எஸ்ஜே சூர்யா ஆப்சென்ட்.. குறுக்கு விசாரணைக்கு ஐகோர்டில் அனுமதி வாங்குங்க - வாலி வழக்கில் நீதிபதி ஆணை
சென்னை: வாலி படத்தின் இந்தி உரிமை தொடர்பான வழக்கில் நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யாவிடம் குறுக்கு விசாரணை செய்வதற்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் அனுமதி பெற்றுவர, மாஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
தமிழ் திரைப்பட இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முக திறமையை கொண்ட எஸ்ஜே சூர்யா. அஜித்தை வைத்து வாலி வாலி, விஜய்யை வைத்து குஷி, தானே நடித்த நியூ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கியவர். தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநராக திகழ்ந்த இவர் பின்னர் நடிகராக அவதாரம் எடுத்தார்.

மெர்சல், மாநாடு, டான், மார்க் ஆண்டனி, ஸ்பைடர் என தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 1999 ஆம் ஆண்டு இவர் இயக்கிய வாலி படம் நடிகர் அஜித்திற்கு பெரிய திருப்பு முனையாக அமைந்தது. இந்த படத்தின் இந்தி உரிமையை நடிகை ஸ்ரீதேவி கணவரும் தயாரிப்பாளருமான போனி கபூர் பெற்று இருந்தார்.
அதை எதிர்த்து எஸ்ஜே சூர்யா உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருந்தார். அவரது மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கதை எழுதியவருக்கே சொந்தம் என்பதற்கான எந்த ஆவணங்களையும் எஸ்ஜே சூர்யா வழங்கவில்லை என்றும் படத்தின் காப்புரிமை தயாரிப்பாளருக்கே சொந்தம் எனக் கூறி படத்தின் இந்தி ரீமேக்கை தொடங்க கடந்த 2021 ஆம் ஆண்டில் உயர்நீதிமன்றம் இடைக்கால அனுமதி வழங்கியது.
இந்த பிரதான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து எஸ்ஜே சூர்யா கடந்த மார்ச் மாதம உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்து இருந்தார். நீதிபதி எம்ஆர் ஷா முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், உயர்நீதிமன்ற விசாரணையில் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்றுக்கூறி எஸ்ஜே சூர்யாவின் மனுவை அவர் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், எஸ்.ஜே.சூர்யாவின் சாட்சியத்தை பதிவு செய்ய மாஸ்டர் நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள நான்காவது மாஸ்டர் கோர்ட் நீதிபதி முன் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி ஆஜரான இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா ஆஜராகி 2.30 மணிநேரம் சாட்சியம் அளித்தார்.
குறுக்கு விசாரணை நிறைவடையாததால் வழக்கு தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு மீண்டும் 4 வது மாஸ்டர் நீதிமன்றத்தின் நீதிபதி கின்ஸ்லி கிறிஸ்டோபர் முன்பு விசாரணைக்கு வந்தது. ஆனால், இன்று எஸ்.ஜே.சூர்யா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனை அடுத்து, உயர் நீதிமன்றம் அளித்த கால அவகாசம் முடிந்து விட்டதால், எஸ்.ஜே சூர்யாவிடம் குறுக்கு விசாரணை செய்ய சென்னை உயர் நீதிமன்றத்தின் அனுமதி பெற்றுவர மாஸ்டர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications