என்னை விட ஜூனியராக இருப்பாரு.. ஆனாலும் அவர் ஆண் அமைச்சர் என்பதால் முதல் மரியாதை! கீதாஜீவன் வேதனை!
சென்னை: அரசு நிகழ்ச்சிகளில் ஆண் அமைச்சர்களுக்கே முதல் மரியாதை வழங்கப்படுவதாகவும் என்ன தான் சீனியர் அமைச்சர் என்றாலும் தாம் ஒரு பெண் என்பதால் இந்த நிலை இருப்பதாகவும் கீதா ஜீவன் வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னையில் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பேசிய அவர் இதனைக் கூறினார்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை முற்றிலும் ஒழித்துவிட்டோம் என இன்னும் கூற முடியாத நிலை தான் உள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

அமைச்சர் கீதாஜீவன்
கருணாநிதியின் முரட்டு பக்தர் என்றழைக்கப்பட்ட மறைந்த தூத்துக்குடி பெரியசாமியின் மகள் தான் சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன். தனது தந்தை எப்படி மனதில் தோன்றிய கருத்தை ஒளிவுமறைவின்றி பேசுவாரோ, அதேபோல் தான் அமைச்சர் கீதாஜீவனும் மனதில் தோன்றியதை மறைக்காமல் பேசும் வழக்கம் கொண்டவர். அதேபோல் மிகவும் யதார்த்தமாகவும் பேசக்கூடியவர்.

கல்லூரி விழா
இந்நிலையில் சென்னையில் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பேசிய அவர், தன்னை விட ஜூனியராக இருப்பினும் கூட ஆண் அமைச்சர் என்றால் அவரைத் தான் வாங்க சார் என முன்னுரிமை கொடுத்து அதிகாரிகள் அழைத்துச் செல்லும் வழக்கம் உள்ளதாகவும் சீனியர் அமைச்சர் என்றாலும் தாம் ஒரு பெண் என்பதால் இந்த நிலை இருப்பதாகவும் கூறியிருக்கிறார். தன்னை மதிக்கக்கூடாது என அவர்கள் நினைக்கவில்லை என்றும் ஆனாலும் சமூக கருத்தியல் அவ்வாறு உள்ளதாக சுட்டிக்காட்டினார்.

சமூக மாற்றம்
மேலும் சமூக மாற்றம் என்பது ஒவ்வொருவருடைய வீட்டில் இருந்தும் குழந்தைகள் வளர்ப்பு முறைகளில் இருந்தும் தொடங்க வேண்டும் என அமைச்சர் கீதா ஜீவன் கேட்டுக்கொண்டார். ஆண் பெண் வேறுபாடின்றி பிள்ளைகளை வளர்ப்பதோடு பெண்களை மதிக்க வேண்டும் என ஆண் பிள்ளைகளுக்கு பெற்றோர் சொல்லித் தர வேண்டும் எனவும் அமைச்சர் கீதா ஜீவன் பேசினார்.

பெண்களின் கைகள்
பெண்களின் கைகளில் கரண்டியை பிடுங்கிவிட்டு புத்தகங்களை கொடுக்கச் சொன்னவர் பெரியார் என்றும் வரலாறில் பெண்கள் புறம் தள்ளப்படும் நிலை இருப்பதாகவும் அவர் வேதனைத் தெரிவித்தார். அமைச்சர் கீதாஜீவனின் இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications