ஞாயிற்றுக்கிழமை ஓய்வு கிடையாது! அதிகாரிகளுடன் ஆய்வு! திட்டப்பணிகள் பற்றி குடைந்தெடுத்த துரைமுருகன்!
சென்னை: ஞாயிற்றுக்கிழமையான இன்று கூட தலைமைச் செயலகம் சென்று நீர்வளத்துறை அதிகாரிகளை வரவழைத்து துறைரீதியிலான திட்டப்பணிகள் பற்றி ஆய்வு நடத்தியிருக்கிறார் அமைச்சர் துரைமுருகன்.
ஆய்வின் போது அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுரைகள் வழங்கிய அவர், திட்டப்பணிகள் எந்த நிலையில் உள்ளது என்பது பற்றி கேள்விகளால் குடைந்தெடுத்திருக்கிறார்.
நீர் வழித்தடங்களில் தண்ணீர் தங்கு தடையின்றி விரைந்து செல்லும் வகையில் அனைத்து அலுவலர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறார்.

நீர் வளத்துறை
நீர் வளத்துறையின் செயல்பாடுகள், துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம், புதியதாக செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள் ஆகியவை குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் மூன்றாம் நாளாக நடைபெற்றது. நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா இக்கூட்டத்திற்கு முன்னிலை வகித்து திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து விளக்கம் அளித்தார்.

அமைச்சர் துரைமுருகன்
தமிழ்நாடு முழுவதும் உள்ள நீர்நிலைகளை புனரமைத்து, தூர்வாரி, நீரின் கொள்ளளவை அதிகப்படுத்துதல், புதிய நீர்நிலைகளை உருவாக்குதல், மழை நீர் மூலம் கிடைக்கும் நீரை முழுமையாக சேமித்து பயன்படுத்த அணைகள் இல்லாத மாவட்டங்களில் புதிய நீர் சேமிப்பு கட்டுமானங்கள், குறிப்பாக தடுப்பணைகளை உருவாக்குதல் ஆகியவை குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அமைச்சர் துரைமுருகன் கேட்டறிந்தார்.

நீர் நிலைகள்
கடந்த ஆண்டுகளில் எடுக்கப்பட்டு முடிக்கப்பட்டப் பணிகள், முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளப் பணிகள், அப்பணிகளை நிறைவேற்றுவதில் உள்ள பிரச்சினைகள், வரும் நிதி ஆண்டில் முன்னுரிமை அடிப்படையில் எடுத்துக்கொள்ளப்பட உள்ள திட்டங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பத்தை நீர் நிலைகள் மேம்பாட்டிற்கு பயன்படுத்துவதற்கான திட்டங்கள் ஆகியவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

வெள்ளத்தடுப்பு
பிற துறைகளின் ஒத்துழைப்பு மற்றும் அனுமதியுடன் நிறைவேற்றப்பட்டு வரும் மற்றும் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள், திட்டப்பணிகளுக்காக நிலம் கையகப்படுத்துவதில் உள்ளப் பிரச்சினைகள், நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், வரும் காலங்களில் புதிய மணல் குவாரிகளை துவக்குதல், நிரந்தர மற்றும் தற்காலிக வெள்ளத்தடுப்புப் பணிகளின் முன்னேற்றம் ஆகியவை குறித்தும் ஆய்வின் போது ஆலோசிக்கப்பட்டது.

அதிகாரிகளுக்கு அறிவுரை
நபார்டு வங்கியின் நிடா நிதியுதவியுடன் நடைபெறும் திட்டங்கள் ஒன்றிய அரசின் நிதியுதவி பெற தகுதியுடைய திட்டங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இவ்வாய்வின் பொழுது தமிழகம் முழுவதும் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நீர் நிலைகள் மற்றும் நீர் வழித்தடங்களில் உள்ள கருவேல மரங்களை உடனடியாக அகற்றி தண்ணீர் தங்கு தடையின்றி விரைந்து செல்லும் வகையில் அனைத்து அலுவலர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் அறிவுரை வழங்கினார்.












Click it and Unblock the Notifications