எம்ஜிஎம் குழுமத்தில் ஐடி ரெய்டு.. ரூ.400 கோடி வரி ஏய்ப்பு.. வருமான வரித்துறை அறிக்கை..!
சென்னை: எம்ஜிஎம் குழுமம் ரூ.400 கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
எம்ஜிஎம் குழுமம் தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் கடந்த 4 நாட்களாக சோதனை நடத்தினர். பொழுதுபோக்கு பூங்கா, ஹோட்டல், நட்சத்திர விடுதி, மதுபான தொழிற்சாலை, வர்த்தக நிறுவனம், தொழில் நிறுவனம், சரக்கு போக்குவரத்து உட்பட பல்வேறு நிறுவனங்களை எம்ஜிஎம் குழுமம் நடத்துகிறது.

இந்த குழுமம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகம், உரிமையாளர் வீடு, உறவினர்கள் வீடு, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஹோட்டல்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. சென்னை, திண்டிவனம், காஞ்சிபுரம், நெல்லை, பெங்களூரு ஆகிய நகரங்களில், எம்.ஜி.எம் குழுமத்துக்குச் சொந்தமான சுமார் 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.
இந்நிலையில், விழுப்புரத்தில் உள்ள எம்ஜிஎம் குழுமத்துக்கு சொந்தமான மதுபான ஆலையில் வருமான வரித் துறை அதிகாரிகள் 15 பேர் கொண்ட குழு சோதனை மேற்கொண்ட போது, வரி ஏய்ப்பு தொடர்பான பல்வேறு முக்கிய ஆவணங்களை சிக்கியதாக தகவல் வெளியாகியது. இக்குழுமம் வெவ்வேறு பெயர்களில் நிறுவனங்களை நடத்தி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதா என்றும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்தநிலையில் எம்ஜிஎம் குழுமம் தொடர்புடைய இடங்களில் செய்யப்பட்ட சோதனை குறித்து வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், எம்ஜிஎம் குழுமம் ரூ.400 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 4 நாட்களாக நடத்தப்பட்ட சோதனையில் ரூ.3 கோடி பணம், ரூ.2.5 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் எம்ஜிஎம் குழுமம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதற்கான டிஜிட்டல் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications