அய்யோ மணிரத்னமா.. அவர் வேண்டாம்னு சொன்னேன்.. பொன்னியின் செல்வன் விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு
சென்னை : 'பொன்னியின் செல்வன்' படத்தை இயக்க மணிரத்னம் சரியாக வரமாட்டார் என்று சொன்னேன், ஆனால், படத்தைப் பார்த்து பிரம்மித்துப் போனேன் என பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஆடியோ வெளியீட்டு விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற பொன்னியின் செல்வன்-2 இசை வெளியீட்டு விழாவில் அமைச்சர் துரைமுருகன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
இந்தப் படம் குறித்துப் பேசிய துரைமுருகன், படம் எடுப்பதற்கு முன்பு, தயாரிப்பாளர் சுபாஷ்கரனுடன் தான் பேசியது குறித்து மேடையில் பகிர்ந்துகொண்டார்.

பொன்னியின் செல்வன்
மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவான 'பொன்னியின் செல்வன்' முதல் பாகம், கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி உலகெங்கிலும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. லைகா புரொடக்சன்ஸ் - மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து இப்படத்தை தயாரித்திருந்தனர். இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு ஏற்கெனவே அறிவித்தது. கடந்த 20ஆம் தேதி, பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் முதல் பாடலான 'அக நக' வெளியானது.

இசை வெளியீட்டு விழா
இந்நிலையில் பொன்னியின் செல்வன் - 2 படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று பிரமாண்டமாக சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினர், திரையுலக பிரபலங்கள் என ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். இதில் சிறப்பு விருந்தினராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டார்.

அவரா.. வேண்டாம் என்றேன்
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், "ஒரு வரலாற்று கதையை வரலாற்றில் நிற்கும் அளவில் படமாக்கிய அனைவருக்கும் நன்றி. நான் கல்லூரி படிக்கின்ற காலத்தில் பலமுறை பொன்னியின் செல்வன் படித்திருக்கிறேன். இந்த நாவலை படமாக்குவதாக சுபாஷ்கரன் என்னிடம் கூறினார். இயக்குனர் யார் என்று கேட்டேன். மணிரத்னம் என்று சொன்னார். தப்பா எடுத்துக்காதீங்க.. மணிரத்னம் இந்த வரலாற்று கதைக்கு ஒத்துவர மாட்டார் என்றேன். அவர் இருட்டிலேயே படம் எடுப்பவர். அவர் வேண்டாம் என்றேன்.

சல்யூட் அடித்தேன்
ஆனால் பொன்னியின் செல்வன் படத்தைப் பார்த்துவிட்டு பிரம்மித்துப் போய் அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டுவிட்டேன். படம் பார்த்ததும் உடனடியாக வீட்டில் இருந்தே சல்யூட் அடித்தேன். வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் கார்த்தி சிறப்பாக நடித்துள்ளார். எனது தொகுதிக்குட்பட்ட திருவலம் என்ற ஊர்தான் வந்தியத்தேவனின் ஊர். அதனால் அதில் எனக்கு ஒரு மகிழ்ச்சி." எனப் பேசினார்.

என் பேச்சைக் கேட்காமல்
மேலும் பேசிய துரைமுருகன், "கமல்ஹாசனுக்கு கருணாநிதி கலைஞானி என பெயரிட்டார். அவருக்கு இணையானவர் திரையுலகில் இன்றைக்கு இல்லை. என்றைக்கும் இல்லை. எனது பேச்சைக் கேட்காமல் இப்படத்தை எடுத்து வெற்றி கண்ட சுபாஷ்கரனுக்கு வாழ்த்துகள். ஒரு படத்தின் மூலம் ஒரு தமிழ் மன்னனை அறிமுகப்படுத்திய பெருமை சுபாஷ்கரனை சேரும். முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் இரண்டு மடங்கு ஓடும்" என்றார்.












Click it and Unblock the Notifications