டாஸ்மாக் நச்.. தமிழ்நாட்டில் வரப்போகும் சூப்பர் மாற்றம்.. ஹைகோர்ட்டே சொல்லிருச்சு.. தமிழக அரசு சபாஷ்
சென்னை: காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இதுகுறித்து ஹைகோர்ட் பிறப்பித்த உத்தரவு என்ன?
தமிழகத்தின் வனப்பகுதிகளிலும், மலைப்பிரதேசங்களிலும் தூய்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காகவும், பாட்டில்கள் குத்தி வனவிலங்குகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும் டாஸ்மாக் தரப்பில் புதிய முறை செயல்படுத்தப்படுகிறது.

டாஸ்மாக்: அதன்படி, ரூ.10 கூடுதலாக கொடுத்து, மதுபாட்டில் வாங்கிவிட்டு, அந்த காலி பாட்டில்களை டாஸ்மாக் கடைகளிலேயே திரும்ப ஒப்படைக்கும்போது, 10 ரூபாயை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.. இந்த திட்டமானது, தற்சமயம், வனவிலங்குகள் நிறைந்த மலைப்பகுதிகளின் டாஸ்மாக் கடைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில், டாஸ்மாக் பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை, தமிழகம் முழுவதும் அமல்படுத்தும் வகையில் திட்டம் வகுக்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டிருந்தது. அதன்படியே, காலி பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தினை விரிவுபடுத்தும் நடவடிக்கையும் ஆரம்பமானது.
சபாஷ் திட்டம்: திருவாரூர், நாகை, குமரி, தேனி, தருமபுரி, கன்னியாகுமரி, மாவட்ட டாஸ்மாக் கடைகளில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது.. அதுமட்டுமல்ல, இதே திட்டத்தை தமிழகம் முழுவதும் அனைத்து மதுக்கடைகளிலும் ஏப்ரல் முதல் செயல்படுத்தும் பணியில் டாஸ்மாக் ஈடுபட்டு வருகிறது.. சில நாட்களுக்கு முன்புகூட, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த டெண்டர் விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
மதுபாட்டில்கள்: இப்படிப்பட்ட சூழலில், காலி மது பாட்டில்களை வாபஸ் பெறும் திட்டம், வரும் செப்டம்பருக்குள் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும் என்று சென்னை ஹைகோர்ட்டில் தமிழக அரசு உறுதி தெரிவித்து உள்ளது. டாஸ்மாக் கடைகளில், காலி மது பாட்டில்களை வாபஸ் பெறுவது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது..
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "கடந்த ஜனவரி முதல், கன்னியாகுமரி, திருவாரூர், தர்மபுரி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில், மது பாட்டில்களை வாபஸ் பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. வரும் மே முதல், கடலூர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களிலும், செப்டம்பருக்குள் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும்" என்றார்.
கழிவுகள்: இதையடுத்து, இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த விசாரணையை, வரும் ஏப்ரல் 4க்கு, தள்ளி வைத்துள்ளனர். நீதிமன்றத்தின் இதுபோன்ற அதிரடிகளால், மண்வளம் பாதிக்காதவகையில், பாட்டில் கழிவுகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், வன விலங்குகளின் நலனும் காக்கப்படும் என்று நம்பப்படுகிறது












Click it and Unblock the Notifications