ஜப்பான் நிதி உதவி! 2023 பிப்ரவரி வரை தான் டைம்! கெடு விதித்த அமைச்சர் எ.வ.வேலு! ஆடிப்போன அதிகாரிகள்!
சென்னை: ஜப்பான் நிதி உதவியுடன் நடைபெற்று வரும் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை 2023 பிப்ரவரி மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலு கெடு விதித்துள்ளார்.
தமிழகத்தில் கட்டப்படும் மருத்துவமனை கட்டிடங்களுக்கு ஜப்பான் எப்படி நிதி உதவி செய்கிறது என்ற சந்தேகம் பலருக்கும் எழலாம்.
ஆனால் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை நிதி (JICA) பங்களிப்புடன் தமிழகத்தில் 7 இடங்களில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது தான் உண்மை.

ஜப்பான் நிதி
தமிழகத்தில் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை நிதி (JICA) மற்றும் மாநில நிதி பங்களிப்புடன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் நவீன சிகிச்சைக்கான கூடுதல் கட்டடங்கள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டப் பணிகள் சுமார் ரூ.477.70 கோடி மதிப்பீட்டில், சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை, சேலம் மாவட்டம், அம்மாபேட்டை அரசு மருத்துவமனை, திருநெல்வேலி மாவட்டம், கண்டியப்பேரி அரசு மருத்துவமனை, திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அரசு மருத்துவமனை மற்றும் திருப்பூர் மாவட்டம், வேலம்பாளையம் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் நடைபெற்று வருகின்றன.

அமைச்சர் எ.வ.வேலு
இத்திட்டப் பணிகளின் தற்போதைய நிலை குறித்தும், பணிகளை விரைவில் முடித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை நிதி (JICA) உதவியுடன் நடைபெறும் அனைத்து மருத்துவமனை கட்டடங்களும் விரைவாக கட்டி முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

எந்த நிலையில் பணிகள்?
திருவள்ளூர் மாவட்ட ஆவடி அரசு மருத்துவமனையில், நான்கு தளங்கள் கட்டி முடிக்கப்பட்டு நிறைவடையும் தருவாயில் உள்ளது. திருநெல்வேலி கண்டியப்பேரி அரசு மருத்துவமனையில் கட்டட உட்புற பணிகள் நடைபெற்று வருகின்றன. சேலம் மாவட்டம், அம்மாபேட்டை மருத்துவமனையில், செங்கல் மற்றும் பூச்சுப் பணி இரண்டாம் தளத்தில் நடைபெற்று வருகிறது. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், கட்டுமானப் பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் செங்கல் கட்டுமானம் ஐந்தாம் தளத்தில் நடைபெற்று வருகிறது.

பணிகள் பாதியில்
மதுரை இராஜாஜி மருத்துவமனையில், கட்டுமானப் பணிகளில் ஆறு தளங்கள் நிறைவு பெற்று விட்டன. அறுவை சிகிச்சை அரங்க கட்டுமானப் பணிகள் விரைவில் துவங்கப்பட வேண்டும். மருத்துவ வாயு குழாய் பதிக்கும் பணி ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமையின் நிதி உதவியின் மூலம் கட்டப்பட்டு வரும் ஏழு அரசு மருத்துவமனைகளிலும் விரைவாக கட்டுமானப் பணிகள் துவங்கப்பட வேண்டும்.

அமைச்சர் விதித்த கெடு
இதனிடையே இக்கட்டுமானப் பணிகளை எல்லாம் விரைவாக முடித்து பிப்ரவரி 2023க்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆணையிட்டார்.












Click it and Unblock the Notifications