ஜெகதீஸ்வரி விட்ட டோஸ்.. ஆடிப்போன டாக்டர்ஸ்.. ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் தவெக அமைச்சர் சபாஷ்
சென்னை: ராஜபாளையம் அரசு மருத்துவமனை மற்றும் போக்குவரத்துப் பணிமனையில் சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது "கடந்த ஆட்சியைப் போல் அலட்சியப் போக்கு நீடித்தால், அமைச்சரின் கடுமையான முகத்தைப் பார்க்க வேண்டியிருக்கும்" என அதிகாரிகளுக்கு அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது மாவட்ட மக்களின் கவனத்தை பெற்று வருகிறது.
தீவிர அரசியலில் தடம் பதிப்பதற்கு முன்பாக மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட பத்திரிகையாளராகவும், செய்தி ஆசிரியராகவும் பணியாற்றிய 40 வயதான கே. ஜெகதீஸ்வரி, தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அக்கட்சியில் இணைந்தார்.

ராஜபாளையம் ஜெகதீஸ்வரி
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில், ராஜபாளையம் தொகுதியின் தவெக வேட்பாளராகக் களம் இறங்கி, அமோக வெற்றி பெற்று முதன்முறையாக சட்டசபைக்குள் நுழைந்துள்ளார்.. இப்போது சமூக நலத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்த நிலையில், ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனை மற்றும் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி, நேற்றைய தினம் திடீர் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனை
ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் ஆய்வு நடத்திய அமைச்சர் ஜெகதீஸ்வரி, அங்குள்ள நிலவரங்கள் குறித்து அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் உமா மகேஸ்வரியிடம் தனது பழைய கசப்பான அனுபவங்களை முன்வைத்து பேசினார்.
"நான் அமைச்சராவதற்கு முன்பாக இந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்தேன். அப்போது இங்கு நிலவிய சுகாதாரக் குறைபாடு, முறையற்ற கவனிப்பு, ஊழியர்களின் மோசமான அணுகுமுறைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டேன். இப்போது அதே இடத்திற்கு அமைச்சராக அதிகாரப்பூர்வமாக ஆய்வு செய்ய வந்துள்ளேன்.
தவெக ஆட்சியில் இனி அவ்வாறு பொதுமக்களுக்கு நடக்கக் கூடாது. மக்களின் குறைகளை உடனுக்குடன் கேட்டு தீர்க்க வேண்டும், மருத்துவமனையின் தேவைகள் குறித்து எனது கவனத்திற்கு கொண்டு வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்று மருத்துவர்களிடம் அறிவுறுத்தினார்.
போக்குவரத்து கழக பணிமனை
இதனைத் தொடர்ந்து, ராஜபாளையம் அரசு போக்குவரத்துக் கழக 1-வது பணிமனையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி தீவிர ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிமனை மேலாளர் பாலமுருகனிடம், "கடந்த ஆட்சியில் நடந்தது போல் இனி இங்கும் முறைகேடுகளோ, அலட்சியப்போக்கோ நடந்து கொள்ளக் கூடாது. இங்கு பணிபுரியும் டிரைவர்கள், கண்டக்டர்களிடம் சில அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக ஆதாரங்களுடன் எனக்குப் புகார்கள் வந்துள்ளன.
இதுகுறித்து ஏற்கனவே இருமுறை உங்களிடமும், உங்கள் மேல் அதிகாரியிடமும் அலைபேசியில் நேரடியாகப் பேசியுள்ளேன். அப்படியிருந்தும் பிரச்னைகள் தொடர்ந்தால், அமைச்சரின் கடுமையான முகத்தை நீங்கள் பார்க்க வேண்டியிருக்கும்" என்று மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்தார்.
அமைச்சரின் கடுமையான முகம்
அமைச்சரின் இந்த அதிரடிப் பேச்சு மற்றும் எச்சரிக்கை நடவடிக்கைகள் அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இணையவாசிகள் இதற்கு மிகவும் கலவையான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
தவெக அமைச்சரின் இந்த அதிரடி நடவடிக்கையை வரவேற்றுப் பாராட்டும் சிலர், "நீங்க மட்டுமல்ல அனைவருமே அரசு மருத்துவமனையில் அவதி பட்டுள்ளோம், உங்க ஆட்சியில் மருத்துவம் மற்றும் கல்வி இலவசமாக அளித்தால் போதும்" என்றும், "மக்களின் மக்களுக்கான அரசாக இருந்தால் போதும், வாழ்த்துக்கள்" என்றும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், அமைச்சரின் பேச்சுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கும் விமர்சகர்கள், "'அமைச்சரின் கடுமையான முகத்தை பார்க்க வேண்டி இருக்கும்' என்பது மிகவும் முதிர்ச்சியற்ற பேச்சு, ஆரம்பத்தில் எல்லாம் நல்லாத்தான் இருக்கும், போகப் போக இதுவும் முந்தைய ஆட்சிகள் போல மாறிவிடக் கூடாது" என்று தங்களது அதிருப்தியையும் பதிவிட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications