கடந்த ஆண்டை போலவே நவமியில் திறக்கப்பட்ட மேட்டூர் அணை..மூட நம்பிக்கையை தகர்த்த முதல்வர்
சென்னை: குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை இன்று திறக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் நவமி திதி நாளில் அணை திறக்கப்பட்டுள்ளது. பருவமழை அபரிமிதமாக பெய்து ஓராண்டுக்கும் மேலாக அணை 100 அடிக்கும் குறையாமல் தண்ணீர் இருந்து வரும் நிலையில் இந்த ஆண்டும் கடைமடை வரை தண்ணீர் சென்று சேர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு கோடை காலத்தில் பெய்த கனமழையால் காவிரியில் பெருவெள்ளம் வரவே மேட்டூர் அணை மளமளவென நிரம்பியது. அணையின் நீர்மட்டம் 118 அடியை எட்டவே பாதுகாப்பு கருதி கடந்த ஆண்டு மே 24ஆம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணை திறக்கப்பட்ட நாள் நல்ல நாள் இல்லை என்றும் அதனால் பாதிப்புகள் வர வாய்ப்பு உள்ளதாகவும் ஜோதிடர்கள் கருத்து கூறினர்.
பொதுவாகவே எந்த ஒரு நல்ல காரியத்தையும் அஷ்டமி நவமி திதியில் தொடங்க மாட்டார்கள். அதுவும் மூன்று போகம் விளையக்கூடிய காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்பட்ட அணையை செவ்வாய்க்கிழமை நாளில் நவமி திதியில் திறந்திருக்கக் கூடாது என்றும் அதனால் விவசாயம் பாதிக்க வாய்ப்பு உள்ளதாகவும் ஜோதிடர்கள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு பருவமழை அபரிமிதமாக கொட்டித்தீர்த்தது. அணைகள் நிரம்பி வழிந்தன.
முதல்வர் மு.க ஸ்டாலின் தேர்தலின் போது வேட்பாளர்களை அறிவித்தது முதல் வேட்பு மனு தாக்கல் செய்தது, பதவி ஏற்றுக்கொண்டது என எல்லாமே நல்ல நாள் பார்த்து ஜோதிட ஆலோசனை பெற்றே செய்ததாக தகவல் வெளியானது. இப்போதும் முக்கிய அறிவிப்புகளை நல்ல நாள் பார்த்துதான் வெளியிடுகின்றனர்.

சிம்ம ராசிக்காரர் ஸ்டாலின் பதவியேற்ற போது குருவின் ஆசியும், சனிபகவானின் ஆசியும் கிடைத்தது. அதுவே வெற்றிகளை குவிக்க காரணமாக இருந்தது. இப்போது குருபகவான் பார்வையும் சனி பகவானின் பார்வையும் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கிறது. கண்டச்சனி, பாக்ய குரு காலமாகும்.
என்றாலும் இன்றைய தினம் சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டம காலமாகும்.
நாட்டின் மன்னர்களோ, தலைவர்களோ நல்ல காரியங்களை தொடங்கும் போது நல்ல நாள், திதி, ஹோரை பார்த்துதான் தொடங்குவார்கள். ஆள் செய்யாததை நாள் செய்யும் என்று சொல்வார்கள். தமிழக முதல்வரோ மாநிலத்திற்கு சுபிட்சத்தை தரக்கூடிய விவசாய பணிக்கு தண்ணீர் திறந்து விடும் போது நல்ல நாள் பார்க்காமல் திறந்து விட்டு விட்டதாகவும் ஜோதிடர்கள் கருத்து கூறினார். கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் நவமி திதியில் மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது.

நவமி திதி, சந்திராஷ்டம நாள் என எதைப்பற்றியும் கவலைப்படாமல் குறிப்பிட்ட தேதியில் மேட்டூர் அணையை திறந்து வைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். திமுக அரசுக்கு இயற்கையின் ஆசி உள்ளதால்தான் மேட்டூர் அணை நீர் இருப்பு 100 அடிக்கும் மேல் உள்ளது பெருமையுடன் கூறியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். கடந்த ஆண்டு நெல் சாகுபடியில் சாதனை படைக்கப்பட்டதாகவும் இந்த ஆண்டும் விவசாயிகள் நலனுக்காக சரியான நாளில் அணை திறக்கப்பட்டதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காவிரி தண்ணீர் கடைமடை வரை சென்று சேருவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications