்தான் செய்கிறது. அதை அவ்வப்போது ஓபிஎஸ்ஸுடனான மோதலின் போதெல்லாம் சொல்லி விடுகிறார் எடப்பாடி. பின்னர் அதிமுகவுக்கு எதிராக இடைவிடாமல் தினகரன் கொடுத்த குடைச்சல்கள், வழக்குகள் எல்லாம் சசிகலா குடும்பத்துக்கும் இனி அதிமுகவுக்கும் எந்த ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்ற நிலைக்கு தள்ளிவிட்டது. இனியும் அதிமுகவின் பெயரால் மல்லுக்கட்ட முடியாது என அமமுக என தனிக்கட்சியை தொடங்கினார் தினகரன். ஆனால் தினகரனின் அத்தனை நடவடிக்கைகளுமே சசிகலாவுக்கு ஏதோ ஒருவகையில் எதிரானதாகவே அமைந்து வந்தன.

ரிட்டர்ன் சசிகலா
இதனை சரிகட்டத்தான் சிறை மீண்ட சசிகலாவுக்கு தினகரன் தரப்பு 23 மணிநேர பிரமாண்ட வரவேற்பு கொடுத்து அசத்தியது. இதனையும் நம்பி தீவிர அரசியலுக்கு திரும்பப் போகிறேன் என்றார் சசிகலா. ஆனால் கொரோனா லாக்டவுன் காலம், சசிகலாவுக்கு எதிரானதாக இருந்தது. அதனால் சட்டசபை தேர்தலின் போது தீவிர அரசியலில் இருந்தே ஒதுங்குகிறேன் என்றார். சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவும்; ஒட்டுமொத்த அதிமுக தலைவர்களும் தம் வீட்டு வாசலில் தவமாய் தவமிருப்பார்கள்; கூப்பாடு போட்டு கும்பிடு போடுவார்கள்; இலகுவாகவே அதிமுக தம் வசமாகிவிடும் என இலவு காத்த கிளியாக காத்திருந்தார் சசிகலா. ஆனால் அதிமுக எனும் கட்சி எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கொங்கு மண்டலத்தின் கைகளுக்குப் போய் ஆண்டுகளாகிவிட்டன என்பதுதான் சசிகலாவுக்கு எப்படி புரியாமல் போனதோ?

பயன் தராத ஆடியோ அரசியல்
இதனால் ஆடியோ அரசியல் எனும் புதிய அவதாரத்தை தொடங்கினார் சசிகலா. வீடியோ கடை நடத்தி அரசியல் தலைவர்களுடன் நட்பை இறுக்கமாக்கிக் கொண்டதாலோ என்னவோ சசிகலாவுக்கு ஆடியோ அரசியல் மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. ஆனால் இந்த ஆடியோ அரசியலும் தமக்கு எதிராக போய்க் கொண்டிருக்கிறது என்பதையும் சசிகலா உணரவில்லை. ஒருவர் இருவர் அல்ல.. பல நூறு பேருடன் செல்போனில் பேசி அந்த ஆடியோக்களை எல்லாம் ஊடகங்களுக்கு ஏதோ தினசரி பிரஸ் ரிலீஸ் போல கொடுத்து வந்தார் சசிகலா. இதனால் அதிமுகவில் சின்ன சின்ன சலசலப்புகள் எழுந்தன. அதிமுகவில் சசிகலாவுடன் பேசியவர்கள்; போஸ்டர் ஒட்டியவர்கள் என அத்தனை பேரையும் கட்சியைவிட்டே தூக்கி அடித்தனர். இதனால் சசிகலாவை நோக்கி செல்வோர் எண்ணிக்கை சட்டென குறைந்தது. தமது ஆடியோ அரசியல் கை கொடுக்கவில்லை என்கிற போது வீடியோ அரசியலுக்கு வந்தார். டிவி சேனல்களை வலிய வரவழைத்து ஸ்பெஷல் பேட்டிகள் கொடுத்து உருக்கமாக பேசி எல்லாம் பார்த்தார். இம்மியளவு கூட அதிமுகவில் தாக்கத்தை ஏற்படுத்தாமல் போனது.

கை கொடுக்காத பிறந்த நாள்
இதனால் வேறுவழியே இல்லாமல் பிறந்த நாளை தமது ஆட்டத்துக்கான நாளான தேர்வு செய்தார் சசிகலா. இதற்காக ஒரு வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவில் தமது பிறந்த நாளை முன்னிட்டு நேரில் வரவேண்டாம்; உங்கள் பகுதிகளே நல்ல காரியங்களை செய்யுங்கள என தலைவர் ரேஞ்சுக்கு வேண்டுகோள் விடுத்தார். அத்துடன் அம்மா மக்கள் முன்னேற்றத்தைக் கலைத்துவிடும் ஒரு அறிவிப்பை தினகரனை வைத்து வெளியிடவும் சசிகலா திட்டமிட்டிருந்தார். அப்படி தினகரன் அறிவித்தால், அதிமுகவை நோக்கிய தமது பயணம் எளிதாக இருக்கும் என கணக்குப் போட்டுப் பார்த்தார் சசிகலா. வந்தது என்னவோ அவரது பிறந்த நாள் மட்டும்... கணக்குப் போட்டு காத்திருந்த எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை. சசிகலாவின் பிறந்த நாளை தினகரன் கட்சியினர் கூட கொண்டாடவில்லை. அப்படி கொண்டாடி இருந்தால் தடபுடலாக விதம் விதமான வழிகளில் பிரமிக்க வைக்கத்தக்கதாக இருந்திருக்கும் சசிகலாவின் பிறந்த நாள் பேசுபொருளாக- விவாதத்தின் தலைப்புகளாக டிவிக்களில் பேசப்பட்டிருக்கும். அதுவும் நடக்கவில்லை. தினகரன் தரப்பில் இருந்தும் எந்த அறிவிப்பும் வரவில்லை. மேலும் தமது பிறந்த நாளன்று சில மூத்த அதிமுக தலைவர்கள் தம்மை சந்திக்க வருவார்கள்; அதைவைத்து காய்நகர்த்தலாம் என நினைத்தார் சசிகலா. ஆனால் சசிகலா போனடித்தால் அவர்கள் எடுக்கவில்லை; ஏனெனில் நாம் பேசியதை பதிவு செய்து சசிகலா ஊருக்கெல்லாம் போட்டு காட்டுவாரோ என்கிற அச்சத்தில் தலைதெறிக்க ஓடிப்போனார்களாம் அவர்கள். இதனால் சசிகலாவின் அரசியல் கனவுகள் அத்தனையும் தற்போதைய நிலையில் கண்ணுக்கெட்டிய தொலைவில் சாத்தியமே இல்லை என்றே தெரிகிறது. அதிமுகவிலும் இனி சலசலப்புக்கு இடமில்லாமல் வேறு திசை நோக்கி பயணிக்கும் என்றே கூறப்படுகிறது.
-
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications