ஐ.பி.செந்தில்குமாருக்கு முருகன் தான் அருள் புரியனும்! சட்டசபையில் துரைமுருகன் பேச்சால் சிரிப்பலை!
சென்னை: திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமாருக்கு முருகன் தான் அருள் புரிய வேண்டும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியது பேரவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
இதனிடையே துரை முருகனாக இருக்கக்கூடிய அமைச்சர் தான் தனது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றும் தாம் எழுப்பிய கேள்விக்கு நீண்டதொரு வரலாற்றுத் தகவல்களுடன் கூடிய விளக்கம் அளித்தமைக்காக அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் கூறியிருக்கிறார்.
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அளித்த பதில் தனக்கு நம்பிக்கை ஒளி கொடுத்துள்ளதாக பழனி தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்குமார் கூறினார்.

சட்டசபை கூட்டம்
தமிழக சட்டசபையில் உணவு மற்றும் கூட்டுறவுத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் இன்று நடைபெறுகிறது. முன்னதாக கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்கள் எழுப்பிய வினாக்களுக்கு சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள் பதிலளித்தனர். அந்த வகையில் பழனி தொகுதியில் அமைந்துள்ள பச்சையாறு -வண்ணாத்திஓடை இடையே புதிய அணை அமைக்கும் திட்டம் குறித்து ஐ.பி.செந்தில்குமார் கேள்வி எழுப்பினார்.

அமைச்சர் துரைமுருகன்
அதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பச்சையாறு அணை திட்டத்தை பொறுத்தவரை அது பெரிய சோகக்கதை என்றும் பச்சையாற்றில் அணை கட்ட வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை இருந்து வருவதாகவும் ஆனால் அதனை சி.எல்.ஏ. நிராகரிப்பு செய்த வரலாற்றுத் தகவல்களையும் புள்ளி விவரங்களுடன் ஆண்டு வாரியாக விளக்கிக் கூறினார்.

மொத்த உறுப்பினர்கள்
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் எந்தவொரு பேப்பரையும் பார்க்காமல் வரலாற்று தகவல்களை மொத்தமாக கடகடவென கொட்டியதால், அவரது பதிலுரையை அதிமுக உட்பட மொத்த உறுப்பினர்களும் உன்னிப்பாக கவனித்தனர். மொத்தத்தில் பச்சையாறு அணை திட்டத்தை பொறுத்தவரை தனது கையில் ஒன்றுமில்லை என்று கூறிய அமைச்சர் துரைமுருகன், பேச்சை சற்றே நிறுத்தியவாறு அருகில் அமர்ந்திருந்த முதல்வரை திரும்பிப் பார்த்தார்.

முருகன் அருள்
இதன் மூலம் இந்த விவகாரத்தில் முதலமைச்சர் தான் முடிவெடுக்க முடியும் என்பதை சூசகமாக தெரிவித்தார் அமைச்சர் துரைமுருகன். இறுதியில் தனது இருக்கையில் அமர்வதற்கு முன்னர், பழனி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தம்பி செந்தில்குமாருக்கு முருகன் தான் அருள் புரியனும் எனக் கூறியது பேரவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. அமைச்சருக்கு நன்றி தெரிவிக்க எழுந்த ஐ.பி.செந்தில்குமார் எம்.எல்.ஏ., நீங்களும் துரை முருகன் தான் அருள் புரிய வேண்டும் என பேசினார். இதனால் அவை கலகலப்பாகியது.












Click it and Unblock the Notifications