சென்னையில் பால் தட்டுப்பாடு.. மக்களின் கோபத்துக்கு ஆளாகாதீங்க.. தமிழக அரசை எச்சரித்த அன்புமணி
சென்னை: சென்னை மாநகரில் பால் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், விரக்தியில் உள்ள மக்கள் கோபமாகும் முன் அதனை தீர்க்க வேண்டும் எனவும் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையால் சென்னை வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது சென்னையில் மழை என்பது இல்லை. நேற்று முதல் மழை இல்லாத நிலையில் தண்ணீரை வெளியேற்றும் பணியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதோடு வெள்ளப்பாதிப்பு பகுதிகளில் உள்ள மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும் இன்றும் சென்னையின் பெரும்பாலான இடங்களில் மழைநீர் அப்படியே உள்ளது. இந்நிலையில் தான் கடைகள், ஓட்டல்கள் இல்லாத நிலையில் மக்களுக்கு உணவு பொருட்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் பால் பாக்கெட்டுகள் இன்றியும் மக்கள் தவித்து வருகின்றனர். பால் பிரச்சனையை போக்க ஆவின் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தாலும் கூட ஏராளமான மக்களை சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் சென்னை மாநகரில் பால் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது: மிக்ஜாம் புயல் காரணமாக மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடிப்படைத் தேவையான பால் கிடைக்கவில்லை.
ஒரு சில இடங்களில் பால் கிடைத்தாலும் ரூ.25 மதிப்புள்ள பால் பாக்கெட் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. மழையால் உணவு கிடைக்காத நிலையில் பால் மட்டு்மே பசியைப் போக்கும் தீர்வாக உள்ளது. குறிப்பாக குழந்தைகள் உள்ள குடும்பங்களில் பால் தவிர்க்க முடியாத தேவையாக உள்ளது. ஆனால், பால் பாக்கெட்டுகளைக் கூட தடையின்றி வழங்க ஏற்பாடு செய்யப்படாதது வருத்தமளிக்கிறது.
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு இன்று இரண்டாவது நாளாக பால் இலவசமாக வழங்கப்படும் என்று தலைமைச் செயலாளர் அறிவித்திருந்தாலும் கூட, பெரும்பான்மையான பகுதிகளில் பால் வழங்கப்படவில்லை. சில பகுதிகளில் மட்டும் அரசு சார்பில் வழங்கப்பட்ட பால் பாக்கெட்டுகளை தாங்கள் வழங்குவதாகக் கூறி ஒரு சில வீடுகளுக்கு மட்டும் திமுகவினர் வழங்கினார்கள்.
கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் 90% வீடுகளுக்கு அரசால் அறிவிக்கப்பட்ட இலவச பால் வழங்கப்படவில்லை. ஆவின் பால் விற்பனை நிலையங்களில் பால் வாங்குவதற்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்துக் கிடக்கின்றனர். அவர்களில் பெரும்பான்மையினர் பால் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை தான் காணப்படுகிறது. மக்களின் விரக்தியும், ஏமாற்றமும் கோபமாக மாறுவதற்கு முன் பால் தட்டுப்பாடு போக்கப்பட வேண்டும். அனைத்து பகுதிகளிலும் மக்களுக்கு தேவையான அளவு பால் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்'' என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications