தமிழ்நாட்டுக்கு எதிராக கர்நாடகா காங். அரசு: காவிரி கானல் நீராகுமோ? மேகதாது அணை- என்ன பிரச்சனை?
Subscribe to Oneindia Tamil
சென்னை: காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டியே தீருவோம் என தமிழ்நாட்டுக்கு எதிராக பிடிவாதமாக இருக்கிறது கர்நாடகாவில் ஆட்சியில் அமர்ந்துள்ள காங்கிரஸ் அரசு. கர்நாடகா காங்கிரஸ் அரசின் இந்த தமிழ்நாட்டுக்கான துரோகத்தால் காவிரி நீர் கானல் நீராகி, காவிரி படுகை பாலைவனமாககும் என்பது தமிழ்நாட்டு மக்களின் பேரச்சம்.

மேகதாது அணை என்பது என்ன?
- கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கட்டப்படுகிற அணை
- கர்நாடகாவின் கனகபுரா தொகுதியில் இந்த மேகதாது அணை கட்டப்படும்.
- கர்நாடகா துணை முதல்வரும் நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவகுமாரின் சொந்த ஊர்தான் கனகபுரா.
- ரூ9,000 கோடி மதிப்பீட்டில் மேகதாது அணை கட்ட கர்நாடகா தீர்மானித்துள்ளது.
- பெங்களூர் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளின் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்ய மேகதாது அணை கட்டப்படுகிறது என்பது கர்நாடகா வாதம்
- மேகதாது அணை கட்டப்பட்டால் தேக்கி வைக்கப்படும் நீரில் இருந்து 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவும் கர்நாடகா திட்டம்.
மேகதாது அணை பிரச்சனை என்ன?
- மேகதாது அணையை தங்களது மாநில எல்லைக்குள் கட்டுகிறோம் என்கிறது கர்நாடகா.
- மேகதாது அணையில் நீர்தேக்கி வைக்கப்பட்டால் தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களும் பயனடையும் என்பது கர்நாடகா வாதம்.
- காவிரி நதிநீரை திசைதிருப்பி தங்களுடைய மாநிலத்திலேயே தேக்கி வைக்கும் கர்நாடகாவின் முயற்சி என்கிறது தமிழ்நாடு.
- கர்நாடகா தற்போது காவிரியின் குறுக்கே கட்டப்பட்ட அணைகள் மூலம் 104.59 டிஎம்சி நீர் பெறுகிறது; 67.14 டிஎம்சி கொள்ளளவு கொண்ட மேகதாது அணை கட்டப்பட்டால் கர்நாடகா மொத்தம் 171.73 டிஎம்சி காவிரி நீரை தேக்கி வைத்துக் கொள்ளும். இதனால் சொட்டு காவிரி நீர் கூட கிடைக்காது என தமிழ்நாடு கடுமையாக எதிர்க்கிறது.
- தமிழ்நாடு சட்டசபையிலும் மேகதாது அணைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கர்நாடகாவும் மேகதாது அணை கட்ட தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது
இப்போது என்ன நடக்கிறது?
- மே 30: நீர்வளத்துறை அமைச்சர் என்ற அடிப்படையில் துணை முதல்வர் டிகே சிவகுமார் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி மேகதாது அணை கட்டுமானம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். கர்நாடகா முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவகுமார் ஆகியோர் ஏற்கனவே மேகதாது அணை கட்ட கோரி பாதயாத்திரை நடத்தியவர்களும் ஆவர்.
- மே 30: டிகே சிவகுமாரின் மேகதாது அணை கட்டுமான அறிவிப்புக்கு தமிழ்நாடு அரசு கடும் கண்டனங்களைத் தெரிவித்தது. தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆகியோர் கண்டனங்கள் தெரிவித்தனர். தமிழ்நாட்டு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கர்நாடகாவின் முயற்சிக்கு எதிராக கொந்தளிப்பான அறிக்கைகளை வெளியிட்டனர். மேகதாது அணையை கர்நாடகா கட்டினால் தமிழ்நாடு பாலைவனமாகும் என எச்சரிக்கை விடுத்தனர் தமிழ்நாட்டு தலைவர்கள்.
- ஜூன் 1: மேகதாது அணை கட்ட முந்தைய பாஜக அரசுரூ1,000 கோடி நிதி ஒதுக்கியது. அது செலவு செய்யப்படவில்லை என டிகே சிவகுமார் கூறினார். தமிழ்நாட்டுடன் மோதல் போக்கை கடைபிடிக்கவில்லை; தமிழ்நாடும் தாராள மனதுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றார் டிகே சிவகுமார்.
தமிழ்நாடு அரசு சொல்லும் வாதம் என்ன?
- மாநிலங்களுக்கு இடையே பாயும் நதிகள் தொடர்பான பிரச்சனையில், ஒரு அணையை கட்டுவதற்கு பாசன வசதி பெறுகிற கீழ்பகுதியின் ஒப்புதல் (கடைமடை நிலம்- தமிழ்நாடு) கட்டாயம் தேவை என்பது விதி. இதனை கர்நாடகா மீறுகிறது என்கிறது தமிழ்நாடு.
- மேகதாது அணையை கர்நாடகா கட்டிவிட்டால் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படியான நதிநீர் பங்கீடு என்பது கேள்விக்குறியாகிவிடும் என்பதும் தமிழ்நாட்டின் அச்சம்.
- ஏற்கனவே 2007-ம் காவிரி நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பில் தமிழ்நாட்டு வழங்கப்பட்ட காவிரி நீர் பகிர்வு அளவானது 2018-ல் உச்சநீதிமன்றத்தால் கணிசமாக குறைக்கப்பட்டது. தற்போது மேகதாது அணையும் கட்டப்பட்டுவிட்டால் தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் கானல் நீராகிவிடும் என்பது தமிழ்நாட்டின் அச்சம்.
கசப்பான அனுபவங்கள்
- 1991-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டுக்கு காவிரியில் ஆண்டுக்கு 205 டி.எம்.சி தண்ணீர் வழங்க காவிரி நடுவர் மன்றம் இடைக்காலத் தீர்ப்பு வழங்கியதற்கு எதிராக கர்நாடகாவில் மிகப் பெரும் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. கர்நாடகாவில் தமிழர்கள் இலக்கு வைத்து படுகொலை செய்யப்பட்டனர். தமிழர்களின் பல நூறு கோடி சொத்துகள் சூறையாடப்பட்டன. இந்த வன்முறையில் 16 தமிழர்கள் கர்நாடகா மக்களால் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது ஆட்சியில் இருந்தது காங்கிரஸ். முதல்வராக இருந்தவர் பங்காரப்பா.
- 2016-ம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 15,000 கன அடிநீரை காவிரியில் திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து மீண்டும் வன்முறை சம்பங்கள் நிகழ்ந்தன. மீண்டும் தமிழர்களின் சொத்துகளை குறிவைத்து சூறையாடினர் கன்னடர்கள். அப்போது தமிழர்கள், கர்நாடகாவில் இருந்து அகதிகளாக தமிழ்நாட்டுக்கு உயிரை பணயம் வைத்து தப்பி ஓடி வந்தனர். அத்துடன் தமிழருக்கு சொந்தமான 56 ஆம்னி பேருந்துகள் தீக்கிரையாக்கப்பட்டன. அப்போதும் காங்கிரஸ் அரசுதான். டிகே சிவகுமார் அப்போதும் அமைச்சராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications