விடுதலைப் புலிகள் விவகாரத்தில் யார் அத்தாரிட்டி? திருமாவளவன் மீது கடும் அதிருப்தியில் மதிமுக!
விடுதலைப் புலிகள் விவகாரத்தில் திருமாவளவனுக்கு எதிராக மதிமுகவினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு யார் நெருக்கமானவர் என்ற விவகாரத்தில் ஆளும் திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மீது மற்றொரு கூட்டணி கட்சியான மதிமுக நிர்வாகிகள் கடும் கொந்தளிப்பை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அறிவித்திருந்தார். அது முதலே விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ்நாட்டில் மீண்டும் பேசு பொருளாகி இருக்கிறது.
பிரபாகரன் உயிருடன் இருக்கவே முடியாது என திருமாவளவன், வைகோ, சீமான் ஒருமித்த குரலில் கூறுகின்றனர். ஆனால் நெடுமாறன், பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்; விரைவில் ஆதாரங்கள் வெளியிடப்படும் என விடாமல் கூறி வருகிறார்.
இப்பின்னணியில் டிவி சேனல் ஒன்றுக்கு திருமாவளவன், விடுதலைப் புலிகள் தொடர்பாக பேட்டி கொடுத்திருந்தார். அப்பேட்டியில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் தம்மை ஈழத்துக்கு அழைத்தது பற்றி விவரித்திருந்தார் திருமாவளவன். மேலும் அந்தப் பேட்டியில் வைகோவை பிரபாகரன் அழைக்கவில்லை என்கிற தொனியில் திருமாவளவன் கூறிவிட்டதாக குமுறுகின்றனர் மதிமுக நிர்வாகிகள்.
இந்தப் பேட்டியை முன்வைத்து விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மதிமுகவும் வைகோவும் செய்தது என்ன என்பதை பட்டியலிட்டு பதிவுகளைப் போட்டு வருகின்றனர் மதிமுகவினர்.

Thayagam Suresh என்பவர் இது தொடர்பாக திருமாவளவனுக்கு எழுதிய பதில்: சத்யம் தொலைக்காட்சியின் நிருபர் முக்தாருக்கு நீங்கள் அளித்திருந்த சமீபத்திய காணொளி பேட்டியை கண்டதையொட்டி சிலவற்றை எழுதுகிறேன்.!!! அதிலே பெயரை சொல்லியும் சொல்லாமலும் ஈழ விடுதலைக்காக, புலிகள் இயக்கத்திற்காக ஈகை பல புரிந்த சில அரசியல் தலைவர்களையும், ஈழ அரசியலை வைத்து ஈனபிழைப்பு நடத்தும் சில கேடுகெட்ட பயல்களையும் ஒரே தட்டில் வைத்து பேசுவது போல் உங்கள் தொனியிருந்ததை கண்டு எங்கள் தலைவர் வைகோவின் ஈடில்லா தியாக பணிகளை நான் இங்கே சொல்லிட வேண்டிய அவசியமாகியிருக்கிறது.!!! 1989ல் வவுனியாவிற்கு உயிரையும் பொருட்படுத்தாது பயணிக்க துவங்கியது துவங்கி, கடைசியாக வி.பு. இயக்கத்தின் மீதான தடையை எதிர்த்து தீர்ப்பாயத்தில் வாதாடிவிட்டு வந்திருப்பது வரை சுயநலமின்றி போராடி வருகிற எங்கள் தலைவரை பற்றி நாங்கள் தானே சொல்லியாக வேண்டும்.!!!
தமிழ்நாட்டு அரசியலில் அதிதீவிர ஈழ அரசியல் ஆதரவு தளத்தில் நின்று போராடி அதற்காக மிக அதிகமான இழப்புகளை சந்தித்தவர் எங்கள் தலைவர் வைகோ அவர்கள் என்பதை உங்கள் மனசாட்சியும் அறியும் அண்ணன் திருமா அவர்களே.!!! மற்றவர்களுக்கெல்லாம் ஈழ ஆதரவு அரசியல் முழக்கமோ அல்லது அரசியல் லாபமாகவோ மட்டும் இருந்த இருக்கிற காலத்தில், எங்கள் தலைவர் மட்டும் தான் அவர்களின் போராட்ட களத்திற்க்கே சென்று போராளிகளுடனே நின்றார்.
வி.பு. இயக்கத்தின் தலைவர் இவர் மீது கொண்டிருந்த பெருமதிப்பும் பேரன்பும் பெருநம்பிக்கையும் உலகம் அறியும். அதற்கு சாட்சிகளாக பலவற்றை வரலாறு தன்னுள் பதித்து வைத்துள்ளது.!!! முப்பத்தியேழு காயப்பட்ட போராளிகளை சிகச்சைக்காக அனுப்பிய போது அதை செய்து முடித்து அதற்காக தன் வீட்டையே ஒன்றரை ஆண்டுகள் போராளிகளின் மருத்துவ சிகிச்சை பாதுகாப்பு களமாக்கியவர் எங்கள் தலைவர் வைகோ அவர்கள். அதற்கு கிடைத்த பரிசு தான் அவரின் தம்பி வை.ரவிச்சந்திரனுக்கு ஓராண்டு தடா சட்டத்தின் ஊடான சிறைத்தண்டனை.!!! கைகளையும் காலையும் இழந்த போராளி ஒருவனை இயற்கை உபாதைகளை கழிக்க தூக்கி சென்று அந்த கழிவறையையும் சேர்த்து சுத்தப்படுத்தி இன கடமை செய்த மனிதருக்கு கைகளிலும் கால்களிலும் சங்கிலி பூட்டி நீதிமன்றம் கொண்டு வரப்பட்டவர் தான் அண்ணன் வை.ரவிச்சந்திரன் அவர்கள் என்கிற உண்மையை இந்த உலகம் இன்னும் முழுமையாக அறியவில்லை. காரணம், எங்கள் தலைவர் வைகோ இதை அரசியல் சுயநலத்திற்காக பயன்படுத்தி கொள்ள நினைத்ததில்லை. இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் ஈழ விவகாரங்கள் குறித்து ஒன்றல்ல இரண்டல்ல 63 கவன ஈர்ப்பு தீர்மானங்களை கொண்டு வந்த ஒரே தலைவர் எங்கள் தலைவர் வைகோ அவர்கள். நேற்றும் ஆதரித்தேன், இன்றும் ஆதரிக்கிறேன், நாளையும் ஆதரிப்பேன் என வீதியில் அல்ல, நீதிமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் பேசி அதற்காக அஞ்சி பதுங்கிடாது பொடா சட்டத்தினால் 18 மாதங்கள் தொடர் சிறை தண்டனை அனுபவித்தவர் எங்கள் தலைவர் வைகோ அவர்கள் என நீள்கிறது அந்த நீண்டப் பதிவு.
என வீதியில் அல்ல, நீதிமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் பேசி அதற்காக அஞ்சி பதுங்கிடாது பொடா சட்டத்தினால் 18 மாதங்கள் தொடர் சிறை தண்டனை அனுபவித்தவர் எங்கள் தலைவர் வைகோ அவர்கள் என நீள்கிறது அந்த நீண்டப் பதிவு.












Click it and Unblock the Notifications